நேபாள தலைநகரம் ‘காட்மண்டு’ பதினேழாம் நூற்றாண்டு வரை ‘காந்திபூர்’ என்றே அழைக்கப்பட்டது.
கி.பி.723-ல் ‘ராஜாகுண்காம தேவர்’ என்பவரால் தோற்றுவிக்கப்பட்டு ஓர் புராதன யாத்ரீக ஸ்தலமாகவும், இந்தியா, திபெத், சீனா ஆகிய நாடுகளுக்கிடையே வர்த்தக வழித்தடமாகவும் ‘காட்மண்டு’ இருந்து வந்தது.
‘காஸ்தா-மண்டப’ என்னும் சமஸ்கிருதச் சொல்லிருந்து மருவி வந்த பெயர்தான் ‘காட்மண்டு’. ‘மரக்கோயில்’ என்பது இதன் பொருள்.
பதினாறாம் நூற்றாண்டில் ராஜாலட்சுமி நரசிங்றாமல்லா-வினால் கட்டப்பட்ட இக்கோயில் ஒரே மரத்தினால் செய்யப்பட்டதாம். இக்கோயில் இன்றும் நகரத்தின் நடுவே தற்போதைய அரசால் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு சரித்திரப் புகழ் வாய்ந்த ஓர் கோயிலாக விளங்குகிறது.
சுமார் ஐந்து லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட மிகப்பெரிய நகரம் ‘காட்மண்டு’.
மிகப்பெரிய இந்து கோயில்கள், புத்த ஆலயங்கள், பல்கலைக்கழகம், நவீன கட்டிடங்கள், அகலமான வீதிகளைக் கொண்டுள்ள மிகஅழகிய நகரம். இன்று நேபாள நாட்டின் மிக பெரிய வியாபார ஸ்தலமாக ‘காட்மண்டு’ நகரம் இருந்து வருகிறது.
காட்மண்டு குளிர்காலங்களில்கூட வெதுவெதுப்பான சீதோஷ்ண நிலையையே பெற்றிருக்கும் ஓர் நகரம். இதைச் சுற்றியுள்ள மலைகள் குளிர்காற்று நகரத்திற்குள் செல்ல முடியாதபடி தடுத்து நிறுத்தி விடுகின்றன.
கோடைகாலத்தில் வெப்பமானது 90 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டுவதில்லை. வருடம் முழுக்க இதமான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. மழையின் அளவு ஆண்டுக்கு 50 முதல் 60 அங்குலமாக இருக்கிறது.
பாக்மதி ஆற்றினருகே காணப்படும் பசுபதிநாத் கோயில் 4-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. எட்டாம் நூற்றாண்டில் இக்கோயில் ஸ்ரீ சங்கராச்சரியரால் புதுப்பிக்கப்பட்டதாம். கிபி 1697-ல் மன்னர் ‘பூபால்சிங் மல்லா’ கரையான்களால் அரிக்கப்பட்டிருந்த இக்கோயிலை மீண்டும் கட்டினார்.
இக்கோயிலில் மகா சிவராத்திரி விசேஷமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை புரிகிறார்கள்.
இக்கோயிலுள்ள நான்கு பூசாரிகளும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள். முக்கியமாக கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
காட்மண்டு அருகே உள்ள ஓர் சிறிய குன்றின் மேல் அமையப் பெற்றிருக்கும் சுயம்புநாத் கோயில் முந்தைய காலங்களில் புத்த மதத்தினரின் கோயிலாக இருந்ததாம்.
அமைதியின் வடிவமாகத் தோற்றமளித்த மிகப்பெரிய புத்தர்சிலை பக்தர்களை வெகுவாகக் கவர்ந்திழுத்து 350 படிக்கட்டுகளைத் தாண்டி அவர்களை வரவழைக்குமாம்.
காட்மண்டிலுள்ள தர்பார் சதுக்கத்தின் (Durbar Square) அருகில் கன்னியாகுமரி கோயில் ஒன்று உள்ளது.
கன்னி ஸ்தீரி ஒருவர் இப்பகுதியிலுள்ள கன்னிப்பெண்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவரது 12-வது வயது வரை கடவுளாகப் பாவிக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகிறார். இப்பெண்ணை கோயிலிலுள்ள ரதம் ஒன்றில் அமரச் செய்து வீதிகளில் இழுத்து வருகின்றனர்.
காட்மண்டு நகரின் புறநகர்ப்பகுதியில் ‘போத்நாத்’ ஸ்தூபி ஒன்று நான்கு ஜோடிக் கண்களுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.
மக்களின் நடவடிக்கைகள் மிகச் சரியான வழியில் இருக்கிறதா என்பதைக் கண்காணிப்பதாகவும், அவர்களின் வாழ்க்கை விருத்தியடைய பாதுகாப்பாக இருப்பதாகவும், இந்த ஸ்தூபியைப் பற்றி சொல்கின்றனர்.
காட்மண்டிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் ‘புத்தா நெல்ல காந்த்’ என்னுமிடத்தில் செயற்கைமுறையில் அமைக்கப்பட்டிருக்கும் ஏரியில் 18 அடி நீளத்தில் கல்லினாலான விஷ்ணுவின் சிலை ஒன்று சயனத்தில் இருக்கின்றார் போல் அமைக்கப்பட்டிருக்கிறது.
1903-ல் கட்டப்பட்ட ‘சிங்க தர்பார்’ அரண்மனை, முன்பு நேபாள பிரதமர் ராணாவின் இல்லமாக இருந்தது. தற்சமயம் இந்த அரண்மனை நேபாள அரசு அலுவலமாகச் செயல்பட்டு வருகிறது.
இந்த அரண்மனையில் 1600 அறைகளும், 7 முற்றங்களும் உள்ளன. இந்த அரண்மனையிலுள்ள தர்பார் அறை மிக அழகாக, அதிக பொருட்செலவில் அலங்கரிக்கபட்டிருக்கிறது. நேபாள கட்டிடக்கலை நிபுணர்களின் திறமைக்கு, கட்டிடக்கலை நுணக்கத்திற்கு இந்த அரண்மனை ஓர் சான்று.
நேபாள மன்னரின் மகத்துவம் வாய்ந்த ‘நாராயண்ஹிந்தி’ அரண்மனை இங்குதான் உள்ளது. ‘தலேஜூ பகோடா’ என்னும் மிக அழகான ஆலயம் ஒன்றும் இங்கு உள்ளது. அரசு பரம்பரையில் வந்த ஓர் குடும்பத்திற்கு சொந்தமானது இந்த ஆலயம்.
காட்மண்டிலுள்ள ‘நரதேவி கோயில்’ பிரசித்திப் பெற்றது.
நரலோகம், பூலோகம், சொர்க்கலோகம் ஆகியவைகளைக் குறிக்கும் வகையில் இக்கோயில் மூன்று கூரைகளுடன் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம்.
நேபாள அரும் பொருட்காட்சியகத்தில் 1880-ல் நடைபெற்ற திபெத் யுத்தத்தில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள், நெப்போலியன் போனபர்ட்ஸின் வாள், யுத்தங்களில் பெறப்பட்ட பரிசுகள், வெற்றிச் சின்னங்கள் போன்றவைகள் காணப்படுகின்றன.
இங்கு ஒவ்வொரு வருடமும் துர்கா பூஜையும், தீபாவளியும் கோலாகலமாக மிக்க மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகின்றன.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998