சந்தேகத்தின் சேதாரம் – சிறுகதை

ஆபிசிலிருந்து வீட்டிற்குச் செல்ல பஸ் நிறுத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தாள் மீனா.

அவளைக் கடந்து சென்ற வண்டியைக் கவனித்தாள்.

ஸ்கூட்டரில் இருப்பது தன் கணவன் ரகு மாதிரி இருந்தது. உற்று கவனித்தபோது அது ரகு தான் எனத் தெரிந்தது.

‘அப்படியானால் பின்னால் உட்கார்ந்திருக்கும் பெண் யார்?

அது அது ராணிதானே! ஆம் அது ராணியேதான்.

இவங்க ரெண்டு பேரும் இப்ப எங்க போறாங்க?’ மனதில் ஏதோ ஒன்று குத்தியது.

சட்டென்று கையிலிருந்த செல்போனில் ரகுவை அழைத்தாள். அது சுவிட்ச் ஆஃப் என்று பதில் அளித்தது.

யோசித்துக் கொண்டே பஸ்ஸில் ஏறி பின் வீடு வந்து சேர்ந்தாள்.

இரவு 7 மணி.

வியர்த்த முகமுமாய் கலைந்த தலையுடன் வீடு வந்து சேர்ந்தான் ரகு.

“சூடா காஃபி போட்டு எடுத்திட்டு வா மீனா” சட்டையை கழற்றி ஆணியில் மாட்டிக்கொண்டே ரகு சொன்னான்.

ரகுவின் தோற்றத்தை கண்டு பதறிய மீனா, “என்ன இப்படி இருக்கீங்க! என்னாச்சு?”

“ஒண்ணும் பதறாத. எனக்கு எதுவுமில்ல. நம்ம வீட்ல வேல செய்ற இராணியோட அம்மாவுக்கு உடம்புக்கு முடியாம ஆஸ்பிடல்ல சேர்த்திருக்காங்களாம். அங்கதான் போயிட்டு வரேன். ஒரே அலைச்சல் ஆயிட்டது. அதான்…..”

‘ஓ..ஓ.. நான்கூட பார்த்தேங்க. நீங்களும் ராணியும் வண்டில போனத’ மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

நல்லவேளை தப்பாக எதுவும் ரகுவிடம் கேட்கல.

‘என் ரகு ஸ்ரீராமர். பார்த்தத வச்சு என்னென்ன நினைச்சுட்டேன். சே..’ தன்னையே மிகவும் நொந்துகொண்டாள்.

ராணி இரு நாட்களாக வேலைக்கு வரவில்லை. எல்லா வேலைகளையும் மீனாவே செய்து முடித்துவிட்டு ஆபிஸுக்கு கிளம்பினாள்.

சாலையில் நடந்து கொண்டிருந்த போது எதிரே ராணியின் அம்மா வந்து கொண்டிருந்தாள்.

‘ஆஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு வந்துட்டாங்க போல’ மனதிற்குள் எண்ணிக் கொண்டே அவளைப்பார்த்துச் சிரித்தாள்.

“உடம்பு இப்ப பரவாயில்லயா?”

ஆச்சரியத்துடன் மீனாவின் முகத்தை பார்த்த அவள், “என் ஒடம்புக்கு இன்னாம்மா? நான் நல்லாத்தான கீறன்.”

” நீங்க ஆஸ்பிடல்ல…?” தடுமாறினாள்.மீனா.

“யார்ம்மா சொன்னது?”

ராணி அம்மாவின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய மீனா, ஒற்றை வினாடியில் சுதாரித்தாள்.

“இல்ல ராணியம்மா. நான் ஏதோ ஞாபகத்துல இருந்துட்டேன். ஸாரி, நான் வரேன்.” சட்டென அவளை விட்டு நகர்ந்து சென்றாள்.

‘ரகு ஏன் பொய் சொன்னார்?”

மீண்டும் மனதில் ஏதோ குத்துவதை உணர்ந்தாள் மீனா.

ஆபிஸ் வந்து ஒரு மணி நேரமாகியும் இந்த யோசனையே மனதிற்குள் அலைந்து மண்டை வெடிப்பதுபோல் உணர்ந்தாள் மீனா.

