கோதுமை அல்வா பெரும்பாலானோர்க்கு பிடித்த இனிப்பு.
அல்வாவானது கேரட், பீட்ரூட், பூசணி, பிஸ்கட், பிரெட் என பலவகையானப் பொருட்களில் இருந்து தயார் செய்யப்பட்டாலும் கோதுமையிலிருந்து தயார் செய்யப்படும் அல்வாவைத்தான் நாம் சாதாரண அல்வா என்கிறோம்.
பொதுவாக கோதுமை அல்வாவானது கோதுமையை ஊற வைத்து பால் எடுத்து செய்யப்படும்.
இப்போதெல்லாம் உடனடியாக அல்வா தயார் செய்ய கோதுமை மாவினைப் பயன்படுத்துகின்றனர்.
எனினும் கோதுமையை ஊற வைத்து செய்யப்படும் அல்வா பராம்பரியமானது என்பதால் நான் அம்முறையைப் பயன்படுத்தி அல்வா தயார் செய்துள்ளேன்.
இனி சுவையான கோதுமை அல்வா தயார் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கோதுமை – 1 கப் (தோராயமாக 50 கிராம்)
வெள்ளைச் சர்க்கரை – 1 & 1/4 கப்
நெய் – 1/2 கப்
ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – மிகவும் சிறிதளவு
கோதுமை அல்வா செய்முறை
கோதுமையை நன்கு கழுவி கோதுமையைப் போல் மூன்று மடங்குத் தண்ணீரில் 8 முதல் 12 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
ஊறிய கோதுமையை விரல்களுக்கிடையே வைத்து நசுக்கினால் நசுக்குப்பட வேண்டும். அந்தளவுக்கு கோதுமை நன்கு ஊறி இருக்க வேண்டும்.
ஊறிய கோதுமையின் தண்ணீரை நன்கு ஒட்ட வடித்துவிட்டு, மிக்ஸியில் சேர்த்து பல்ஸ் மோடில் வைத்து சிறிதாக நொறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் சிறிதளவு மட்டும் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். சிறிய ஓட்டையுள்ள வடிகட்டியைக் கொண்டு அரைத்த கோதுமையை வடிகட்டிக் கொள்ளவும்.
கோதுமைப் பால் சற்று கெட்டியாகவே இருக்கும்.
வாயகன்ற பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து அதனுடன் தயார் செய்து வைத்திருக்கும் கோதுமைப் பாலைச் சேர்க்கவும்.
பின்னர் வாணலியை அடுப்பில் மிதமான தீயில் வைக்கவும்.
கோதுமைப் பால் கெட்டியாக இருப்பதால் அடுப்பில் வைத்துக் கொண்டே நெய் சேர்த்து அதனுடன் கோதுமைப் பாலைச் சேர்க்கும்போது கட்டி தட்டிவிடும். எனவே பாத்திரத்தில் கோதுமைப் பாலினைச் சேர்த்த பின்பு அடுப்பில் வைக்கவும்.
கைவிடாது கரண்டியால் கோதுமைப் பாலைக் கிளறவும்.
கோதுமைப் பால் கெட்டியாகி நன்கு திரளும் வரைக் கிளறவும்.
அடுப்பினை சிம்மிற்கு சற்று கூடுதலாக வைக்கவும்.
எடுத்துக் கொண்டுள்ள வெள்ளைச் சர்க்கரையில் பாதியை எடுத்து மற்றொரு வாணலியில் சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கிளறவும்.
சற்று நேரத்தில் சர்க்கரை உருகி அடர் பழுப்பு நிறத்திற்கு மாறும்.
அப்போது அடுப்பிலிருந்து இறக்கி கிளறிக் கொண்டிருக்கும் கோதுமை திரட்டில் சேர்த்து ஒருசேரக் கிளறவும்.
ஒரு நிமிடம் கழித்து அதனுடன் மீதமுள்ள வெள்ளைச் சர்க்கரையைச் சேர்த்து கிளறவும்.
சர்க்கரைக் கரைந்ததும் அதனுடன் ஏலக்காய் பொடியைச் சேர்த்துக் கிளறவும்.
பின்னர் கலவையில் அவ்வப்போது சிறிது சிறிதாக நெய் சேர்த்துக் கிளறவும்.
கலவையானது ஒன்று திரண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
சுவையான கோதுமை அல்வா தயார்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் முந்திரியை சிறிதாக ஒடித்து நெய்யில் வறுத்து அல்வாவில் சேர்க்கலாம்.
சம்பா கோதுமையை அல்வா செய்யப் பயன்படுத்தலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!