காரட் வெங்காய தோசை என்பது அசத்தலான சுவையில் ஆரோக்கியமான உணவு ஆகும். இதனை செய்வது எளிது.
இத்தோசைக்கு தனியாக தொட்டுக் கொள்ள சட்னியோ சாம்பாரோ தேவையில்லை. ஆனால் சட்னி, சாம்பாருடன் சுவைக்கும் போது அருமையாக இருக்கும்.
இதற்கு சாதாரண தோசை மாவே போதுமானது. ஆனால் கோதுமை மாவுடனும் சேர்த்து இதனைத் தயார் செய்யலாம்.
இனி சுவையான காரட் வெங்காய தோசை செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தோசை மாவு – 1 கப் (6 தோசை ஊற்றும் அளவுக்கு)
காரட் – 2 எண்ணம் (பெரியது)
பெரிய வெங்காயம் – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)
மல்லி இலை – 3 கொத்து
சீரகம் – 3 டீஸ்பூன்
நல்ல எண்ணெய் – 6 ஸ்பூன்
செய்முறை
பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி மிகவும் சிறிய சதுரத்துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
காரட்டைக் கழுவி பொடியாக துருவியில் துருவிக் கொள்ளவும்.
மல்லி இலையை அலசி பொடியாக வெட்டிக் கொள்ளவும்.
தோசை கல்லினை அடுப்பில் வைத்து காய்ந்ததும் தோசை மாவினை எடுத்து மெல்லிய தோசையாக வார்க்கவும்.
அடுப்பினை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும்.
தோசை மாவின் மீது தேவையான அளவு நறுக்கிய பெரிய வெங்காயத்தை பரவலாகத் தூவி விடவும்.
அதன்மீது சிறிதளவு சீரகத்தை தூவி விடவும்.
பின் அதன்மீது தேவையான காரட் துருவலை பரவலாக தோசை மாவு முழுவதும் தூவி விடவும்.
பின்னர் நறுக்கிய கொத்தமல்லி இலையை தோசை முழுவதும் பரவலாகத் தூவி விடவும்.
நல்ல எண்ணெயை தோசையின் வெளிப்பகுதியினைச் சுற்றியும் தோசையின் நடுப்பகுதியிலும் ஊற்றி விடவும்.
பின்னர் தோசைக் கரண்டினை வைத்து வெங்காயம், காரட், கொத்தமல்லி இலையை தோசை மாவில் பதியுமாறு அழுத்தி விடவும்.
தோசை மாவு சிவந்ததும் மடக்கி எடுத்து விடவும்.
தேவைப்பட்டால் தோசையைத் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்கவும்.
குறிப்பாக வெங்காயம் கண்ணாடி பதம் வரையிலும் வெந்திருந்தால் தோசையை உண்ணும்போது சுவை அள்ளும்.
சுவையான கேரட் வெங்காய தோசை தயார்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் பச்சை மிளகாயை சிறுதுண்டுகளாக்கி தோசை மாவின் மீது தூவிக் கொள்ளலாம்.
விருப்பமுள்ளவர்கள் தக்காளி மற்றும் வெள்ளைப்பூண்டினை விழுதாக்கி தோசை மாவு மீது தடவி அதன் மேல் வெங்காயம், கேரட், மல்லி இலையை தூவி தோசை வார்க்கலாம்.
விருப்பமுள்ளவர்கள் நல்ல எண்ணெய்க்குப் பதிலாக நெய் ஊற்றி தோசை வார்க்கலாம்.