இரண்டு நாட்களாகவே ராதாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வந்தான் ரவி.
இனம் புரியாதோர் சோகம் அவள் முகத்தில் குடி கொண்டிருந்தது. சொல்ல நினைப்பதை சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளேயே வைத்து அவள் மறுகிக் கொண்டிருப்பதாகவே பட்டது ரவிக்கு.
இரண்டு நாட்களுமே இரவில் அந்த அந்தரங்க இனிமையான வேளையிலே இதமாக அவள் கூந்தலை வருடியவாறே கேட்டுப் பார்த்தான் ரவி.
அவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை. பேச்சை திசை திருப்பி, வலிய புன்னகைத்து அவள் சமாளிப்பதாகவே தோன்றியது.
‘இன்று எப்படியும் அவள் மனதிலுள்ளதை அறிந்தே தீருவது’ என்ற வைராக்கியத்தை ஏற்படுத்திக் கொண்டான்.
இரவும் வந்தது.
ரவிதான் மௌனத்தைக் கலைத்தான்.
“நானும் ரெண்டு நாளா பார்க்கிறேன். உன் முகமே சரியில்லை. ஏன் என்னவோ போல இருக்கே? எங்கிட்டக்கூட சொல்லக்கூடாத விஷயமா?”
“அதெல்லாம் இல்லீங்க”
“பின் என்ன?”
அவள் கண்கள் கலங்கியிருந்தன.
“ராதா ஏன் கண் கலங்கறே?”
ராதா அவன் மார்பில் முகம் புதைத்து விம்மினாள்.
“என்னம்மா? என்ன ஆச்சு?”
ராதா மெதுவாகச் சுதாரித்துக் கொண்டாள்.
“நாம முதல்ல இந்த வீட்டைக் காலி பண்ணிட்டுப் போயிடணுங்க”
“இந்த வீட்டுக்கென்ன? அக்கம் பக்கத்துல இருக்கிறவங்கெல்லாம் ரொம்ப நல்லவங்க. எல்லா வசதியும் இங்க இருக்கு..”
ரவி சொல்லிக் கொண்டிருக்கும்போதே ராதா குறுக்கிட்டாள்.
“என்ன இருந்து என்னங்க? மனுஷங்க சரியில்லையே! நெருங்கிப் பழகினாத்தானே ஒவ்வொருத்தருடைய சுயரூபம் புரியுது”
“கொஞ்சம் புரிகிற மாதிரிதான் சொல்லேன்”
அவள் சொல்ல ஆரம்பித்தாள்.
‘இரண்டு நாள் முன்பு நீங்க ஆபீஸ் போனப்புறம் வழக்கமாப் போகிற மாதிரி மாதர் சங்கத்துக்குப் போனேன். ஆண்டுவிழா நடத்துற விஷயமா ஆலோசனைக் கூட்டம் நடந்துக்கிட்டிருந்ததுங்க.
எல்லோரும் ரொம்ப சுவாரசியமாப் பேசிக்கிட்டிருந்தாங்க. நானும் அவங்களோட கலந்துகிட்டு உறுப்பினர்ங்கிற முறையில என்னோட அபிப்ராயங்களை சொன்னதும், எல்லோரும் நான் என்னவோ ஜோக் சொன்ன மாதிரி விழுந்து விழுந்து சிரிச்சாங்க…'”என முழுவதும் கூறாமல் துக்கம் தொண்டையை அடைக்க விம்மினாள் ராதா.
“எதுக்கு சிரிச்சாங்க அவங்க?”
“எனக்கும் முதல்ல ஒண்ணும் புரியலீங்க. அப்புறம் நம்ம வீட்டுக்குப் பக்கத்து வீட்ல இருக்காளே கௌரி. அவ எழுந்து நின்னு
‘ராதா தெரிஞ்சோ, தெரியாமலோ இந்த சங்கத்துல உறுப்பினரா சேர்ந்துட்ட. உன்னோட யோசனைகளையெல்லாம் கேட்க உன்னை யாரும் இங்கே அழைக்கலே, என்னைப் போல இங்கு இருக்கிற சில முக்கியமானவங்க சொல்ற, கொடுக்கிற வேலையை மட்டும் செஞ்சிட்டு இரு. இந்த சங்கத்துல உறுப்பினரா சேரணும்னாலே அதுக்குன்னு ஒரு தனி ஸ்டேட்டஸ் இருக்கு!-ன்னு பட்டென சொல்லிட்டாங்க” என்றாள் கண்களில் நீர்மல்க.
“காம் டௌன் டியர்! அப்படி என்ன உன்கிட்ட இல்லாத தகுதி அவங்கக்கிட்ட இருக்காம்?”