‘சட்டென்று புருஷனை சந்தேகப்படும் ரகம் அல்ல தான், அதே போன்று ரகுவும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவனாகத் தான் இதுவரை வாழ்ந்திருக்கிறான்.

பிறகு தன்னிடம் பொய் சொல்ல வேண்டியதன் அவசியம் என்ன? என்ன காரணம்?’ யோசித்து யோசித்து குழப்பம் தான் மிஞ்சியது.

இதற்கு மேல் தாங்க முடியாது என்பதை உணர்ந்த மீனா, ஆபிஸில் லீவ் சொல்லி விட்டு உடனடியாக வீட்டிற்கு கிளம்பினாள்.

வீட்டை அடைந்ததும் வாயிலில் ரகுவின் ஸ்கூட்டர் நிற்பதைக் கண்டாள்.

வீட்டின் கதவும் உட்புறம் தாளிடப்படாமல் வெறுமனே மூடியிருப்பதையும் பார்த்து உள்ளே நுழைய முற்பட்டாள். உள்ளேயிருந்த வந்த பேச்சுக் குரல் அவளை அங்கேயே தடுத்து நிறுத்தியது.

‘இது! ….இது யார் குரல்?

ராணியின் குரல் மாதிரி உள்ளதே?’

பதைபதைத்த மனத்தை கட்டுப்படுத்தி காதை கூர்மையாக்கினாள்.

உள்ளே பேசுவது துல்லியமாக கேட்டது.

“ஐயா இது வேண்டாங்கய்யா…ரொம்ப தப்புங்கய்யா…”

“தப்பு எல்லாம் ஒண்ணுமல்லே ராணி. உனக்குந்தான் பிடிச்சிருக்கு இல்ல. சும்மா பிகு பண்ணிக்காத.”

ரகு பேசுவதும் கேட்டது.

குபீரென்று ரத்தம் உடலெல்லாம் சூடாக பாய்வதை உணர்ந்தாள் மீனா. தொடர்ந்து உள்ளே பேசுவதை கேட்கலானாள்.

“நான் ஏற்கனவே புருஷன இழந்தவ. இந்த தப்ப நான் பண்ணா ஊர் உலகத்துல என்ன சொல்லுவாங்க. என்னை தப்பா பேசமாட்டங்களாய்யா?”

ராணியின் குரலைத் தொடர்ந்து ரகுவின் குரல் ஒலித்தது.

“இங்க பாரு ராணி, இது ஒண்ணும் தப்பு கிடையாது. சமுதாயத்துல யாரும் செய்யாதத ஒண்ணும் நீ செஞ்சிடல. இது இப்ப வழக்கமாயிடுச்சி. நீ தேவயில்லாம எதுக்கும் பயப்படாத. உனக்கும் பிடிச்சிருக்கில்ல. அப்புறம் என்ன?”

இனியும் தொடர்ந்து கோபத்தை கட்டுப்படுத்த முடியாத மீனா ஆத்திரத்துடன் கதவை அறைந்து திறந்தாள்.

உள்ளே இருந்தவர்களை கண்டு சற்று நிலைதடுமாறிப் போனாள்.

ரகு ஸோபாவில் அமர்ந்திருக்க, அவன் எதிரே ராணியும் ஒரு இளைஞனும் நின்றிருந்தார்கள்.

இவள் கதவை அறைந்து எழுப்பிய ஓசையைக் கண்டு அதிர்ந்தவர்களாக தெரிந்தார்கள.

ரகுதான் சுதாகரித்துக் கொண்டு முதலில் கேட்டான்.

“ஏன் இவ்ளோ வேகமா கதவத் திறந்த மீனா? ஆபிஸுக்குத்தான போன. அதுக்குள்ள திரும்பிட்ட? ஏதாவது பிரச்சனையா?” கரிசனத்துடன் பேசிக் கொண்டே சென்ற கணவனை பார்த்து எதுவும் பேச முடியாமல் பிரமை பிடித்தாற்போல் நின்றாள் மீனா.

“ஹேய், மீனா உனக்கு என்னாச்சு?”

