முற்போக்குச் சிந்தனையாளரான நல்லசிவத்தைத் தேடி அன்று காலை இருவர் வந்து, அவர் மகள் திருமண விஷயமாக ஓர் வரன் குறித்துப் பேச முற்பட்டபோது கறாராகச் சொல்லிவிட்டார்.
“என்னைப்பற்றி முழுமையாகத் தெரிந்தும் நீங்க எங்கிட்ட வந்து ஜாதகம், பொருத்தம்னு பேசறது வேடிக்கையாகத்தான் இருக்கு.”
“அது வந்துங்க…உங்க பெண் ஜாதகத்தோடு பையன் ஜாதகம் நல்லாப் பொருந்தியிருக்குன்னு…”
“சும்மா வளவளன்னு பேசிக்கிட்டிருக்காதீங்க. எனக்கு இந்த ஜாதகப் பொருத்தம், ஜாதி, மதம், குலம், கோத்திரம் இதெல்லாம் கட்டோடு பிடிக்காது. புதுமையா ஏதாவது செஞ்சு சரித்திரம் படைக்கணும்னு ஆசைப்படறேன். எங்கிட்ட மேற்கொண்டுப் பேசி புண்ணியமில்லை. இடத்தைக் காலி பண்ணுங்க!” எதிராளியைப் பேசவிடாமல் குறுக்கிட்டார் நல்லசிவம்.
நல்லசிவம் இந்த நூற்றாண்டில் ஒரு தனிப்பிறவி. மூடநம்பிக்கைகளை ஒழிப்பதில் தீவிரம் காட்டுபவர். ஆன்மீகம் பற்றிப் பேசுவதையும், அதில் அக்கறை காட்டுவதையும் வீண்வேலை என நினைப்பவர்.
மற்ற பெற்றோர்களிடமிருந்து தான் தனித்து நிற்க வேண்டும் என விரும்பும் ஓர் புதுமை விரும்பி. நாள், நட்சத்திரம், சகுனம், சம்பிரதாயங்கள் போன்றவைகளை எள்ளி நகையாடும் வினோதப் பிறவி.
ஒரே பெண்ணான நளினியை டாக்டராக உருவாக்கி அவளுக்காக நர்சிங்ஹோம் ஒன்றையும் கட்டிக் கொடுத்திருப்பவர்.
மகள் நளினியிடம் அவள் திருமணம் குறித்து நேரிடையாகப் பேசி, அவள் இஷ்டத்திற்குச் செயல்பட முழு சுதந்திரமும் அளித்துவிட்டார்.
சமூக நல சீர்திருத்தவாதி, சிறந்த மேடைப் பேச்சாளர், முற்போக்குக் கொள்கைச் சிங்கம் என்றெல்லாம் நிரம்பவே பெயர் எடுத்துவிட்டார்.
மகள் தேர்வு செய்யும் எந்த ஒரு இளைஞனாய் இருந்தாலும் அவள் விருப்பப்படித் திருமணம் செய்து வைக்க சம்மதித்திருந்தார்.
அவர் மனைவி கோமதிக்கு நல்லசிவத்தின் நடவடிக்கைகளில் இஷ்டமில்லைதான்.
அவருடைய கொள்கை, இலட்சியம், புதுமை, சீர்திருத்தம் போன்றவைகளை வெளி உலகத்தோடு வைத்துக் கொள்ளும்படியும், வீட்டைப் பொறுத்த மட்டில் ஒரு நல்ல பொறுப்புள்ள தகப்பனாக நடந்து கொள்ளும்படியும் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்து விட்டாள்.
கறார் பேர்விழி நல்லசிவத்திடம் கோமதியின் கெஞ்சல்கள் எடுபடவில்லை. நேராக மகள் நளினியிடம் வந்தாள்.
தந்தை நல்லசிவம் சொற்படி கேட்டு நடக்க விரும்பினால், அப்படி ஏதாவது காதல், கீதல் என இறங்கினால் தங்கள் ஜாதி, மதத்தைச் சேர்ந்த பையனையே தேர்வு செய்யச் சொல்லிக் கேட்டுக் கொண்டாள்.
இதையறிந்த நல்லசிவம் கொதித்தெழுந்தார். தன்னுடைய மேடைப் பிரசங்கம் ஊருக்கு மட்டும் உபதேசமாக அமையக் கூடிய ஓர் சூழ்நிலை உருவாக மனைவி முயற்சிப்பதை வன்மையாகக் கண்டித்தார்.
மருத்துவர்களின் மாநாடு ஒன்று சென்னையில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு ஒரு வாரத்திற்குப் பின் திரும்பிய நளினி, வந்ததும் வராததுமாய் தந்தை நல்லசிவத்தைத் தேடி வந்தாள்.
அவள் முகத்தில் ஒருவித பரபரப்பு தென்பட்டதைக் கண்ட நல்லசிவம் மகளிடம் கேட்டார்.
“என்னம்மா என்ன விஷயம்?”
