“நல்லா இருக்கீங்களா? என்னை யாருன்னு தெரியலையா? நான் தான் வளி.
இம்… இன்னைக்கு நான் பேசுவதற்கு காரணம் நீங்க தான். எப்படீன்னு கேட்குறீங்களா? சொல்றேன்.
வளியும் காற்றும் ஒன்று அல்ல
நேற்று ஒரு மனிதர் காற்று மண்டலத்தைப் பற்றி அங்கிருந்த சில நபர்களோட பேசிக்கிட்டு இருந்தாரு.
ஆர்வமா அவரு சொன்னதை நானும் கேட்டேன். ″என்னடா வளிமம் கூட ஒட்டு கேட்குதா?″-ன்னு நினைக்காதீங்க. அவர் பேசிய விஷயம் எங்கள பற்றி இருந்துச்சு. அதான் கேட்டேன்.
சரி நான் சொல்ல வந்தது என்னன்னா, அவர் பேசும்போது காற்று மண்டலம், வளி மண்டலம்னு சொன்னாரு.
ஆனா, வளியும் காற்றும் ஒரே பொருள் கொண்டது போன்ற அர்த்தத்தில் தான் அவர் பேச்சு இருந்து.
பிறகு தான் தெரிஞ்சுக்கிட்டேன். பொதுவழக்கத்துல வளி, காற்று என்னும் இரண்டு சொற்களையும் ஒரே பொருளில் பயன்படுத்துறாங்கன்னு. ஆனா, அறிவியலில் இவை வெவ்வேறான பொருள் கொண்டவை.
ஆமா, வளியும் காற்றும் ஒன்று அல்ல.
வளி என்பது வாயு நிலையில் இருக்கும் பொருள். உங்களுக்கு ஆக்சிஜன் வாயுவை நன்கு தெரியுமே.
காற்று என்பது வளிமங்கள் பெருமளவுல ஒரு இடத்துல இருந்து மற்றொரு இடத்துக்கு நகரும் நிலையைக் குறிக்கும் சொல்.
வளிமங்கள் இயற்கையிலேயே இருக்கின்றன. சில உருவாகின்றன.
மனிதர்களாலும் வளிமங்கள் உருவாக்கப்படுகின்றன. உதாரணமா, குப்பையை எரிக்கும்போது கரியமில வாயு உருவாகுது. உங்களுக்கு தான் நல்லா தெரியுமே.
ஆனா காற்று, வளிமண்ட அழுத்த வேறுப்பட்டால உருவாகுது.
இப்ப ஒருத்தரு சொன்னது என் நினைவுக்கு வருது.
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னாடி, ஒருத்தரு வேர்வைய தொடச்சிக்கிட்டு, ″என்னடா காத்தே இல்லே″-ன்னு சொன்னார்.
அவரு சொன்னது சரி தான். காற்று அங்கு வீசல. காற்று இல்லாம புழுக்கத்துல அவரு இருந்தார்.
ஆனா வளி, குறிப்பா ஆக்சிஜன் வளிமம் இல்லாம ஒரு நொடி கூட வாழ முடியாது.
இப்ப வளிமத்திற்கும் காற்றுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை நீங்க புரிஞ்சிக்கிட்டு இருப்பீங்கன்ணு நினைக்கிறேன்.
இன்னொரு தகவல் இருக்கு. காற்றுங்கற சொல்ல புவியில வளிமம் பெருமளவில் நகரும்போது பயன்படுத்துறாங்க.
இதுவே, சூரிய வளிமண்டலத்திலிருந்து மின்னேற்றம் பெற்ற துகள்கள் வெளியேறி வெளிக்குள் செல்வத சூரியக் காற்றுன்னு சொல்றாங்க.
சூரியக் காற்றுக்கும் புவியில வீசும் காற்றுக்கும் அதிக வேறுபாடு இருக்கிறது.
சூரியக் காற்று மாதிரி கிரக காற்றும் இருக்கு. ஆங்கிலத்துல Planetary Wind -ன்னு அழைக்கிறாங்க.
கிரகம் என்கிற கோளிலிருந்து நிறை குறைந்த வளிமங்கள் வெளியேறுவதை கிரக காற்றுன்னு சொல்றாங்க. இத கோட் காற்றுன்னும் சொல்லலாம்.
முக்கியமா, காலப்போக்கில, கிரக காற்றால, கிரக வளிமண்டலக் கலவையில அதீத மாற்றுங்கள் நிகழும்.
