முத்து மேஜருக்கு வயது 58. இன்னும் இரண்டு வருடத்தில் ரிட்டயர்மென்ட்.
முத்து மேஜர் கிடையாது. பட்டாளத்தில் சாதாரண சிப்பாய்தான். அந்த காலத்தில் எதுவும் பெரிதாய் படிக்கவில்லை, துறை ரீதியான தேர்வும் எழுதவில்லை என்பதால் சிப்பாயாகவே காலம் தள்ளி விட்டார்.
ஆனால் 35 வருட அனுபவம். எத்தனையோ குண்டு வெடிப்புகள், தீவிரவாதிகளுடன் மோதல் என்று முத்து பார்க்காத பிரளயம் இல்லை; உடல் முழுவதும் ஏகப்பட்ட தழும்புகள்.
முத்து துப்பாக்கி சுடுவதில் வல்லவர். கிலோ கணக்கில் பதக்கங்களை வைத்திருப்பவர் அதனால் அவரை எல்லோரும் ‘மேஜர்’ என்று அழைக்கிறார்கள். அதிகாரிகளுக்கும் அவர் மீது தனிப்பட்ட மரியாதை உண்டு.
முத்து மேஜருக்கு சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான்; மூன்று மகள்கள். மனைவி காமாட்சி கடும் விவசாய உழைப்பாளி. 12 ஏக்கர் விவசாய நிலத்தையும் காமாட்சிதான் கவனித்து வருகிறாள்.
அதிலிருந்து வந்த வருமானத்திலும் இந்த பட்டாளத்தில் வாங்கும் மாத சம்பளத்திலும் சிறுக சிறுக சேமித்துதான் முத்து மேஜர் வீடு கட்டினார்.
இரண்டு மூத்த மகள்களுக்கும் தலா முப்பது பவுன் போட்டு ‘ஜாம் ஜாம்’ என்று திருமணம் செய்தார். கடைக்குட்டி பெண் மல்லிகாவை படிக்க வைத்தார்.
முத்து மேஜருக்கு கடைக்குட்டி மல்லிகா ஏக செல்லம். மல்லிகாவிற்கு அப்பாதான் உயிர், உலகம் எல்லாம்.
திருமணமாகி போன இரண்டு பெண்களும் தேவை என்றால் தான் வருவார்கள். மற்றபடி எதையும் கண்டு கொள்வதில்லை. மல்லிகாதான் எல்லா பொறுப்புகளையும் சுமந்து வீட்டை நிர்வகித்து வருகிறாள். கொஞ்சம் அடாவடி பேர்வழி தான்.
மல்லிகாவுக்கு அப்பாவை தவிர வேறு எந்த ஆண் மீதும் ஈர்ப்போ, மரியாதையோ ஏற்பட்டதில்லை. ஆனால் வலங்கைமான் மாட்டாஸ்பத்திரி டாக்டர் சங்கரனை ரொம்பவும் பிடித்து விட்டது.
ஒருநாள் தன்னுடைய சினை மாட்டை தண்ணி லாரிக்காரன் இடித்து குற்றுயிரும் கொலையுயிறுமாய் போட்டு விட, மல்லிகா அழுது புரண்டு சங்கரனை வீட்டுக்கு கூட்டி வந்தாள்.
சங்கரன் படாதபாடுபட்டு அந்த மாட்டை ஏதேதோ சிகிச்சைகள் எல்லாம் செய்து உயிர்ப்பித்தான்.
மாடு கொஞ்சம் கொஞ்சமாக தேறியது. உள்ளே உள்ள கன்று குட்டிக்கும் எந்த சேதாரமும் இல்லாமல் ஒருநாள் பிரசவித்தது.
இந்த ஆறு மாத கால சிகிச்சையில் சங்கரன் மல்லிகா வீட்டிற்கு தினமும் வந்து போனான். சங்கரனுடன் ஒரு கம்பவுண்டர் போல் மல்லிகா துணை நின்று மாட்டிற்கு இருவரும் வைத்தியம் பார்த்தார்கள்.