“ம்…வந்துப்பா…நீங்க அடிக்கடிச் சொல்லுவீங்களே! அதுமாதிரி என் மனசுக்குப் பிடிச்ச ஒருத்தரைத் தேடிக்கிட்டேன்பா…”
“வெரிகுட்… நளினி! யார் அது சொல்லு. உடனே திருமணத்துக்கு ஏற்பாடு செய்யறேன்.”
“அவரும் என்னைப்போல டாக்டருதான். மாநாட்டுக்கு வந்திருந்த இடத்தில அவரோடு நெருங்கிப் பழக சந்தர்ப்பம் கிடைச்சு, ஒருத்தரையொருத்தர் விரும்பிட்டோம்”
“கவலைப்படாதே நளினி! ஜாம் ஜாம்னு கல்யாணத்தை முடிச்சிடலாம். பையன் நம்ம ஜாதி, மதம் இல்லையே?”
“என்னப்பா நீங்க? என்மீது உங்களுக்கு நம்பிக்கையே இல்லையா? உங்க கொள்கையை மீறி நடப்பேனா? அவருக்கு அப்பா, அம்மா கூட பொறந்தவங்க யாருமே இல்லை.
கிறிஸ்தவ ஆசிரமம் ஒன்றில் வளர்ந்து படித்து சென்னையிலேயே மிஷன் ஆஸ்பத்திரி ஒன்றில் டாக்டராயிருக்காருப்பா”
“நான் நினைச்ச மாதிரியே நடக்கப்போகுது நளினி. நான் விரும்பிய மாதிரியே மிகச்சிறந்த கலப்புத் திருமணமாக இது அமையும். பையனோட விலாசத்தைக் கொடு. போய்ப் பார்க்கிறேன்”
“அவர் உங்களைவிட ஒருபடி மேலே போயிட்டார்ப்பா. நம் திருமணம் வழக்கப்படி உற்றார், உறவினர், நண்பர்கள் முன்னிலையில் நடைபெறாமல் ரொம்ப சிம்பிளாக இருக்கணும்னு சொல்லி, சென்னையிலிருக்கும் அவரை வளர்த்து ஆளாக்கிய ஆசிரம ஃபாதரிடம் என்னைக் கூட்டிச் சென்று, அவரது முன்னிலையிலேயே கிறிஸ்தவ முறைப்படி என்னை திருமணம் செஞ்சுக்கிட்டார்ப்பா. உங்களுக்கு எந்த சிரமமும் வைக்கலை.”
எதிர்பாராத அதிர்ச்சி தூக்கச் சற்றே நிலைகுலைந்துபோன நல்லசிவம், உள்ளத்திலும், முகத்திலும் படர ஆரம்பித்த ஏமாற்றத்தைத் துடைத்தெறிய முயற்சித்தவராக வலிய புன்னகையை வரவழைத்துக் கொண்டார்.
“பலே! பலே!! எங்கேம்மா அவரு? மாப்பிள்ளை வரலியா?”
“கிளம்பற நேரத்துல ஓர் அவசர அறுவைச் சிகிச்சை கேஸ் வந்துட்டதுனால அதை முடிச்சிட்டு இரவு கிளம்பி ராக்ஃபோர்ட்ல வருவாருப்பா.”
மருமகன் தன் வகுப்பைச் சார்ந்தவரல்லாமலும், ஓர் கிருஸ்தவராகவும் இருப்பது நல்லசிவத்திற்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தந்தது.
தன் இலட்சியம், கொள்கையைத் தன் மகளே உதாரணமாகத் திகழ்ந்து காப்பாற்றி விட்டது சந்தோஷத்தைத் தந்தது அவருக்கு.
எல்லாவற்றையும் விட மருமகனின் கடமை உணர்வை எண்ணி மிக்கப் பெருமையடைந்தார்.
மிகப்பிரமண்டமான அளவில் திருமண வரவேற்பு நடத்தத் தீர்மானித்தார். நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் திருமண வரவேற்பு குறித்து தொலைபேசி மூலம் தெரிவித்து அவசர அழைப்பு விடுத்தார்.
தந்தையும் மகளும் சேர்ந்து கூத்தடிப்பதாகவே பட்டது கோமதிக்கு.
கணவர் நல்லசிவத்தின் போக்கு அவளுக்கு அறவே பிடிக்கவில்லை. மகள் நளினி மீது ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது.
எவ்வளவு சொல்லியும் கேளாமல் தான்தோன்றித்தனமாய் வேறொரு மத இளைஞனை திருமணம் செய்து கொண்டு வந்து நிற்பதைக் கண்டு மனம் புழுங்கினாள்.
நல்லசிவத்தின் குணம் அறிந்து விதியே என்று மௌனத்தைக் கடைப்பிடித்தாள்.
மறுநாள் காலை ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸில் வரவிருக்கும் மருமகனை வரவேற்க ஆளுயர ரோஜா மாலையுடன் நல்லசிவம் மனைவி, மகள் மற்றும் ஒருசில நண்பர்களுடன் ஸ்டேஷன் கிளம்பினார்.
