காணாமல் போகும் தத்துவங்களும் கானல் நீரான தத்துவவாதிகளும் – I

வாழ்க்கையின் நோக்கத்தை, நடைமுறை யதார்த்தங்களின் அடிப்படையில், ஆழமான புரிதலோடு அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழர்களுக்கும் உண்டு.

உடல் திடகாத்திரத்தோடும் உள்ள பக்குவத்தோடும் அடுத்தடுத்த தலைமுறைகளை கட்டமைக்க வேண்டிய பொறுப்புகளை மேற்கொண்டதால், வாழ்க்கையின் நோக்கத்தை அடைவதிலும் இலக்கை நோக்கிய பயணத்திலும் நம் முன்னோர்கள் எங்கும் பிசகியதில்லை.

என்று உரத்து பேசுகின்ற, அறிவையும் அறிவியலையும் மட்டுமே மையப்படுத்தி நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற 21ம் நூற்றாண்டின் செல்ல பிள்ளைகளுக்கு, தமிழர்களின் பாரம்பரிய, கலாச்சார வாழ்வியல் முறைகளை சொல்லிக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் மூத்த பெருமக்களுக்கு உண்டு.

வளர்ந்து வரும் தலைமுறையினர் வாழ்க்கையின் தத்துவங்களைச் சரியான கோணத்தில் புரிந்து கொள்ளாத காரணத்தால், அவர்கள் வாழும் வாழ்க்கை கசப்பாக மாறுகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

அழகானதொரு வாழ்க்கையையும் அதை வாழும் விதங்களையும் முறைகளையும் அசாதாரணமாக எடுத்துக் கொண்டு, வாழ்க்கையின் அர்த்தமும் அதன் அந்தரங்கமும் புரியாமல் இருக்கிறார்கள்.

என்ற புரிதல் இல்லாமல், மாலுமி இல்லாத கப்பலை போல் தத்துவங்கள் இல்லாத வாழ்க்கையாக அவர்கள் வாழ்க்கை வலம் வருகிறது.

ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள்?

இவர்கள் நோக்கமில்லாத, தத்துவங்கள் நிறையாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதுதான் காரணம்.

நமது முன்னோர்களின் வாழ்க்கை முறைகள் தத்துவங்களின் அடிப்படையில் தான் அமைந்திருந்தன.

சகோதரத்துவம், ஒற்றுமை, அன்பு, பாசம், கொடை போன்ற அனைத்து நல்ல செயல்பாடுகளின் பின்னணியில் நமக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ தத்துவங்கள் மறைந்து இருக்கின்றன.

கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கையின் தத்துவங்களை, அடுத்த தலைமுறையினரின் மனதில் நிலை நிறுத்தி, வாழுகின்ற வாழ்க்கையை வசப்படுத்தி, நல்லதொரு வாழ்க்கையாக வாழ வைக்கும் முயற்சியே இந்த தொடர் கட்டுரையின் நோக்கம்.

வாழ்க்கையின் நோக்கம் என்ன?

நாம் மகிழ்வோடு நன்றாக இருந்து, நம்மை சுற்றி இருப்பவர்களையும் மன மகிழ்வோடு வைப்பது தான் வாழ்க்கையின் தத்துவங்களில் முதலாவது.

வாழ்க்கையை மகிழ்வோடு வாழ வேண்டும் என்பதற்குத்தான் கல்வி, வேலை, திருமணம் போன்ற காரணிகள்.

அந்த காரணிகள் மாறத் தொடங்கிய போது, நாம் பயணிக்கும் திசைகளும் மாறத் தொடங்கி விட்டன.

நோக்கம் மாறிய திருமண முறை

திருமண அழைப்பிதழ்களில் நேரம் குறித்து, அந்த நாளில் அந்த நேரத்தில் வந்து விடுகிறேன் என்ற சம்மதத்தை கொடுத்து விட்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள் திருமணத்திற்கு சென்று, மணமக்களை வாழ்த்தி, வாக்கும் வாழ்க்கையும் ஒன்று என்பதை நடைமுறைப்படுத்திய கால சூழல் முந்தைய நாட்களில் இருந்தது.

இன்று நாம் எதற்காக திருமணத்திற்கு செல்கிறோம்?

எத்தனை மணிக்கு செல்கிறோம்?

என்ற அவரவர் விருப்பம் சார்ந்த பதில்களில் இருந்து நாம் நோக்கம் மாறி செல்கிறோம் என்பதை ஓரளவிற்கு புரிய முடிகிறது.

கணவன் – மனைவி பந்தம் ஏற்படுத்துகின்ற உன்னத முறையான திருமண விழா குடும்ப உறவுகளோடும் நண்பர்களோடும் மன மகிழ்ந்து அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

ஆன்மீக உறவின் துவக்கமாய் இறைவனின் ஆசிகளை பெற கோயில்களிலும் மசூதிகளிலும் சர்ச்சுகளிலும் திருமணம் நடைபெற்றது.

மணமக்களை வாழ்த்த வருகை தரும் அந்த பெருமக்களுக்கு அகம் மகிழ்ந்து மனதார விருந்தோம்பல் நடைபெற்றது அன்று.

நாம் கஷ்டப்பட்டு பணம் சம்பாதிப்பது மனைவி மக்களுக்கு தான்.

ஆனால் நமது குடும்ப உறவுகளில் மன மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் இருக்கிறோமா?

என்றாவது ஒருநாள் நமக்குள் இந்தக் கேள்வி எழும்போது தான், நாம் எதற்கு சம்பாதிக்கிறோம்? என்ற உண்மையும் நமக்கு புரிய வருகிறது.

இரண்டு மூன்று குழந்தைகளை பெற்றெடுத்து, அவர்களை வளர்த்து ஆளாக்குவதற்கு நாம் படுகின்ற கஷ்டங்களை நினைக்கும் போது, நாம் எதை இழந்திருக்கிறோம் என்பது ஓரளவுக்கு புரிகிறது.

[அடுத்த வாரம் சந்திப்போம்]

முனைவர் மு. பக்கீர் இஸ்மாயில்
இணை பேராசிரியர், பொருளாதார துறை
புதுக்கல்லூரி, சென்னை – 600 014
+91 96000 94408