அன்னம்போலே நடந்து வந்து
என்னைத் தொடுவாளோ-அவள்
சின்ன இதழில் முத்தம் தந்து
மோகம் தொடுப்பாளோ!
கன்னமிரண்டும் சிவந்துபோக
நாணம் கொள்வாளோ – அவள்
சின்ன இடையில் மின்னுமழகில்
என்னை வெல்வாளோ!
அந்திவேளை ஆற்றங்கரையில்
வந்து அமர்வாளோ – ஒரு
சிந்துபாடி சிலிர்க்க வைத்து
சேர்ந்து நடப்பாளோ!
தென்றல்போல என்னில் வந்து
தேகம் தொடுவாளோ – அந்த
தென்னங்கள்ளாய் போதை ஏற்றி
என்னைக்கொல்வாளோ!
காவியம்பாடி கவிஞனாக்க
தேடி வருவாளோ – தமிழ்
பாவினம்போல இனிமை சொட்ட
விருந்து தருவாளோ!
கோடி அழகில் கோபுரமாக
உயர்ந்து நிற்பாளோ-அருகில்
வாடி என்றால் ஓடி ஒளிந்து
கனவு என்பாளோ !!
எஸ்.மகேஷ்
சிட்லப்பாக்கம்
சென்னை – 600064
கைபேசி: 9841708284
மின்னஞ்சல்: mahicen@yahoo.com