அவர் முகத்தில் உற்சாகமும், ஆனந்தமும் கொப்பளித்தது. தன் குடும்பத்திலேயே அதுவும் தன் ஒரே மகளுக்குக் கலப்புத் திருமணம் நடந்தது பற்றி மட்டற்ற மகிழ்ச்சி நல்லசிவத்திற்கு.
மற்றவர்களுக்கு தானே முன்னுதாரணமாகத் திகழ்வது குறித்துப் பெருமை பிடிபடவில்லை அவருக்கு.
ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் பிளாட்பாரத்தில் நுழைந்து கொண்டிருந்தது.
முதல் வகுப்புப் பெட்டியின் வாசற்படியருகே நின்றுகொண்டு கையசைத்த ராபர்ட்டை நளினி கண்டு கொண்டு அவன் இருந்த பெட்டி நோக்கி ஓட, அனைவரும் அவளைப் பின்தொடர்ந்தனர்.
“ஹாய் நளினி!” என்றவாறே கம்பார்ட்மென்டிலிருந்து குதித்தான் ராபர்ட்.
“மீட் மை டாட், மம்மி!” என்றவாறே அவன் கையைப் பிடித்துக் கொண்டு தாய், தந்தை அருகில் நளினி வர, அவனைக் கண்ட நல்லசிவமும் கோமதியும் அதிர்ச்சியால் வாயடைத்துப் போய் நின்றார்கள்.
நல்லசிவத்திற்கு அதிர்ச்சியுடன் கூடிய பெருத்த ஏமாற்றம். அவர் மனைவி கோமதிக்கோ சந்தோஷத்துடன் கூடிய இன்ப அதிர்ச்சி.
இருபது ஆண்டுகளுக்கு முன் திருப்பதிக்குக் குடும்பத்துடன் காரில் சென்ற கோமதியின் அண்ணன் குடும்பத்தினர் விபத்துக்குள்ளாகி ஸ்தலத்திலேயே மாண்டதும், அவர்களது பதினைந்து வயது ஒரே மகன் கார்த்திக் மட்டும் பிழைத்துக் கொண்டதும் அவர்கள் ஞாபகத்திற்கு வந்தன.
அனாதையாகிவிட்ட கார்த்திக் விரக்தியில் சொத்து, சுகம் அனைத்தையும் துறந்து கிறிஸ்தவனாக மாறி, கிறிஸ்தவ ஆசிரமம் ஒன்றில் சேர்ந்து விட்டதாகப் பின்னர் தகவல் கிடைத்ததுதான் தெரியும். சொத்துக்கள் அனைத்தும் ஆசிரமத்திற்கு போய்விட்டதாகவும் தகவல் கிடைத்திருந்தது. நளினிக்கு அப்போது ஐந்து வயது.
தங்கள் எதிரில் நிற்கும் ராபர்ட் அதே கார்த்திக்தான் என்பது நல்லசிவத்திற்கும், கோமதிக்கும் நொடியில் புரிந்து போயிற்று. கோமதியின் அண்ணனை அப்படியே உரித்து வைத்தாற்போன்ற முகச் சாயல்!
‘கார்த்திக்’ என்கிற ராபர்ட் தன் சொந்த அண்ணன் மகன் என்பதைக் கண்டு கொண்ட கோமதிக்கு உள்ளம் முழுக்க மகிழ்ச்சிப் பிரவாகம்! நல்லசிவம் பேயறைந்தாற் போல் காணப்பட்டார்.
என்னதான் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து வேற்றுமதக்காரனாய் இருந்தாலும், தன் கொள்கை, லட்சியத்திற்கு எதிர்மாறாக தன் மனைவியின் அண்ணன் மகனையே மருமகனாக ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலையில் தான் இருப்பதை நினைக்கையில் நல்லசிவத்திற்கு மனம் வலித்தது.
‘நல்லசிவத்தின் மேடைப்பிரசங்கம் எல்லாம் ஊருக்குத்தான்யா. மச்சான் மகன் டாக்டர்னு தெரிஞ்சதும் உறவு விட்டுப் போகாமலிருக்க அவனை இழுத்துப் போட்டு மருமகனாக ஆக்கிவிட்டார் பார்த்தீர்களா?’ என்றெல்லாம் ஒவ்வொருவரும் அவரைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பதாய் தோன்றியது.
நல்லசிவம் நளினியின் கலப்புத்திருமணம் கண்டு மகிழ்ந்திருந்த வேளையில், அவர் மனைவி கோமதி அதைக் கசப்புத் திருமணமாக நினைத்து வேதனையுற, இப்போதோ நல்லசிவம் மனைவி கோமதிக்கு நளினியின் திருமணம் இனிய மணமாகத் தோன்ற நல்லசிவத்திற்கோ அது கசப்புத் திருமணம் என்றே தோன்றியது.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998