குடும்ப வாழ்க்கை – சிறுகதை

குடும்ப வாழ்க்கை – கதை

இரவு நேரம்…

வாரப்பத்திரிக்கை ஒன்றை சோபாவில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த அர்ச்சனா பஸ்ஸர் ஒலித்ததும், எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.

வந்தது கிருஷ்ணசந்தர்!

அவன் உள்ளே நுழையவும், ஹால் கடிகாரம் இரவு மணி எட்டு அடிக்கவும் சரியாக இருந்தது.

“எங்கே போயிருந்தீங்க இவ்வளவு நேரம்?” கோபமாய்க் கேட்டாள்.

“ஆபீஸ் பாங்க் அக்கவுண்ட்ல ஃபிகர் டேலி ஆகலை. அடுத்த வாரம் ஆடிட். அதனால நேரில் போய் பார்த்து சரி செஞ்சுட்டு வரச்சொல்லி அனுப்பிட்டார் மேனேஜர்”

“ஏதாவது ஒரு வேலை இருக்குமே உங்களுக்கு? நீங்க ஒருத்தர்தான் ஆபீஸ்ல இருக்கீங்களாக்கும்? ஒரு நாளைக்காவது ஆபீஸ் முடிஞ்சு கரெக்டா வீட்டுக்கு வந்திருக்கீங்களா?”

“புரியாம பேசாதே அர்ச்சனா. மேனேஜர் என்னைக் கூப்பிட்டுச் சொல்லும்போது போய்த்தானே ஆகணும். மறுக்க முடியுமா?”

“ஆமாம் நீங்கதான் ஆபீஸையே தாங்கறீங்க. நீங்கதான் போகணுமா அதுக்கு? உங்ககூட வேலை செய்யறவங்க எத்தனை பேர் இருக்காங்க?”

“மறுபடியும் பாரு. அவர் எப்பவுமே என்னைக் கூப்பிட்டுத்தான் சொல்வார். யார் யார்கிட்டே எந்தெந்த வேலையைக் கொடுத்தா ஒழுங்கா நடக்கும்னு அவருக்குத் தெரியும்”

“கொஞ்சங்கூட பொறுப்பே கிடையாது. என்னடா வீட்ல ஒருத்தி தனியா இருக்காளே. சீக்கிரமா வீட்டுக்குப் போகணுமேங்கிற அக்கறை எல்லாம் கிடையாது. யாராவது ஏதாவது சொன்னா உடனே மறுபேச்சில்லாம நான் ஆச்சுன்னு போயிட வேண்டியது!”

“ஏய்…என்ன நீ? வந்ததும் வராததுமா நீ பாட்டுக்குப் புலம்பிக்கிட்டேயிருக்கே?”

“ஆமா, உடனே என்னை அடக்கிடுவீங்களே? எங்கே போறீங்களோ, எங்கே சுத்தறீங்களோ? கேட்டால் ஆபீஸ் வேலை, அது இதுன்னு சாக்கு சொல்லிட வேண்டியது”

“அப்படின்னா நான் பொய் சொல்றேங்கிறியா?”

“எனக்கென்ன தெரியும்? உங்க மனசாட்சிக்கிட்டேத்தான் கேட்கணும்”

“ஐயோ, ஐயோ… எனக்கு வர்ற ஆத்திரத்தில எங்கேயாவது விழுந்து செத்து ஒழிஞ்சிடலாமான்னு இருக்கு… இதே பொழைப்பாப் போச்சு உனக்கு?”

“ஏன் இவ்வளவு லேட்டுன்னு கேட்டதுக்கு இவ்வளவு பெரிய வார்த்தையா? என்னைப் பார்த்தாலே வெறுப்புதான் வரும் உங்களுக்கு…” விழியோரங்களில் நீர் கோர்த்துக் கொள்ள நா தழுதழுத்தவாறே சொன்னாள் அர்ச்சனா.

