தெருநாய் கூட்டமெல்லாம்
திரளாய் நிற்கிறது
உன்பெயரை சொல்லிக் கொண்டு
உள்ளாட்சி செய்கிறது…
உன்னாட்சி உலகறியும்
உள்ளாட்சி உயரலையே
என்னாச்சு சொல்லென்றால்
என்னாட்சி என்கிறதே…
உறகத்தை நீமறந்து
உழைத்திட்ட நாள்களெல்லாம்
உரையின் மேற்கோளாய்
உச்சியில் மிளிர்கிறது…
உன்திறனை நான்பாட
எனக்கறிவு போதாது
உனதறிவில் ஒருதுளியை தேடுகிறேன் காணாது…
அரிதாரம் பூசாத ஆறடி ஆளய்யா
அரிதாக பூத்திட்டாய்
அவனியில் நீரய்யா…
ஒருவேளை உணவிட்டு
உலகறிவை நீ வளர்த்தாய்
ஒருவேளை இல்லை யென்றால்
ஓரறிவுயிர் ஆயிருப்போம்…
முழுக்கால் சட்டையினை அணிந்திட்ட மனிதரெல்லாம்
ஒருக்கால் நினைத்திருப்பர் ஏளனமாய் உமைப்பற்றி…
தேர்க்கால் சக்கரமாய் சுழன்றிட்ட உமைக்கண்டு
நேர்காண நாணிருப்பர் வெட்கித் தலைகுனிந்து…
அடுத்த சந்ததிக்கு கடத்திச் செல்கின்றோம்
அழியாத உம்திறனை அவர்களும் அறிந்திடவே…
தடுப்பார் யாருமின்றி
அடுக்காய் முளைத்திடுவார்
நடுக்கந் தனைமறந்து
நலம்பல செய்திடுவர்…
வருங்காலம் வளமாகும்
வரம் பெற்ற நிலையாகும்
தெருவெங்கும் கர்மவீரர்
அவதாரம் எடுத்திடவே…
க.வடிவேலு
தகடூர்