“அதாங்க, வசதி, அந்தஸ்து, கௌரவம். அங்க இருக்கிறவங்களோட வீட்டுக்காரங்க எல்லாம் பெரிய பெரிய கம்பெனியோட எம்.டி-ன்னும், சொசைட்டியில டாக்டர், இன்ஜினீயர், ஜட்ஜ், பிசினஸ் மேக்னெட்-டுன்னும் பெரிய அந்தஸ்தோட இருக்காங்களாம்.
அவங்களோட ஒப்பிட்டுப் பாக்கறச்சே எனக்கு என்ன தகுதியிருக்குன்னு கேட்கிறாங்க?”
“அந்தஸ்து, கௌரவம்-னு எதை நினைக்கிறாங்க ராதா?”
“நீங்க சாதாரண ஆபீஸ் கிளார்க்தானாம். சொத்து, சுகம்னு எதுவும் கிடையாதாம். எங்கப்பாவும் ஒரு அன்னக்காவடியாம். சீர், செனத்தின்னு எங்க வீட்லேருந்து எதுவும் உங்களுக்குச் செய்யலையாம். ரொம்பக் குத்திக்காட்டினாங்க. அதாங்க, நாம வேற வீடு பார்த்திட்டுப் போய் எங்கேயாவது நிம்மதியா இருக்கலாங்க”
“ரொம்ப ஆச்சரியமாயிருக்கு ராதா! இதே கௌரியோட புருஷன் ஒரு டாக்டர். எங்கிட்ட நல்லாதான் பழகுறாரு. எதிர் வீட்டு ராமலிங்கம் பெரிய இன்ஜினீயர். எங்கிட்ட நல்லாதான் பேசறாரு. இந்த பொம்பளைங்கதான் எதையாவது கிளப்பிவிட்டு அந்தஸ்து, கௌரவம்னு வீண் பிரச்சனைகளையெல்லாம் ஏற்படுத்தறாங்க”
“எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க. இப்போ நல்லா பழகிக்கிட்டு இருக்கிறவங்க என்னைக்காவது ஒருநாள் மாறமாட்டாங்கன்னு என்னங்க நிச்சயம்?
அந்தஸ்து, கௌரவம் பார்த்துப் பழகுங்கன்னு அவங்கவங்க மனைவிங்களே சொல்லிக் கொடுத்து அவங்க மனசை மாத்திடுவாங்க.
கொஞ்சங் கொஞ்சமா உங்களையும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பாங்க. நம்ம வாழ்க்கையில் இருக்கிற நிம்மதியும், சந்தோஷமும் போயிடுமோன்னு பயப்படறேங்க” என்று குலுங்கிக் குலுங்கி அழுதாள் ராதா.
“ஏய்! என்ன இது, குழந்தை மாதிரி. நீ படிச்சவ. இதுக்கெல்லாமா இப்படி அலட்டிக்கிறே? யாரு எதைச் சொன்னாலும் சொல்லட்டும். விட்டுத் தள்ளு ராதா! வீணாய் மனசைப் போட்டுக் குழப்பிக்காதே” என்றான் ரவி.
ரவியின் ஆறுதலான வார்த்தைகளும், அணைப்பும் அவளுடைய அப்போதைய மனநிலைக்கு மருந்தாக மாற, அவன் மார்பிலேயே குழந்தை மாதிரி படுத்து உறங்கிப் போனாள் ராதா.
அன்று மாதர் சங்க ஆண்டு விழா. நகரின் பிரபல ஓட்டல் ஒன்றில் தடபுடலுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாலை ஆறரைக்கு விழா. விழாவின் முக்கிய விருந்தினராக மாவட்டக் கலெக்டர் வருவதாக இருந்தார்.
மாதர் சங்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தம்பதி சகிதம் விதவிதமான கார்களில் வந்திறங்கி அவரவர் செல்வச் செழிப்பைப் பறை சாற்றிக் கொண்டிருந்தனர்.
ரவியையும், ராதாவையும் சுமந்து கொண்டு வந்த பைக் விழா ஹால் முன் வந்து நின்றதும், உறுப்பினர்கள் சிலரின் ஏளனப் பார்வை அவர்கள் மீது விழ, எதையும் பொருட்படுத்தாமல் ராதாவும், ரவியும் அமைதியாக உள்ளே போய் அமர்ந்தனர்.
விழா ஆரம்பித்து வரவேற்புரை, ஆண்டறிக்கை வாசிப்பு மற்றும் புதிய உறுப்பினர் அறிமுகம், முக்கிய விருந்தினரின் உரை எல்லாம் முடிந்தன.
மாதர் சங்கச் செயலாளர் சியாமளா பத்மநாபன் அடுத்த நிகழ்ச்சி பற்றி அறிவித்தார்.