திசைய பொறுத்தும் காற்றுக்கு வெவ்வேறு பெயர்கள் இருக்கின்றன.
ஆமாம், வடக்கில் இருந்து வீசும் காற்றுக்கு வாடை என்றும், தெற்கில் இருந்து வீசும் காற்றுக்கு தென்றல் என்றும் பெயர்.
கிழக்கு மற்றும் மேற்கில் இருந்து வீசும் காற்றுக்கு முறையே கொண்டல் மற்றும் கச்சான் என பெயரிட்டு அழைக்கப்படுகிறது.
காற்றின் வலுவை பொறுத்தும் அதற்கு பல பெயர்கள் உண்டு.
குறுகிய நேரம் நிலைக்கும் மிகவும் வேகமாக வீசும் காற்றுக்கு வன்காற்று என்று பெயர்.
இடைத்தரக் கால அளவுக்கு, அதாவது சுமார் ஒரு நிமிட நேரத்தில் வீசும் பலமான காற்றுக்கு பாய்புயல் என்று பெயர்.
இதுவே, நீண்ட நேரத்துக்கு வீசும் பலமான காற்று புயல், சூறாவளி போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.
வளிமண்டல அழுத்தம்
சரி, வளிமண்டல அழுத்தத்தில் உள்ள வேறுபாட்டால் காற்று உண்டாகுதுன்னு முன்னாடி சொன்னேன்ல. அதப்பற்றி இன்னும் விளக்கமா சொல்றேன்.
வளிமண்டல அழுத்தத்தில் வேறுபாடு இருக்கும்போது, வளிமங்கள் அதிக அழுத்தம் கொண்ட பகுதியில் இருந்து குறைந்த அழுத்த பகுதிக்கு நகருது. இப்படி நகரும் வளிமங்களுக்குத் தான் காற்று என்று பெயர்.
அழுத்த வேறுபாட்ட பொறுத்து காற்றின் வேகம் மாறும்.
வளிமண்ட அழுத்தத்துல வேறுபாடு எப்படி உருவாகுது. சொல்லட்டுமா? நிலப்பகுதிகள் வேறுபட்ட அளவுகளில் சூடாவதன் காரணமாக தான்.
புவியின் வேறுபட்ட தட்பவெப்ப வலயங்கள் வேறுபட்ட அளவில் சூரிய ஆற்றலை உறிஞ்சுகின்றன.
எங்கு அதிக சூரிய ஆற்றல் உறிஞ்சப்படுதோ, அங்கு வெப்பம் அதிகரிக்கும். அதனால், அங்கிருக்கும் வளிமங்கள் சூடாகி விரிவாக்கம் அடைந்து உயரச் செல்கின்றன. இதனால் அங்கு வளிமண்டல அழுத்தம் குறைகிறது.
சூரிய ஆற்றலை குறைவாக உறிஞ்சும் பகுதி ஒப்பீட்டளவில் குளிர்ச்சியாக இருக்கும்.
குளிர்ந்த சூழலில் காற்று விரிவாக்கம் அடையாது. இதனால் இங்கு வளிமண்டல அழுத்தம் அதிகமாக இருக்கும்.
சுருக்கமாக சொன்னா, வளிமண்டால அழுத்தம் வெப்பமான பகுதியில் குறைவாகவும், குளிச்சியான பகுதியில் அதிகமாகவும் இருக்கும்.
காற்று எப்போதும் உயர் அழுத்தத்திலிருந்து குறைந்த அழுத்தத்திற்கு நகரும் தன்மை கொண்டது. இதன் காரணமாகவே, உலகெங்கிலும் காற்றோட்டம் நிகழுகிறது.
அதேபோல கடல் மற்றும் நிலம் வேறுபட்ட சூடாகும் தன்மை கொண்டிருப்பதாலும் காற்று கடலிலிருந்து, நிலத்திற்கும், நிலத்திலிருந்து கடலுக்கும் மாறிமாறி வீசுகிறது.