சங்கரன் தீவிரமாய் மாட்டுக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கும்போது மல்லிகா அவனை உற்று கவனிக்க ஆரம்பித்த்தாள்.
சங்கரன் நல்ல உயரம், நெற்றி மறைக்கும் கேசம், அப்பாவைப் போல் அடர்ந்த புருவம், அப்பாவைப் போலவே மிகுந்த நிதானம். ஆனால் சங்கரன் மிகக்கூச்ச சுபாவம் கொண்டவனாக மிக மென்மையானவனாகவும் இருந்தான்.
அவன் மாட்டை ஒரு குழந்தையை கையாள்வது போல கையாண்டு வைத்தியம் பார்த்தது மல்லிகாவை ரொம்பவும் ஈர்த்தது.
மல்லிகாவிற்கு அவனை ஒரு வேற்று ஆளாகவே நினைக்கத் தோன்றவில்லை. ‘அவன் எப்போது வீட்டுக்கு வருவான்?’ என்று ஏங்க ஆரம்பித்தாள்.
மல்லிகாவின் துணிச்சல், அதே சமயம் ஒரு வாயில்லா ஜீவனுக்காக வருந்தி அழும் குழந்தை மனம், துள்ளல் நடை, காற்றில் பறக்கும் கூந்தல், காதல் சொல்லும் கண்கள் என அவனுக்கும் மல்லிகாவை ரொம்ப பிடித்திருந்தது.
சங்கரனுக்கும் மல்லிகாவை பார்க்காமல் இருக்க முடியவில்லை. நாள் தவறாமல் வந்து சென்றான்.
அவன் ஒருசமயம் வேலை நிமித்தமாக வரவில்லையென்றால் மல்லிகாவே மாடு, கன்றுக்குட்டி என்று ஏதாவது சாக்கு போக்கு சொல்லி ஆஸ்பத்திரிக்கு போய் அவனை பார்த்து வருவாள்.
சங்கரனும் மல்லிகாவும் வெளிப்படையாய் சொல்லிக் கொள்ளவில்லை என்றாலும் இவர்களின் காதல் வலங்கைமான் முழுவதும் கசிந்தது.
இவர்கள் காதலை ‘ப்ரொபோஸ்’ செய்தது கூட அலாதியானதுதான்.
ஒருநாள் மாட்டுத் தொழுவத்தில் கை மாட்டிக் கொண்டு, விரல் நகம் அடிபட்டு ரத்தம் வர சங்கரனிடம் ஓடினாள்.
சங்கரன் பதறிப் போய் அவள் கைகளை பிடித்து விரல்களை ஒன்றாய் பூவிதழ்களை நீவுவது போல் துடைத்து ரத்தம் வந்த இடத்தில் மருந்து தடவிக் கட்டு போட்டான்.
அவளுக்கு எந்த வலியும் வேதனையும் தெரியவில்லை. ஏகாந்தத்தில் லயித்துக் கிடந்தாள்.
சங்கரனையே உற்று பார்த்துக் கொண்டிருந்தாள். ‘இவன் தான் எனக்கானவன்’ என்று உறுதி செய்தாள்.
யாரும் பார்க்காத போது அவனே எதிர்பார்க்காத நேரம் அவன் கன்னத்தில் சற்றென்று அழுத்தி முத்தமிட்டு ஓடி வந்து விட்டாள்.
அப்பாவிற்கு அடுத்தபடியாக வேறொரு ஆண்மகனுக்கு முதன்முதலாய் இவள் முத்தமிட்டாள். நெஞ்சு படபடத்தது.
சங்கரனும் தன் அம்மாவிற்கு அடுத்தபடியாக பிடித்த ஒரு பெண்ணிடமிருந்து முதன்முதலாய் ஒரு முத்தத்தை வாங்கி உறைந்து போய்க் கிடந்தான்.
