கோப்பிள்ளை – திசை சங்கர்

“சத்தியம் பண்ணு! வாழ்க்கையில ஒருமுறை கூடக் குடியத் தொட மாட்டேன்னு சத்தியம் பண்ணு!” என்று மகனிடம் சத்தியம் வாங்கினாள் அம்மா.

சதீஷ் ஆறாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு அப்பா இல்லை. இறந்து ஒரு மாதம்தான் ஆகிறது. பயங்கர குடிகாரர். குடல் வெந்து, கல்லீரல் பாதித்து இறந்ததாக டாக்டர்கள் சொன்னார்கள். அவனும் ‘வாழ்க்கையில் குடிக்கவே கூடாது’ என்கிற முடிவெடுத்தான்.

அந்தக் கிராமத்தில் யாருமே அவ்வளவாகப் படித்ததில்லை. ஆண்கள் கட்டட வேலைக்குச் செல்வார்கள். பெண்கள் ஆளாளுக்கு ஒரு முறம் வைத்துக் கொண்டு பீடி சுற்றுவார்கள்.

கட்டட வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது ஆண்கள் சைக்கிளை மதுக்கடையில் நிறுத்தி, பாட்டில்களோடுதான் வருவார்கள். கிராமத்தின் ஓரத்தில் இருக்கும் மைதானத்தில் அமர்ந்து சரக்கடிப்பது அவர்களின் வழக்கம்.

மைதானத்தில் நண்பர்களோடு விளையாடி விட்டுக் கதை பேசிக் கொண்டிருந்தான் சதீஷ். அவனை எல்லோரும் “கோப்ள” என்று தான் அழைப்பார்கள். அவனுடைய உண்மையான பெயர் நிறைய பேருக்குத் தெரியாது.

“கோப்ள! நம்ம கிட்டான் கடைக்குப் போயி, அஞ்சு தண்ணிப் பாக்கெட்டு, ரெண்டு காரச்சேவு பாக்கெட்டு, ரெண்டு பவானி ஊறுகாய் வாங்கிட்டு வா. இந்தா இந்தப் பைக்க எடுத்துட்டுப் போ”

அவனுக்குப் பைக் ஓட்டுவது மிகவும் பிடித்திருந்தது. அதற்காகவே அவர்கள் சொன்ன எடுபிடி வேலையெல்லாம் செய்தான். வாங்கி வரும் சைட் டிஷ்ஷில் அவனுக்கும் பங்கு உண்டு.

அவர்கள் சரக்கடிக்கும்போது பக்கத்தில் அமர்ந்து சைட்டிஷ் தின்று கொண்டிருப்பான். இப்படியே அவனுடைய நாட்கள் நகர்ந்தன.

காலம் வேகமாகச் சென்றது. இப்போது அவன் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதி இருக்கிறான்.

விடுமுறை மாதம் என்பதால் இரவுப் பொழுதை அவர்களோடு சந்தோசமாய்க் கழித்தான். அவர்களோடு இருந்து இருந்து ஒருநாள் இவனுக்கும் அந்த ஆசை வந்தது.

அவர்கள் குடித்து முடித்துவிட்டு வீடு திரும்பியதும் இவன் அங்கிருந்த பீர்பாட்டிலின் கடைசித் துளிகளை உள்ளங்கையில் ஊற்றி ருசிபார்த்தான். கசப்பாக இருந்தது. அவனுக்குப் போதையே ஏறவில்லை.

“ச்சீ இவ்வளவு தானா?” என்றான்.

மறுநாள் மீதி இருந்த எல்லாப் பாட்டில்களின் துளிகளையும் ஒரே பாட்டிலில் ஊற்றிக் குடித்தான். கொஞ்சமாகத் தலை கிறக்கியது. இப்படியே பழக்கம் தொடர்ந்தது.

பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாயின. அவன் தேர்ச்சி பெற்றான். இருந்தும் கல்லூரி செல்ல அவனுக்கு விருப்பமில்லை. கூட்டாளிகளோடு சேர்ந்து சித்தாளாக முடிவெடுத்தான். அம்மா படிக்கச் சொல்லியும் அவன் கேட்கவே இல்லை. அம்மாவை எதிர்த்துப் பேசத் தொடங்கினான்.

அவன் அப்பாவைப் போலவே அவனும் முழுக் குடிகாரனாய் மாறினான். சந்தோசமாய் இருக்கும் போது குடித்தான். சோகமாய் இருக்கும் போதும் குடித்தான். உடம்பு வலியைக் காரணம் சொல்லிக் குடித்தான். அவன் குடிப்பது வீட்டிற்குத் தெரிய வந்தது. இருந்தும் அம்மா அவனிடம் நேரடியாகக் கேட்கவேயில்லை.

ஒருநாள் குடித்துவிட்டு வீட்டிலேயே வாந்தி எடுத்தான். அம்மா அழுதாள். இப்போதும் அவனிடம் அவள் ஒன்றுமே கேட்கவில்லை. அழுதுகொண்டே வீட்டைக் கழுவி விட்டாள். படுக்கையிலே சிறுநீர் கழித்தான். அப்போதும் அவனிடம் ஒன்றுமே கேட்கவில்லை.