“இப்ப எதுக்கு அழறே? நான் என்ன சொல்லிட்டேன்? ஒரு ஆம்பிளை ஆபீஸ் போயிட்டு வர்றான்னா ஆயிரம் இருக்கும். நான் எங்கேயோ ரெட்லைட் ஏரியாவுக்குப் போயிட்டு வந்த மாதிரின்னா நினைக்கிறே. ஆபீஸ் வேலையாத்தானே போயிட்டு வந்தேன். நம்பிக்கையில்லைன்னா என்னோட ஆபீசுக்கு வா. நாளைக்கு மேனேஜரைப் பார்த்து நீயே கேளு. சே! என்ன வாழ்க்கைடா இது?” கோபத்தில் சலித்தவாறே பெட்ரூம் சென்று உடைகளைக் களைந்து கொடியில் எறிந்தான்.

கை, கால், முகம் கழுவி மீண்டும் பெட்ரூம் வந்தவன் படுக்கையில் சாய்ந்தான்.

“என்ன சாப்பிடலையா? சாப்பிடலாம் வாங்க!”

“எனக்கு ஒரு இழவும் வேண்டாம்”

“ஏதாவது சொன்னா மூக்குக்கு மேலே கோபம் மட்டும் வந்துடும். கோபத்தை எல்லாம் சாப்பாட்டுல காண்பிக்க வேண்டாம். எழுந்திருங்க” கிருஷ்ண சந்தரின் கையைப் பிடித்து இழுத்தாள் அர்ச்சனா.

அவளிடமிருந்து கையை உதறியவாறே “வேண்டாம்னா விடேன். எப்படி சாப்பிடப் பிடிக்கும்? வந்ததும் வராததுமா குதி குதின்னு குதிக்க வேண்டியது. அப்புறம் சமாதானப்படுத்த வேண்டியது. என்னிக்குத்தான் என்னைப் புரிஞ்சிக்க போறியோ? இனி பிறவியே வேண்டாம்ப்பா… இந்த ஒரு ஜென்மமே போதும்” என்றான் சலிப்புடன்.

“அதெல்லாம் முடியாது. எனக்கு இன்னொரு ஜென்மமும் வேணும். மறுபடியும் உங்களையே கணவனா அடையணும்.”

“ஏன் இந்த ஜென்மத்துல படறது போறாதா?”

“நான் என்னங்க இப்போ சொல்லிட்டேன்? காலா காலத்துல வீட்டுக்கு வரக்கூடாதான்னு ஒரு மனைவி கேட்கக் கூடாதா?”

“கேட்கலாம். நான் என்னவோ வேணும்னு லேட்டா வர்ற மாதிரின்னா பேசறே. எப்பப் பாரு சந்தேகம்தான்.!”

“சந்தேகம் இல்லீங்க. பயம்”

“என்ன பயம்?”

“எங்கே யாராவது உங்களை போகக்கூடாத இடத்துக்கெல்லாம் கூட்டிட்டுப் போய், மயக்கி, கெட்டுப்போக வச்சிடுவாங்களோங்கிற பயம்”

“கஷ்டம் சாமி! அதுக்கெல்லாம் வேற ஆளைப்பாரு. என்னை என்ன அவ்வளவு சீப்பா நினைச்சிட்டியா? நான் என்ன பொம்பளையா? வலுக்கட்டாயமா யாராவது என் கையைப் பிடிச்சு இழுத்து பலாத்காரம் செய்ய? ஆம்பிளைங்க, அவங்களே வலிய எங்கேயாவது போய் கெட்டுப் போனால்தான். யாரும் வந்து கட்டாயப்படுத்திக் கெடுத்துட முடியாது. புரிஞ்சுக்கோ எனக்கு எது நல்லது எது கெட்டதுன்னெல்லாம் நல்லாவே தெரியும். எந்த வலையிலேயும் விழ மாட்டேன்.”