இவர்களின் காதல் வெள்ளத்தால் வலங்கைமான் மாட்டாஸ்பத்திரி முழுவதும் மூழ்கியது.
மொத்த மேகங்களும் முழு நிலவும் இவர்களையே வட்டமடித்தது. எழுதாத சட்டத்தில் இருவரும் மனதளவில் கணவனும் மனைவியுமாய் ஆனார்கள்.
மல்லிகா அம்மாவிடம் சங்கரனை காதலிப்பதாக சொன்னாள். காமாட்சி, முத்து மேஜருக்கு தகவலை அனுப்பினாள். முத்து மேஜர் கொண்டாட்டத்தில் திளைத்தார்.
சங்கரன் வீட்டில் போய் முறைப்படி மாப்பிள்ளை கேட்டார்கள். அங்கு இவர்கள் காதலுக்கும் பெரிதாய் எதிர்ப்பு இல்லை. ஆனால் அவர்கள் சொன்ன வரதட்சணை கணக்கு சுமார் இரண்டு கோடியை தொட்டது.
‘இந்த வரதட்சணை விவரத்தை மல்லிகா சங்கரனுக்கு சொல்லக் கூடாது’ என்னும் வாக்குறுதி வாங்கிக் கொண்டார்கள்.
அக்கவுண்டில் அந்த மாத சம்பளத்தின் மீதி ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. முத்து மேஜர் கவலையில் மூழ்கினார்.
‘என்ன விலை கொடுத்தாவது தன் செல்ல மகளின் காதலை நிறைவேற்றி அவள் கல்யாணத்தை நடத்த வேண்டும்’ என்று தவியாய்த் தவித்தார்.
இரண்டு கோடி புரட்டுவது ரொம்ப கடினம். இருந்த பணத்தை எல்லாம் மூத்த மகள்கள் திருமணத்தில் செலவழித்து விட்டார்.
‘இளைய மகள் திருமணத்தை நாங்கள் பார்த்துக் கொள்வோம்’ என்று வாக்குறுதி அளித்த மருமகன்களும் மகள்களும் அதற்கப்புறம் அதை மறந்து விட்டார்கள். அது மட்டுமில்லாமல் இன்னமும் எதிர்பார்க்கிறார்கள் .
முத்து மேஜர் பட்டாளம் திரும்பினார். சதா மகள் திருமணத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தார்.
‘தன் பெண்ணின் காதலை ஒரு துளி கூட சீர்குலைக்க விரும்பாத முத்துவும் காமாட்சியும் தங்கள் பூர்வீக நிலமான 12 ஏக்கரையும் விற்க முடிவெடுத்தார்கள்.
யாரும் எதிர்பாரத விதமாய் திருமணமாகி போன இரண்டு பெண்களும் அவர்கள் கணவன்மார்களும் குறுக்கே வந்தார்கள். முட்டுக்கட்டையாய் நின்றார்கள். அந்த சொத்தில் பங்கு கேட்டார்கள்.
‘இவளுக்கு மட்டும் என்ன கவர்மெண்ட் மாப்பிள்ளை?
இவளையும் ஒரு சாதாரண பையனைப் பார்த்து கல்யாணம் கட்டிக் கொடுக்க வேண்டியது தானே?’
என்றெல்லாம் வாத விவாதமும் சண்டையும் குழப்பமும் ஏற்பட்டது.
சங்கரனுக்கும் மல்லிகாவிற்கும் விஷயம் தெரிந்தது.
சங்கரன் “என் வீட்டில் நான் பேசுகிறேன். அதுவரை எல்லாம் அமைதியாக இருக்க வேண்டும்” என்று மல்லிகாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
சொத்து வாங்க வந்தவனிடம் வீட்டு வாசலில் வைத்து இரு பெண்களும் மருமகன்களும் மறியல் செய்து சண்டையிட்டார்கள். யாரும் சொத்தை வாங்க விடாமல் தடுத்தார்கள்.