ரகுவின் குரலால் கலைந்த மீனா மெலிந்த குரலில் கேட்டாள்.

“இங்க என்ன நடக்குது?”

ராணிக்கு பக்கத்தில் நின்றிருந்த இளைஞனை சுட்டிக்காட்டி “இவர் யார்?” எனவும் வினவினாள்.

“ஸாரி மீனா. உன்கிட்ட எதுவும் நான் சொல்லல. சொல்லக்கூடாதுன்னு இல்ல. எனக்கே இப்பத்தான் முழு விஷயமும் புரிஞ்சது.

இதோ இருக்காரே மணி, இவரு ராணிய ரொம்ப நாளா விரும்பறாரு. அவள கல்யாணம் பண்ணிக்கவும் ஆசப்படறாரு.

ஆனா ராணி இதுக்கு ஒத்துக்க மாட்டேங்கிறா. அவ என்ன சொல்றான்னா புருஷன்ற பேர்ல ஒரு அரக்கன் கிட்ட மாட்டிக்கிட்டு அவஸ்தைப்பட்டதே இந்த ஜென்மத்துக்கும் போதும். எல்லா ஆம்பிளைகளும் அப்படித்தான் இருப்பீங்கன்னும் சொல்றா.

அதுக்கும் மேல தான் ஒரு விதவை. மறுமணம் செஞ்சா யாராவது ஏதாவது சொல்வாங்கன்னும் அச்சப்படறா.

இதுபத்தி ரெண்டு நாளக்கி முன்னாடி ரெண்டு பேரும் ரோட்ல நின்னுகிட்டு வாக்குவாதம் பண்ணிட்டு இருந்தாங்க.

அந்த வழியே போயிட்டிருந்த நான் அதப்பார்ததுட்டு இவன் ஏதோ ராணிய தொந்தரவு பண்றதா தப்பா புரிஞ்சுகிட்டு மணிய போட்டு நல்லா அடி பின்னி எடுத்துட்டேன்.

உடனே ராணிய கொண்டு போய் வீட்ல பத்திரமா விட்டுட்டு அப்புறந்தான் நான் வீட்டுக்கு வந்தேன். இதல்லாம் உங்கிட்ட சொன்னா நீ பதட்டப்படுவேன்னு தான் நான் சொல்லல….”

ரகு சொல்லிக்கொண்டே செல்ல மீனா அவசரப்பட்ட தன் புத்தியை எண்ணி நொந்துகொண்டாள்.

ரகு தொடர்ந்தான்…

“இன்னிக்கு காலையிலேயே மணி ஆபீஸூக்கு வந்து எல்லா விஷயத்தயும் என்கிட்ட சொல்லிட்டான். அதுதான் ரெண்டு பேரயும் அழைச்சு இங்க வச்சி பேசிக்கிட்டிருக்கேன்.

ராணிக்கும் மணிய பிடிச்சிருக்கு, ஆனாலும் பயப்படறா. நல்லவேலயா நீயும் இந்நேரத்துக்கு வந்துட்ட. கொஞ்சம் ராணிக்கு எடுத்து சொல்லு.”

மனதில் ஏற்பட்ட சந்தேகம் எல்லாம் சேதாரமாய் போக மனம் முழுக்க தெளிவு பெற்ற மீனா, ராணியை நோக்கி புன்னகைத்தாள்.

“ராணி எல்லா ஆண்களையும் ஒருசேர சந்தேகப்படாத. என் ரகுவை போன்ற அவதாரப் புருஷர்களும் இந்த உலகத்துல இருக்காங்க.

என் வீட்டுக்காரர் சிபாரிசு பண்றாருன்னா கண்டிப்பா மணி நல்லவராத்தான் இருப்பார். என்ன சொல்ற?” கேள்வியுடன் ராணியைப் பார்க்க , ராணியோ வெட்கத்துடன் மணியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மஞ்சுளா ரமேஷ்
ஆரணி

Comments

“சந்தேகத்தின் சேதாரம் – சிறுகதை” மீது ஒரு மறுமொழி

  1. […] சந்தேகத்தின் சேதாரம் – சிறுகதை ரணங்களின் நிறங்கள் – சிறுகதை […]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.