“அது போதுங்க எழுந்திருச்சு வாங்க, உங்களுக்காகத்தான் காத்திருக்கேன். ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம் வாங்க”

கிருஷ்ண சந்தர் கொஞ்சம் முரண்டு பிடிக்க, அர்ச்சனா அவனது மார்பில் சாய்ந்து அவனது காதோரமாக, “என் மேல் கோபமா?” என ரகசியக் குரலில் கிசுகிசுத்ததும், மந்திரத்திற்கு கட்டுண்டவன் போல் எழுந்து அவள் பின்னே சென்றான்.

இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு சுமூக சூழ்நிலை நிலவும். நான்காவது நாள் மறுபடியும் வீட்டில் பூகம்பம் வெடிக்கும்.

கிருஷ்ண சந்தருக்கும் அர்ச்சனாவுக்கும் திருமணமாகி இருபத்தைந்து ஆண்டுகள் ஆகப் போகிறது. அவர்கள் திருமணத்தின்போது அர்ச்சனாவுக்குப் பதினாறு வயது. கிருஷ்ண சந்தருக்கு இருபது வயது.

இருபத்தைந்து வயதில் ஒரு பெண். இருபத்தி மூன்றில் அவளுக்கும் திருமணம் செய்து வைத்து, பேத்தியும் பிறந்தாகிவிட்டது. அவர்களுக்குள் எழும் ஊடல் மட்டும் ஓயவில்லை.

பெற்றோர்களாய் பார்த்து செய்து வைத்த திருமணம்தான். இருவர் குடும்பங்களும் பெரிது.

கிருஷ்ண சந்தர் கலகலப்பான ஆசாமி; எவரிடமும் எளிதில் பழகக் கூடியவன்; பொறுமைசாலி; படித்தவன்; நல்ல வேலையில் இருப்பவன்; அழகில் ‘ஓஹோ’ என்று இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு சுமாராக இருப்பான். இவ்வளவு போதாதா ஒரு பெண்ணுக்கு?

திருமணமான புதிதிலிருந்து தன் கணவன் வேறொரு பெண்ணிடம் பேசினாலே பிடிக்காது அர்ச்சனாவுக்கு.

அவள் உறவுக்காரப் பெண்ணாய் இருந்தாலும் சரி. “அவளிடம் என்ன இளிப்பு?” என எரிந்து விழும் குணம்.

எங்கே சென்றாலும் தன்னிடம் சொல்லிவிட்டுப் போக வேண்டும் என எதிர்பார்ப்பவள். கணவன் தன்னிடம் எதையும் மறைக்கக்கூடாது என விரும்புகிறவள். சொன்னால் சொன்னபடி நடக்க வேண்டும் என்பாள்.

கணவன் தன் அருகிலேயே இருக்க வேண்டும் அவளுக்கு. அவன் எங்கேயாவது சென்றால் அவளும் கூடவே வர வேண்டும். அது ஷாப்பிங் ஆனாலும் சரி. வெளியூர் பயணமானாலும் சரி. கணவன் மட்டும் தனியாக எங்கேயாவது செல்ல நேரிடும் போது முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்வாள்.

சமயத்தில், இருவருக்குள்ளும் ஏற்படும் சண்டையைப் பார்க்கையில் ‘டைவர்ஸ்’ வரைகூட வந்துவிடுமோ எனத் தோன்றும். கடைசியில் பார்த்தால் புஸ்வானமாகிவிடும்.

அர்ச்சனாவின் குணம் தெரியுமாதலால் உண்மையைச் சொன்னால் அவள் சரியாகப் புரிந்து கொள்ளாமல் குதிப்பாள் என்கிற நினைப்பில் சில விஷயங்களைப் பூசி மெழுகி விடுவான் கிருஷ்ண சந்தர்.

சாயம் சில தினங்களில் வெளுத்து விடும். கோயிலுக்குச் சென்ற இடத்தில் ஆபீஸ் நண்பர் மனைவி யார் மூலமாவது விஷயம் வெளிப்படும். அவளிடம் அவன் மறைத்து விட்டதாக நினைத்து வீட்டுக்கு வந்து கிருஷ்ண சந்தருடன் மல்லுக்கு நிற்பாள்.