சங்கரன் அப்பா அம்மாவிற்கு தகவல் போனது.
சங்கரன் வீட்டில் இருந்து போன் செய்து இந்த திருமணத்தை கைவிட்டு விடலாம் என்று முத்து மேஜருக்கு அதிர்ச்சி கொடுத்தார்கள்.
காமாட்சி அழுது புலம்பினாள்.
‘மகளின் திருமணத்தை அவள் ஆசைப்பட்டபடி நடத்த முடியவில்லையே’ என இரவு முழுவதும் தூக்கம் அற்று, குழம்பி, உழன்று அதிகாலை நாலரை மணிக்கு தன் துப்பாக்கியைத் தொண்டையில் வைத்து அழுத்தி சுட்டுக் கொண்டு மாண்டு போனார் அவர்.
35 ஆண்டு காலம் எதிரிகளால் கூட நெருங்க முடியாத முத்து மேஜரை சொந்த பிரச்சனை கொன்றது.
மொத்தப் போர்ப்படையும் அதிர்ந்தது. தேசிய கொடி போர்த்திய முத்து மேஜரின் சடலம் வலங்கைமான் வந்தது.
காமாட்சி மயக்கமடைந்து விழுந்தாள். மொத்த வலங்கைமானும் சோகத்தில் திரண்டது.
‘சங்கரன் மல்லிகா காதல்; அதனால் ஏற்பட்ட மோதல்’ என ஊர் பேசியது.
‘தனது உயிருக்கு உயிரான அப்பாவை சாகக் கொடுத்து விட்டோமே’ என்று மல்லிகா சிலையாய் மாறி நின்றாள்.
‘என் காதல்தான் அப்பாவை கொன்றது’ என்று தீவிரமாக நம்பினாள்.
கொஞ்ச நாள் கழித்து, ‘அக்கா சொல்வது போல் ஒரு சாதரண பையனை பார்த்து கல்யாணம் பண்ணியிருக்கலாம். அவசரப்பட்டு அப்பாவை, ஒரு ஆதர்ச நாயகனைத் தூக்கிக் கொடுத்து விட்டோமே’ என்று யோசித்து யோசித்து விம்மினாள்.
‘அப்பாவைக் கொன்ற இந்தக் காதல் இனி தேவையில்லை’ என்ற முடிவுக்கு வந்தாள்.
‘சங்கரனைப் பார்த்தால் தம்மால் தாங்க முடியாது’ என அவனைப் பார்ப்பதையே தவிர்த்தாள் மல்லிகா.
அப்பா இறந்ததால் கருணை அடிப்படையில் கிடைக்கும் வேலையை, எல்லோரும் எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் ஒத்துக் கொண்டு பட்டாளத்தில் இணைந்தாள்.
முத்து மேஜரின் மகள் ‘மல்லிகா முத்துக்குமாருக்கு’ பட்டாளத்தில் சிகப்பு கம்பள வரவேற்பு கிடைத்தது. அப்பாவைப் போல் துப்பாக்கி சுடுவதில் முதன்மை வகித்தாள்.
சங்கரன் பெரும் வருத்தத்தில் வீழ்ந்தான். மொத்த வாழ்வும் சூன்யமாகிப் போனது. உடல் பாதியானது.
“அப்பா, அம்மா, மற்றவர்கள் பரவாயில்லை, மல்லிகாவிற்கு எப்படி என் காதலைத் துறக்க மனது வந்தது.
ஒரு பட்டாளத்துக்காரனின் மகள் சூழ்நிலையை எதிர்த்துப் போராடாமல், இவளும் பட்டாளத்தில் போய் ஏன் ஒளிந்து கொண்டாள்?
என்னைப் பார்க்கக் கூட எப்படி மனமில்லாமல் போனது?” புலம்பித் தவித்தான் சங்கரன்.
