என் உள்ளம் கவர்ந்த கவிஞர் – பாரதி

எட்டையபுரத்தில் பிறந்த
எரிமலைக் குழம்பு

முற்போக்கு சிந்தனையின்
மூத்த கவிஞன்

மனிதச்சுரண்டலுக்கு
மத்தடி கொடுத்த மாவீரன்

அறிவுச்சுரண்டல் கண்டு
ஆர்ப்பரித்த சிங்கம்

மீசைக்கவிஞனின்
மிடுக்கு நடையில்
மிரண்டவர் பலகோடி
அரண்டவர் பலகோடி

பாரதி
சாத்திரத்தை மூட்டைகட்டி
சந்தியில் எரித்தவன்

மூடப்பழக்கத்தின்
முழிகளைப் பிடுங்கியவன்

பாதகம் செய்வோரை
மோதி மிதித்தவன்

இளைய பாரதத்தை
எழுச்சி ஞாயிறாய்
எழுந்து வரச் செய்தவன்

பாரதியின் புரட்சிப் பாட்டில்
புற்றீசல் கூட
புதுவீரம் பெற்று விடும்!

விரல்களின் நகம் கூட
வித்தகக் கவிதையினை
விதைத்தெழும் வீரியமாய்!

“காக்கைச் சிறகினிலே “
எழுதிய கவிதை
ஏடுகளை மட்டுமன்றி
பூக்களையும் புயலாக்கும்!

முண்டாசுக் கவிஞனின் முத்திரையில்
பாரதம் பதக்கம் மாட்டிக் கொண்டது !

பாரதி –
தமிழ் ழூச்சை
தாயாகக்கொண்டதினால்
தேச மூச்சை
தெய்வமாய் நினைத்தவன்!

பாரதி –
தமிழ் என்ற
மூன்றெழுத்தில்
மூச்சை அடக்கினாய்!

நீ மட்டுமா … நானும்தான் ….!

உன் பெயரில் ……
பா….ர…..தி…..

சிந்தனைக்கவிஞர்
பறம்பு இராம. நடராசன்
கைபேசி: 9842081187

One Reply to “என் உள்ளம் கவர்ந்த கவிஞர் – பாரதி”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.