சிந்தித்து செயல்படுவோம்!

பெரும்பாலும் தற்போதுதான் அதிகம் பேர் ஜாதகம், நாள், நட்சத்திரம், சூலம், கிழமை முதலியவற்றை பார்த்து வெளியூர் செல்கிறார்கள்; திருமணம் செய்கிறார்கள்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் யாரும் ஜாதகம் பார்த்தது கிடையாது.

புத்தர், வள்ளுவர், இயேசு, வள்ளலார், பாரதியார், விவேகானந்தர், காந்தி போன்றவர்கள் ஜாதகம் நாள், நட்சத்திரம் பார்க்கச் சொல்லவில்லை. இதெல்லாம் மூடநம்பிக்கைதான்.

இன்று வடக்கே சூலம் என்றால் ஒரு ஊரிலிருந்து வடக்கே செல்லும் பஸ்கள், ரயில்கள், வண்டி, வாகனங்கள் மூலம் அனைவரும் போகிறார்கள். அவர்கள் வேலைகளை முடித்து விட்டுதான் திரும்பி வருகிறார்கள்.

அதுமாதிரிதான் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்று பாராமல் தான் போய் வருகிறார்கள்.

எல்லோரும் சூலம் பார்க்க ஆரம்பித்தால் நாட்டில் ஒரு வேலையும் நடக்காது.

சுமார் 40, 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருமணத்திற்கு மணவீட்டார்கள் இருவரும் அமைதியானவர்களா என்று மட்டும் தான் பார்ப்பார்கள்.

பணம், நகை, சொத்து என எதையும் விரும்பி கேட்க மாட்டார்கள். சோதிடம், நாள், நட்சத்திரம் பார்க்க மாட்டார்கள்.

அந்த காலத்தில் ஒருவருக்கு ஒருவர் அன்பாய் பழகி, மனம் வேறுபட்டாலும் இருவரும் விட்டுக் கொடுத்து வாழ்ந்து பிள்ளைகள், சொந்தக்காரர்கள் எல்லோரையும் அனுசரித்து ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள்.

அந்த காலத்தில் கணவன், மனைவி இடையே மனமுறிவு ஏற்பட்டு விவாகரத்து நடந்தது என்பது மிகவும் அரிது. ஆயிரத்தில் ஒன்றுகூட இருக்காது.

தற்போது தான் 90% மக்கள் ஜாதகம் பார்த்து தான் செய்வேன் என விபரம் தெரியாமல் அடம்பிடித்து அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.

அதிலும் நான்கு ஜோதிடர்களிடம் கேட்டால் நால்வரும் நான்கு விதமாகத்தான் சொல்லிக் கொண்டு அவர்கள் பிழைப்பை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

நாம்தான் மனம் குழம்பி கடைசியில் ஏதாவது ஒரு மணமகனையோ, மணமகளையோ முடிவு செய்து திருமணம் முடித்து வைக்கிறோம்.

மணம் முடித்தவர்களில் சுமார் 70% முதல் 80% நபர்கள் பெற்றோர்கள் அறிவுரை கேட்டு நடந்து வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

மற்றவர்கள் ‘நான் சொன்னபடிதான் நீ நடக்கணும்’ என்று மாறி மாறி சொல்லி சண்டை போட்டு கோர்ட்டிற்கே சென்று விவாகரத்து கேட்டு வாதாடி வருகிறார்கள். அதையும் தினசரி பேப்பரில் விபரம் வந்து கொண்டு தான் இருக்கிறது.

‘நாங்கள் நிறைய படித்து விட்டோம்’ என சொல்லிக் கொண்டும் ‘எல்லாமே எங்களுக்குத் தெரியும்’ என்றும் ‘யாரும் அறிவுரை கூறத்தேவை இல்லை’ என்கிறார்கள்.

பின் ஆண்கள், வேறு பெண்ணையும், பெண்கள் வேறு ஆண்களையும் திருமணம் என்ற பெயரில் செய்து கொண்டும் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்.

ஆரம்பத்தில் முதல் கணவன் அல்லது முதல் மனைவி மூலம் பிறந்த குழந்தைகளை சரிவர வளர்க்கமால் எப்படியோ வளர்கின்றனர்.

ஐந்து அறிவு உள்ள பறவைகள், விலங்குகள் அதனதன் ஜோடியுடன்தான் குட்டிகளைச் சேர்த்துக் கொண்டு வாழ்ந்து வருகிறது. ஆறு அறிவு படைத்த மனிதனுக்கு இதுகூட தெரியாமல் வாழ்கிறான்.

தயவுசெய்து சிந்தித்து செயல்படுவோம்.