மல்லிகா மிலிட்டரியில் சேர்ந்தது சங்கரனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. வலங்கைமானை விட்டு மாற்றல் வாங்கி கொண்டு போனான். ஆனாலும் நினைவுகள் நிழல் போல் துரத்தின.
மல்லிகா ‘தன் அப்பனைக் காவு வாங்கிய இந்தக் காதலும் வேண்டாம் கல்யாணமும் வேண்டாம்’ என்றும்,
‘மல்லிகாவைத் தவிர வேறு யாரையும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது’ என்று சங்கரனும் உறுதியாய் நின்றார்கள்.
ஊர், உறவு, நண்பர்கள் என்று யாராரோ எவ்வளோவோ சொல்லிப் பார்க்கிறார்கள். இருவரும் எந்த பதிலும் சொல்வதில்லை.
சங்கரன் வீட்டில் ‘எந்த வரதட்சணையும் வேண்டாம். அதே பெண்ணை நீ திருமணம் செய்து கொள்’ என்றும்,
மல்லிகா வீட்டில் இரு அக்காமார்களும் ‘எல்லா சொத்தையும் நீயே எடுத்துக் கொள். வேண்டுமென்றால் இன்னும் பணம் நகையெல்லாம் தருகிறோம். சங்கரனைத் திருமணம் செய்து கொள்’ என்றும் மன்றாடுகிறார்கள்.
மல்லிகாவும் சங்கரனும் மரக்கட்டை போல் கிடந்தார்கள்.
இருவரும் அவரவர் துறையில் பெரிய சாதனைகளை செய்து கொண்டே போனார்கள்.
சங்கரன் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகிறான்; நியூசிலாந்தில் போய் ஜெர்சி மாடுகள் பற்றிய ஆராய்ச்சி செய்கிறான். அரசாங்கதில் பெரிய பொறுப்புகள் எல்லாம் அவனுக்கு வருகின்றன.
மல்லிகா தனி ஒரு அதிகாரியாக ஏர்போர்ட்டைச் சுற்றி வளைத்த மூன்று தீவிரவாதிகளை துவம்சம் செய்கிறாள்; வீர, தீர பதக்கங்களைப் பெறுகிறாள்.
இந்தியாவுக்கு வந்த அமெரிக்க பெண் அமைச்சருக்குப் பாதுகாப்பாய் நிற்கிறாள். எல்லா பதக்கப் பட்டியலிலும் ‘மல்லிகா முத்துக்குமார்’ பெயர் தவறாமல் இடம் பெறுகிறது.
ஆனால் இருவரின் முகத்திலும் மனதிலும் எந்த மலர்ச்சியும் இல்லை; தீரா சோகமும் இருளுமாய் வறண்டு கிடக்கிறது.
சங்கரனுக்கும் மல்லிகாவுக்கும் வயது ஐம்பதைக் கடந்து விட்டது. சங்கரன் அப்பா, அம்மா இறந்து விடுகிறார்கள். மல்லிகாவின் அம்மா காமாட்சி படுத்த படுக்கையாய் கிடக்கிறாள்.
சங்கரனும் மல்லிகாவும் வலங்கைமான் மாட்டாஸ்பத்திரியில் மலர்ந்த காதலை மறக்கவும் துறக்கவும் முடியாமல், அதே சமயம் தொடரவும் முடியாமல், வேறு எந்தத் துணையும் தேடாமல் தனித்தனியே பயணிக்கிறார்கள்.
‘ஒருத்தி இல்லையென்றால் இன்னொருத்தி’ என்று பறக்கும் ஆண்களும், ஒரே சமயத்தில் ஒன்பது பேரைக் காதலிக்கும் பெண்களும் கொண்ட இந்த சமூகம் இவர்களின் காதலை “சோ-கிரேசி” என்கிறது.
அந்தப் பாழாய்ப் போன காதல், வலங்கைமான் மாட்டாஸ்பத்திரியில் சொர்க்கத்தில் லயித்துக் கிடந்த சங்கரனையும், வலங்கைமான் முழுதும் கொலுசு சத்தம் கேட்க ஒரு கன்று குட்டி போல் துள்ளித் திரிந்த மல்லிகாவையும் இன்னமும் தேடி அலைகிறது.