சித்தாளாக இருந்தவன் வேலை கற்று இப்போது கொத்தனாராக மாறினான்.

திடீரென ஒருநாள், வேலை செய்யும் இடத்தில் தான் ஒரு பெண்ணை விரும்புவதாக அம்மாவிடம் தெரிவித்தான்.

‘கல்யாணம் பண்ணி வச்சிட்டா பையன் சரி ஆகிடுவான்’ என்கிற முடிவை அவன் அம்மா எடுக்கவில்லை. எப்போதும் பேசாத அம்மா இப்போது பேசினாள்.

“உன் பாட்டி செஞ்ச அதே தப்ப நானும் செய்ய மாட்டேன். நீ குடிச்சிக் குடிச்சி உன்னயே அழிச்சிக்கோ. ஆனா இன்னொரு பெண்ணோட வாழ்க்கைய கெடுக்காதே!”

‘இவனிடம் இப்போது சேமிப்பு இல்லை. சொந்தமாக வீடு இல்லை. குடித்தே சம்பளத்தை எல்லாம் காலி செய்கிறான். பின் எப்படி இன்னொருத்தியை வச்சி, குடும்பம் நடத்துவான்?’ என்கிற கேள்வி அவளிடம் இருந்தது.

அவன் எதையும் கேட்பதாக இல்லை. அம்மா சொன்னதை மதிக்கவே இல்லை. நினைத்தபடியே அந்தப் பெண்ணைத் திருச்செந்தூர் முருகன் கோவிலில் திருமணம் செய்தான்.

எதிர்த்துக் கேட்கும் அளவுக்கு அந்தப் பெண் வீட்டிலும் யாருமில்லை. இருவரும் தனியாக வீடு எடுத்து வாடகைக்கு இருந்தார்கள். ‘இனிமேல் குடிக்கவே மாட்டேன்’ என்று மனைவியிடமும் சத்தியம் செய்திருந்தான்.

இப்போது அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தது. ஆனாலும் அவனால் குடியை நிறுத்தவே இல்லை. மனைவி திருத்த முயன்றாள். அவனால் விட முடியவில்லை.

ஒருபக்கம் பீடி சுற்றியும், பூத்தொடுத்தும் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தாள் சதீஷின் தாய். இப்போது குழந்தை வளர்ந்து, சிறுமியாகி, பாட்டியோடு விளையாடிக் கொண்டிருந்தாள். மகனோடு பேச விருப்பமில்லை என்றாலும் பேத்தியைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

ஒருநாள் பக்கத்து ஊரில் கான்கிரீட் போட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென இரத்த வாந்தி எடுத்தான். அவனுக்குப் பயமாக இருந்து.

வீட்டுக்குத் தெரியாமல் டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்றான். ‘கூடிய விரைவில் இறந்து விடுவோம்’ என்பதை டாக்டர் சொல்லி அறிந்தான்.

அவன் உடல் நிலை மோசமாகி இருந்தது. அன்பான மனைவி, அழகான மகள், பாசமான தாய் இவர்களை எல்லாம் நினைத்து அழுதான். போதை, மூளையை மழுங்கடித்ததை உணர்ந்தான்.

கொஞ்சம் கொஞ்சமாகக் குடியை விட முடிவெடுத்தான். நாளுக்கு ஒன்று என்று இருந்ததை, வாரத்திற்கு ஒன்றென மாற்றினான்.

பின் மாதத்திற்கு ஒன்றென மாற்ற நினைத்தான். குடும்பத்தோடு அதிக நேரம் செலவழித்தான். ஆனாலும் அவனால் முழுமையாக விட முடியவில்லை.

இப்படித்தான் ஒருநாள் வேலை முடிந்து சரக்கு வாங்கி விட்டு நண்பர்களோடு மைதானம் வந்தான்.

சதீஷின் நண்பன் அங்கே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவனை அழைத்தான்.

“தம்பி! நம்ம கிட்டான் கடைக்குப் போயி, அஞ்சு தண்ணிப் பாக்கெட்டு, ரெண்டு காரச் சேவு பாக்கெட்டு, ரெண்டு பவானி ஊறுகாய் வாங்கிட்டு வா. இந்தா இந்தப் பைக்க எடுத்துட்டுப் போ”

இவன் அடிக்க இருந்த சரக்கைத் தரையில் வைத்து விட்டு, “மச்சான்! அந்தக் காசை எங்கிட்ட கொடு. நானே போயி வாங்கிட்டு வரென். தம்பி! நீ வீட்டுக்குப் போப்பா. இனிமே இங்க எல்லாம் வரக் கூடாது” என்று சிறுவனை விரட்டி விட்டு இவனே கடைக்குச் சென்றான்.

சென்றவன் திரும்பி வரவேயில்லை!

திசை சங்கர்


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.