பிறகு விவகாரம் பெரிதாகி ஒரே அமர்க்களம்தான். அர்ச்சனாவின் கன்னத்தை கிருஷ்ண சந்தரின் கரம் சமயங்களில் பதம் பார்த்துவிடும்.

‘ஆண்’ என்கிற அகங்காரம், அகம்பாவம், பெண்தானேங்கிற இளக்காரம்’ என்றுகூட அவளிடம் சாடியிருக்கிறாள்.

எல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான். இருவரும் சமாதானமாகிப் போய்விடுவார்கள்.

கிருஷ்ணசந்தருக்கு வாழ்க்கையே வெறுத்துவிடும்.

மனைவி தன் மீது உயிரையே வைத்திருக்கிறாள் என்றாலும் அமிர்தம்கூட அளவுக்கு மீறினால் நஞ்சாகிவிடும் என நினைப்பான்.

உப்புக்குப் பெறாத விஷயத்தை எல்லாம் அர்ச்சனா வீண் கற்பனையால் பெரிது பண்ணி விவகாரமாக்குவதாக நினைப்பான்.

அர்ச்சனா எதையும் திட்டமிட்டுச் செய்ய கூடியவள். திட்டமுடன் செயல்படுபவள். கிருஷ்ணசந்தரோ நேர் எதிர். நல்லதோ, கெட்டதோ உறவினர் வீட்டு விஷேங்களின் போது எது முக்கியம், எது முக்கியமில்லாதது என்பதை அலசி ஆராய்ந்து அதற்கேற்றவாறு செயல்படச் சொல்வாள் அர்ச்சனா.

நான் ஒன்று நினைத்துவிட்டால் அதைச் செயலாற்றிவிட வேண்டும் என ஒன்றைக் காலில் நிற்பவன் கிருஷ்ணசந்தர். முடிவில் இருவருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு ஆரம்பிக்கும்.

இப்படியாக தெளிந்தும், கலங்கியும் ஓடும் ஆற்று வெள்ளம்போல் இரவும் பகலும் போய்க் கொண்டிருந்த வேளையில் திடீரென உடல் நலம் குன்றி படுக்கையில் விழுந்தாள் அர்ச்சனா. பிரஷர் அதிகமாகி மெலிதான ‘ஸ்ட்ரோக்’ ஒன்று அவளை ஆட்கொண்டிருந்தது.

கிருஷ்ண சந்தர் தவித்தான். கவலையும் வேதனையும் அவனைக் கெட்டியாகவே பிடித்துக் கொண்டு விட்டது. தீவிர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து அல்லும் பகலும் அவள் அருகிலேயே இருந்து வந்தான்.

பெண் மாப்பிள்ளை மற்றும் ஏனைய இருவீட்டு உறவினர்களும்கூட வந்து அர்ச்சனாவைப் பார்த்துவிட்டு சென்று கொண்டிருந்தனர்.

கிளினிக்கின் பரபரப்புகள் ஓய்ந்து, அமைதியாக இருந்த ஒருநாள் மதிய வேளையில் அர்ச்சனா அட்மிட் ஆகியிருந்த ஸ்பெஷல் வார்டுக்கு வெளியே நின்று மோட்டு வளையை வெறித்து நோக்கிக் கொண்டு நின்றவனைக் கூப்பிட்டு “சார் உங்க ஒய்ஃப் கூப்பிடறாங்க உங்களை” என்றாள் நர்ஸ் ஒருத்தி.

அர்ச்சனா அருகே சென்று கவலையுடன் “என்னம்மா?” என்றான்.

“என்னால் உங்களுக்கு ரொம்ப கஷ்டம் இல்லையா?”

“என்ன அர்ச்சனா இது? இப்படியெல்லாம் பேசலாமா? எனக்கென்ன கஷ்டம்?”