முனைவர் க.வீரமணி
சென்னை
கைபேசி: 9080420849
Comments
“காற்றில் அலையும் காதல்!” அதற்கு 4 மறுமொழிகள்
காற்றில் அலையும் காதல் – இந்த சிறுகதையில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு மிகவும் பிடித்து உள்ளது.
உங்களை வாழ்த்துவதற்கு என்னிடம் சொற்களே இல்லை ஐயா!
காதலுக்கு மத்தியில் காசு வந்துவிட்டால் தீராக்காதலும் தீக்கிரையாகலாம்.
இக்கதையின் முக்கிய பாத்திரங்கள் மல்லிகா மற்றும் சங்கரனாக இருக்கலாம்…
ஆனால் துப்பாக்கியால் கொல்ல முடியாத, அதைவிட கூர் ஆயுதமான உறவுகளின் மாறாட்டம் கொன்ற முத்து மேஜர் கதாபாத்திரத்திரமே ஹைலைட்.
மல்லிகா ராணுவத்தில் பெரிய பதவி வகிக்கலாம். சங்கரன் விலங்கு மருத்துவத்துறையில் கொடி கட்டிப் பறக்கலாம். ஆனால் வலங்கைமான் கிராமத்தின் பழைய காதல் சிறுவண்டுகளின் கதை தொடர்ச்சி இல்லாமலும் முடிவும் இல்லாமலும் பாதியிலேயே நிற்கிறது…
கிராமியக் காதலின் போக்கினை கச்சிதமாக எழுதி, மிகத்தேர்ந்த சொற்களால் படிப்போர் நெற்றியில் ஆணி அடித்தாற் போல் பதிய வைத்து விடுகிறார் கதாசிரியர்…
அவர் காதலின் வலியைக் கோர்வையாகச் சொல்வதில் வல்லவர் ஆகிவிட்டார்…
எழுத்தாளர் வீரமணி அவர்களின் படைப்பை இப்பொழுதெல்லாம் படிப்பதில்லை. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது சரி அதைக் கடைசியாய் கூறுகின்றேன்.
என்ன சொல்வது?
எதைச் சொல்வது?
எப்படிச் சொல்வது?
ஒரே வரி. நல்ல கதை.
காதல் அப்படிப்பட்டது…
நாள்பட்ட திராட்சை ரசத்தின் புளிப்பையும் ஏகாந்ததையும் உள்ளடக்கிய மாபெரும் சொர்க்க ரணம் அது.
சதா மனதிற்குள் பனிக்கட்டிகள் பூமழையாகி நிறைக்கின்ற குளிர்வு அது. இந்த உணர்வைச் சரியாக எழுத்தில், கதையில், கவிதையில் கொண்டு வருதல், சிலாகித்தல் என்பது சில எழுத்தாளர்களால் தான் முடியும். அது இங்கு நிகழப் பார்க்கிறோம்.
கதையை ஆசிரியரே கூறுகிறார். நேரே நடப்பது போல் எழுதியிருந்தால் வெற்றி அடைந்து இருக்காது. நீண்ட பெரிய காலம் நடக்கும் கதை. ஆனால் சிறுகதைக்குள் அடங்கி இருக்கிறது. நறுக்கென்று தெறிக்கிறது.
மிலேச்ச நாதாரிகளால் நசுங்கிய இக்காதல் எனக்குள் வலியை ஏற்படுத்தி விட்டது.
வலி போக்க நான் என்ன செய்வது?
நினைவு மறந்து மெளனிக்க நான் எங்கே போவது?
இந்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
யார் மீதும் எந்தத் தவறுமில்லை.
ஆனாலும் வலி!
படிக்கும் போது கண்ணீர் பெருகி வருகிறது!!