“இப்போது இந்த ஆண்டின் சிறந்த தம்பதிகள் யார் என்பது பற்றிய முடிவை, அதைத் தேர்ந்தெடுக்க அமைக்கப்பட்ட விசேஷ குழுவினர் அறிவிப்பார்கள்”
முக்கிய பிரமுகர்கள் சிலர் ஆண்களும், பெண்களுமாக மேடையில் தோன்றியதும் அரங்கினுள் சலசலப்பு அடங்கியது.
ராதா வீட்டிற்கு எதிரில் குடியிருக்கும் இன்ஜினீயர் ராமலிங்கம் மைக் முன்வந்து, பேச ஆரம்பித்தார்.
“மாதர் சங்கத் தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்களே! சிறந்த தம்பதியினரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் நானும் ஒருவன் என்பதில் பெருமை அடைகிறேன்.
சிறந்த தம்பதியினரைத் தேர்ந்தெடுக்க நாங்கள் பல பிரிவுகளாக இந்நகரத்தின் பல பகுதிகளுக்குச் சென்று, சென்ற மூன்று மாத காலமாக பல்வேறு தம்பதியனரைச் சந்தித்து அவர்களுடன் உரையாடி தகவல்கள் சேகரித்து வந்தோம்.
வெறும் பகட்டையும், ஆடம்பரத்தையும், சொத்தையும், புறஅழகையும் வைத்துப் பார்க்காமல் கணவன்-மனைவிக்குள் உள்ள அன்னியோன்னியம், பாசம், அன்பு, குடும்ப வாழ்கையில் இருவருமே காட்டும் அக்கறை, ஈடுபாடு, விட்டுக் கொடுக்கும் தன்மை, ஒருவருக்கொருவர் முழுமையாகப் புரிந்து கொண்டு செயல்படும் தன்மை ஆகியவைகளை அடிப்படையாக வைத்துப் பார்த்து கணித்தோம்.
இவைகள் அனைத்துமே ஒருங்கே அமையப் பெற்ற ராதா-ரவி தம்பதியினரே மிகச்சிறந்த தம்பதியினராக இவ்வாண்டு தேர்நத்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்”
அரங்கமே கைத்தட்டல்களால் அதிர்ந்தது.
வீடு வந்து சேர்ந்ததும் ரவி கேட்டான்.
“என்ன ராதா! இப்போ சொல்லு. யார் விலை மதிக்க முடியாத சீர்கொண்டு வந்திருப்பது? யாருடைய அந்தஸ்தும் கௌரவமும் இப்போ ஊரிலே கொடிகட்டிப் பறக்குது? உங்க சங்கத்துல யாரோ எதுவோ சொன்னாங்கதுக்காக ஒரேயடியா சோர்ந்து போயிருந்தியே”
ராதா அவனையே பார்த்தபடி மௌனமாக நின்று கொண்டிருந்தாள்.
ரவி தொடர்ந்தான்.
“கணவனும் மனைவியும் ஒருத்தரையொருத்தர் புரிஞ்சுக்கிட்டு அன்போடும், பாசத்தோடும் ஒற்றுமையா இருந்தாலே போதும்.
மனைவி என்பவள் சீர், நகை, பணம் என்று எதுவும் கொண்டுவரத் தேவையில்லை.
கணவனுக்கு வரும் வருமானத்திற்குள் திட்டமிட்டுச் செலவு செய்து, அவனுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்து, குடும்பத்தைத் திறமையுடன் நிர்வாகம் செய்வதுதான் முக்கியம்.
நீ வந்த பிறகுதானே இந்த பீரோ, கட்டில், .பிரிஜ், டி.வி., டூவீலர், கிரைண்டர் எல்லாமே வந்தது. சொந்தமாக ஒரு பிளாட்கூட அடுத்த மாதம் வாங்கப் போறோம். இதெல்லாம் நீயில்லாமல் நான் நினைச்சுக்கூடப் பார்க்க முடியுமா?
சம்பளத்தை வாங்கி உன்கையில் கொடுப்பதுதான் என் வேலை. மற்ற எல்லாவற்றையும் நீதானே ராதா கவனிச்சுக்கிறே
என்னைப் பொறுத்தவரை, கோடையா இருந்த என் வாழ்க்கையிலே நீ மழையாக வந்து பொழிந்து, தென்றல் காற்றாய் என்னைக் குளிர்வித்து, செழிப்புறச் செய்த தேவதைம்மா” என்றான் மனம் நெகிழ.
கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்க, பாய்ந்து சென்று தன் கணவனைக் கட்டிக் கொண்டாள் ராதா.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
2 Replies to “கோடையிலே மழைபோல் நீ – சிறுகதை”