“உங்களுக்கு ஏகப்பட்ட செலவை வெச்சுட்டேன். அதுமட்டுமில்லாம, உங்களால இப்பொழுதெல்லாம் எங்கேயும் போக முடியறதில்லை. என்னை விட்டு நகர முடியாதபடி ஒரு சூழ்நிலை உருவாயிடுச்சு. இல்லையா? ஆபீசுக்குக்கூட போறதில்லை நீங்க. ரொம்பவும் போரடிச்சுப் போயிருக்கும் உங்களுக்கும்”

“இந்த நேரத்துலகூட இப்படியெல்லாம் போகணுமா அர்ச்சனா.. நீயா வரவழைச்சுக்கிட்டது தான் இது. எப்ப பாரு டென்ஷன் தான். மனசுல வீண் குழப்பம் உனக்கு.

வீணாய் ஏதேதோ கற்பனை செஞ்சுக்கிட்டு, என்னோட வம்புக்கு வந்து, அனாவசியமா நமக்குள் மனத்தாங்கல் ஏற்படற மாதிரி நடந்துக்கிட்டு, வேண்டாத கவலைகளையெல்லாம் மனசுல வளர்த்துக்கிட்டே எல்லாம் சேர்ந்து இப்போ உன்னைப் படுக்கையில தள்ளிடுத்து”

“இனிமேல் உங்களுக்கு என்னால எந்தத் தொந்தரவும் இருக்காதுங்க. நான் ரொம்ப நாளைக்கு இருப்பேன்னு தோணலை. உங்ககிட்ட மனம் விட்டுப் பேசணும்போல இருக்கு. இப்படி உட்காருங்களேன்…”

அந்த ஸ்பெஷல் வார்டில் இரு தனி ரூம்களில் ஒன்றில் இருந்த அர்ச்சனாவின் பெட் அருகே ஸ்டூலை இழுத்துப் போட்டு அமர்ந்தான் கிருஷ்ண சந்தர்.

“ஏன் இப்படியெல்லாம் பேசறே? இப்படியெல்லாம் நான் பேசாதேங்கிறேன். இப்பவும் சொல்றேன். நீ அனாவசியமா பயப்படறே. குழம்பறே. இவ்வளவு வயசுக்கப்புறமும் உனக்கு என் மேல் சந்தேகம் பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணி மாப்பிள்ளைகூட வந்தாச்சு! ஒரு பேத்திகூட இருக்கா நமக்கு. எப்படியெல்லாமோ என்னை உனக்குப் புரிய வச்சுப் பார்த்துட்டேன். உனக்கு என்ன குறை வச்சிருக்கேன் அர்ச்சனா?”

“ஐயையோ, அப்படி சொன்னா பாவம்ங்க. உங்களைக் கணவனா அடைஞ்சதுக்கு நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும். நீங்கதான் எதையுமே தப்பா புரிஞ்சுக்கிறீங்க.

உங்களை நான் சந்தேகப்படலை. எல்லோரையும் ரொம்ப சீக்கிரமா நம்பிடுறீங்க. வெளுத்ததெல்லாம் பால்னு நினைக்கிறீங்க. வெளித்தோற்றத்தைப் பார்த்து மயங்கிடுறீங்க.

வாழ்க்கையிலே ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டியதுதான். எல்லாத்துக்குமே அளவு இருக்குங்க. அதை மீறுகிறப்போதுதான் உங்களைத் தடுக்கிறேன்.

சொந்தக்காரங்களோட சொந்தம் கொண்டாடுங்க. ஆனா அவங்களே கதின்னு இருந்திடாதீங்க! என்னதான் நண்பர்களானாலும் நாலடி தள்ளியே இருங்க.

உங்களுக்குன்னு ஒரு துன்பமோ, கஷ்டமோ வர்றபோது உங்களைத் தனியாய் தவிக்கவிட்டு வேடிக்கை பார்த்துடப் போறாங்களோன்னுதான் அப்பப்போ உங்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைப்பேன்”

“என்னை என்ன எதுவுமே தெரியாத குழந்தைன்னு முடிவு பண்ணிட்டியா அர்ச்சனா?”