அதாவது நீரை விட நிலப்பரப்பு வேகமாக சூரிய ஆற்றலால் வெப்பம் அடைகிறது. இதனால, பகல் பொழுதில், நிலபரப்பின் மேலிருக்கும் வளிமங்கள் கடலின் மேலிருக்கும் வளிமங்களை விட வேகமாக வெப்பமடைந்து, விரிவடைகிறது,
பின்னர் உயரத்திற்குச் செல்கிறது. முன்னர் சொன்னபடி இங்கு குறைந்த அழுத்தம் உண்டாகிறது. இதனால், கடலுக்கு மேலிருக்கும் கனமான, குளிர்ந்த வளிமங்கள், நிலப்பரபில் மேலிருக்கும் குறைந்த அழுத்தப் பகுதியை நோக்கி சென்று, காற்று உண்டாகிறது.
இரவில், காற்று தலைகீழாக மாறுகிறது, அதாவது, வளிமங்கள் கடலுக்கு மேல் இருப்பதை விட நிலத்தில் வேகமாக குளிர்கிறது. இதனால், வளிமங்கள் நிலபரப்பிலிருந்து கடல் நோக்கி வளிமங்கள் செல்கின்றன.
கவனித்தீர்களா? இரவு மற்றும் பகலில் காற்றோட்டம் நிகழ்கிறது. ஆனால், வெவ்வேறு திசையில். ஆக புவி சுழல்வதன் காரணமாகவும் காற்றோட்டம் நிகழ்கிறது தானே?
காற்றின் நன்மைகள்
இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். காற்றின் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
நீங்கள் ஏற்கனவே அறிந்திருந்தாலும் பரவாயில்லை. நான் சொல்வதை கேளுகளேன்.
காற்றினால் நில அமைப்புக்களில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. அவற்றுள் செழிப்பான மண் உருவாதலும் ஒன்று என்பது குறிப்பிடதக்கது.
காற்று பல்வேறு தாவரங்களின் விதைகளை தொலை தூரங்களுக்கு எடுத்துச் சென்று பரப்புவதன் மூலம் அத்தாவரங்கள் பெருகி வளர்வதற்கும் துணை செய்கிறது.
காற்றானது விலங்குகளின் வேட்டையாடல் முறை, உணவு சேமிப்பு, மற்றும் தற்காத்துக்கொள்ளும் முறை உள்ளிட்டவற்றிலும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
காற்றின் மூலம் மழைப் பொழிவு கிடைக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் வடகிழக்கு, மற்றும் தென்கிழக்கு பருவக் காற்றின் மூலம் மழைப்பொழிவு கிடைப்பது உங்களுக்கும் தெரிந்தது தானே?
அத்தோடு கடற் போக்குவரத்திற்கும் காற்று பயன்பட்டுள்ளது.
ஆம், ஒரு காலத்தில் உலகின் கடல் கடந்த பயணங்களுக்குக் காற்றின் வலுவினால் இயங்கிய கப்பல்களே பயன்பட்டன.
வான்குடை மிதவை, பட்டம் விடுதல், படகோட்டம், கைட்சர்ஃபிங், கைட்போர்டிங் முதலிய விளையாட்டுகள் விளையாடுவதற்கும் காற்று பயன்படுகிறது.
வெப்பவளி பலூன்கள் மூலம் வான்வழிக் குறும் பயணங்களுக்கும் காற்று பயன்படுகிறது.
தொழில்துறை புரட்சிக்கு முன்பு, காற்றாலைகள் தானியங்களை அரைப்பதற்கு பயன்படுத்தப்பட்டன.
காற்றாலைகள் மின்னுற்பத்தி செய்வதற்கும், நீர்வாங்கு குழாய் மூலம் தண்ணீரை இறைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
காற்றின் நன்மைகளை கூறினேன். அதேசமயத்தில் அதன் பாதிப்புகளையும் சொல்கிறேன்.
அதிக வேகத்தில் காற்று பலமாக வீசும் பொழுது இயற்கைக்கும், கட்டிடங்கள் முதலிய செயற்கை அமைப்புக்களுக்கும் கடும் பாதிப்பும் உண்டாகிறது.
கடுமையான புயல்களால் பொருட்சேதம் மட்டுமின்றி உயிர்ச்சேதமும் ஏற்பட்டிருக்கிறது என்பதை வருத்தத்தோடு கூறுகிறேன்.
வெயில் காலங்களில், ஏற்படும் காட்டுத்தீ காற்றினால் விரைவாகப் பரவும் நிலையும் இருக்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகமே.
என்ன செய்வது, நன்மைகளும் தீமைகளும் உள்ளடங்கியது தானே இந்த உலகம்?
(குரல் ஒலிக்கும்)
கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com
கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!