சி.சு.செல்லப்பா சந்திப்பு

என் பெயர் சி.சு.செல்லப்பா, எழுத்து பத்திரிகை ஆசிரியர்’ என்று அவர் அடக்கமாகக் கூறினார்.

1975இல் நாகர்கோவில் தே.தி.இந்துக் கல்லூரியில் எம்.ஏ. இரண்டாமாண்டு படிக்கும் மாணவன் நான்.

கல்லூரியின் நுழைவாயிலிலேயே கிழக்கு நோக்கி நம்மை எதிர்நோக்கும் பெரிய கட்டடம் கல்லூரி நூலகம் தான். அதன் தென்புறம் பெரிய மரங்கள் மஞ்சள் பூங்கொத்துடன் காட்சியளிக்கும் வடபுறம் தாழ்வாகப் பரந்து விரிந்த மாமரம் நிழல் தந்து நிற்கும்.

எனக்குப் பரந்த சிந்தனையையும் விரிந்த பார்வையையும் தந்தது இந்த நூலகப் புத்தகங்கள் தாம். நூலகத்திற்குள் சென்றால் ஓர் அமைதி நிலவும் அந்த அமைதியே நமக்கு ஒரு வகையான பயத்தினையும் பக்தியையும் கொடுக்கும்.

கல்லூரியிலேயே எனக்கு அது மிகவும் பிடித்தமான இடமாகும். வகுப்புகள் இல்லாத நேரமெல்லாம் என்னை அங்கு தான் பார்க்க முடியும்.

ஒரு நாள் நண்பகல் உணவருந்திய பின் பூங்கொத்துக்கள் நிறைந்த மரத்தடியில் உள்ள திண்டில் இருந்தேன்.

ஒரு பெரியவர் சற்று அழுக்கேறிய வெள்ளைக் கதராடை அணிந்தவராக என் முன் வந்து நின்றார். தன்னை என்னிடம் அறிமுகம் செய்தார்.

தம்பி! நான் ஓர் எழுத்தாளன் புத்தகங்கள் சில கொண்டு வந்திருக்கிறேன்; யாருக்காவது தேவை என்றால் வாங்கிக் கொள்ளலாம் என்றார்.

எந்த மாதிரியான புத்தகங்களை வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன்.

தம்பி! எல்லாமே சிறுகதைகள் தான், பத்திரிகையில் வெளி வந்தவை என்றார். உடனே நான் எந்தப் பத்திரிகை சார்? என்றேன்.

எழுத்து பத்திரிகையில் வந்தவை என்றார். திடீர் என ஆமா! உங்க பெயர் என்ன? என்று நின்றிருந்த பெரியவரிடம் கேட்டேன்.

அவர் என் பெயர் ‘சி.சு.செல்லப்பா எழுத்து பத்திரிகை ஆசிரியர்’ என்று அடக்கமாகக் கூறினார்.

இதனைக் கேட்ட நான் இடிகேட்ட நாகம் போல் அதிர்ச்சியடைந்தவனாக எழுந்து நின்று இரண்டு கைகளாலும் கரம் குவித்து ‘வணக்கம்’ சொல்லி எனது மகிழ்ச்சியையும் அவரை அடையாளம் காண முடியாது போய்விட்ட வருத்தத்தையும் தெரியப்படுத்தி உணர்ச்சி வசப்பட்டேன்.

காரணம் முதுகலையில் அவரைப்பற்றியும் அவரது கதைகளைப் பற்றியும் எனக்குப் பாடம் இருந்தது. அவர் கதைகளில் சிலவற்றைப் படித்தும் இருந்தேன்.

என் ஆசிரியர்கள் அவரைப்பற்றியும் பத்திரிகை உலகில் ‘எழுத்து’வின் இடம் பற்றியும் அதன் இலக்கியப் பங்களிப்புப் பற்றியும் எனக்குச் சொல்லியிருந்தார்கள்.

கடவுளே என் முன் தோன்றினால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவேனோ அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேன்.

உடன் அவரைப் பெருமையுடன் தமிழ்த்துறைக்கு அழைத்துச் சென்றேன். ஆசிரியர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தினேன்.

உடனே முதுகலை மாணவர்கள் அனைவருக்கும் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. சி.சு.செல்லப்பா சிறுகதை பற்றி உரையாற்றினார். பேராசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சி.சு.செல்லப்பா அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் பிறந்தவர்.

மேல் தட்டு மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையினை மேம்போக்காக ரசித்துக் கொண்டிருந்த தமிழ் இலக்கிய ரசிகனை அடித்தட்டு மக்களிடமும் மற்றும் மனித மனதின் உட்புறங்களுக்கும் அழைத்துச் சென்றவர். இலக்கியத்தை ஒரு இயக்கமாக ஆக்கியவர்.

தன்னுடைய ‘எழுத்து’ என்ற இலக்கியப் பத்திரிகை மூலம் நவீன இலக்கியங்களுக்கும் பல்வேறு தளங்களில் இயங்கிவரும் இலக்கிய சிற்றிதழ்களுக்கும் முன்னோடியாக விளங்கியவர்.

தமிழ் இலக்கியத்தைக் காலத்திற்கு ஏற்றவாறு முன்னெடுத்துச் செல்வதில் எந்த விதமான சமரசங்களுக்கும் அவர் இடம் கொடுக்கவில்லை.

தன்னுடைய வாழ்க்கையினையே இலக்கியத்திற்காக அர்ப்பணித்த மாமனிதர் ‘எழுத்து’ பத்திரிகைக்காகவே தனது சொத்துக்களையும் வாழ்க்கையினையும் தியாகம் செய்தவர்.

இவரது வறுமை நிலையை வலிந்து களைய பலர் முற்பட்டபோது தன்மானத்துடன் அதனை மறுத்தவர். தமிழ் இலக்கியத்தில் சோதனை முயற்சிகளுக்கு அடித்தளமிட்டவர் சி.சு.செல்லப்பா.

வாடிவாசல்’ என்ற ஜல்லிக்கட்டுப் பற்றிய இவரது நாவல் தமிழ் இலக்கியத்தின் போக்கினையே மாற்றியது.

பின்னாளில் தமிழ் இலக்கியத்தைச் செழிக்கச் செய்துவிட்டு வறுமையிலேயே கம்பீரமாக வாழ்ந்து வறுமையிலேயே மடிந்த அவரை நான் எதிர்பாராமல் சந்தித்தது என் வாழ்வில் நான் செய்த பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

அதை இன்று நினைத்தாலும் மனம் புளகாங்கிதம் அடைகிறது.

– சிவகாசி, ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்