“அப்படியில்லீங்க. ஒரு மனைவிங்கிறவ கணவனுக்கு வெறும் சமையல்காரியாவோ, உடல்பசியைத் தீர்க்கிறவளாகவோ மட்டும் இருந்துடக்கூடாது இல்லையா?

நீங்க என் உடம்புல ஓடுற உயிர்மூச்சு இல்லையா? அந்த உயிர்மூச்சு ஒழுங்கா, ஒரே சீராய் ஓடிக்கிட்டிருக்கணும்னா நான்தானே கவனமா, ஜாக்கிரதையா இருக்கணும்?

நீங்க மட்டும்தான் என்னை ஆளணும். நீங்க மட்டும்தான் எனக்கு அம்மா-அப்பா எல்லாமே. இப்படியெல்லாம் சகலமும் நீங்கள் ஒருவர்மட்டும்தான்னு நினைச்சிக்கிட்டு உங்களை நல்லவிதமா வழி நடத்திச் செல்ல வேண்டியது என் வாழ்க்கை கடமை இல்லையா? என்னோட கடமையைச் செய்யறது தப்பா?”

தொடர்ந்து பேச முடியாமல் அர்ச்சனாவுக்கு மூச்சிரைத்தது.

பிளாஸ்கிலிருந்து கரைத்த ஹார்லிக்ஸை சூடாக டம்ளரில் ஊற்றி அவளிடம் நீட்டியபடியே “இதை சாப்பிடு அர்ச்சனா, ரொம்பவும் பேசாதே. உடம்பை அலட்டிக்காதே” என்றான் கிருஷ்ணசந்தர்.

அவனிடமிருந்து டம்ளரை வாங்கிக் கொஞ்சம் உறிஞ்சிக் கொண்ட அர்ச்சனா மீண்டும் பேச ஆரம்பித்தாள்.

“…கணவன் சம்பாதிச்சுக் கொண்டு வந்து தர்றான் என்பதற்காக அவனை அவன் இஷ்டத்திற்குத் தறிகெட்டு அலைய விடாம, அப்பப்போ கண்டிச்சு, தட்டிக் கேட்டு, அவனும் குழந்தைகளும் எதிர்காலத்துல நல்லாயிருக்கணும்ங்கிற நோக்கத்துல வாழ்க்கையில சிக்கினமாய் இருந்து, திட்டமிட்டுச் செயல்பட்டு, நாலுகாசு சேர்த்து, சொத்து பத்து வாங்கி ஓரளவுக்கு நமக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள, அதற்குத் தகுந்த மாதிரி கணவனை நடந்து கொள்ளச் சொல்வது தப்பா?

இப்படியெல்லாம் மனைவி நினைக்கிறது தவறா? அதைத்தாங்க நான் செஞ்சேன். சத்தியமா உங்களை நான் வேறு எந்த மாதிரியும் நினைக்கிலே. என்னை நம்புங்க… ப்ளீஸ்…நீங்க என்னைவிட்டு மனசால விலகியிருந்தாக்கூட என்னால் தாங்கிக் கொள்ள முடியாதுங்க..!”

அர்ச்சனா சொல்லிக் கொண்டே விம்மி விம்மி அழுதாள்.

சுற்றும் முற்றும் நோக்கிய கிருஷ்ணசந்தர் கதவை ஒருக்களித்துச் சாத்தினான்.

ஸ்டூலிலிருந்து எழுந்து அர்ச்சனாவைப் ‘பெட்’டிலிருந்து மெதுவாக தன் இருகைகளாலும் அவளது தலையைத் தலையணையிலிருந்து எடுத்துத் தாங்கிப் பிடித்து அள்ளிக் கொண்டான். அர்ச்சனா அவனை இறுகத் தழுவிக் கொண்டாள்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998