வல்லவனுக்கு வல்லவன்!

“ஒரு விற்பனைப் பிரதிநிதி என்றால் அருமையாக டிரஸ் பண்ணவும், அட்டகாசமாக பேசத் தெரிந்தால் மட்டும் போதாது. ‘கில்லர் இன்ஸ்டிங்க்ட்’ (killer instinct) என்னும் ‘செய்து முடி அல்லது செத்து மடி‘ என்ற நியதிப்படி, ஒரு வியாபார ஒப்பந்தத்தை முடித்தால் மட்டும் போதாது; டி.டி அல்லது காஷ் வாங்க வேண்டும் தாமதிக்காமல்!” என்று டெலிபோனில் சென்னையிலிருந்து மானேஜர் சிவகுருவின் ஆங்கில புத்திமதி குண்டுகள் திருப்பூரில் இருந்த விஜய்யின் இதயத்தை துளைத்தன.

விஜய் ஒரு சிறந்த, சாதனைகள் பல புரிந்த விற்பனை பிரதிநிதி. 1995ஆம் ஆண்டின் அகில இந்திய முதல் பரிசை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பவன்.

திருப்பூர் பரந்தாமனிடம் மிகப்பெரிய பிசினஸ் ஒப்பந்தம் முடிந்தும், 10 லட்சம் ரூபாய் பேங்க் டிராஃப்டுக்காக விஜய் ஊசலாடிக் கொண்டிருந்தான்.

ஏனோ தெரியவில்லை, பரந்தாமன் பத்து லட்ச ரூபாய்க்கு டி.டி.யை தயார் செய்வதில் சுணக்கம் காட்டிக் கொண்டிருந்தார்.

சென்னையிலிருந்து சீனியர் மானேஜர்களிடமிருந்து அடிக்கடி எஸ். டி. டி. (STD) போன் தினமும் பணத்திற்காக.

விஜய்யின் பேச்சை நம்பி அவன் மேனேஜர் சிவகுரு, அவர் பேச்சை நம்பி அவர் மேலாளர் சைமன் என்று எம்.டி. வரை கம்பி நீண்டு, வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் தோற்றால்?

தோற்றவன் குருதி கொட்டுவது சேல்ஸ் & மார்க்கெட்டிங் துறையில் சகஜம்.

வெற்றியோ தோல்வியோ, நாளை காலை 11 மணி அளவில் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் விஜய் கட்டாயம் சென்னை திரும்ப வேண்டும். ஏனென்றால் நாளை மறுநாள் ஷெரட்டானில் வருடாந்திர சேல்ஸ் மீட்டிங்.

டென்ஷனோடு மறுநாள் காலை 9 மணிக்கு பரந்தாமன் ஆபீஸ் சென்ற விஜய்க்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

பரந்தாமனின் நெருங்கிய உறவினர் ஒருவர் ஈரோட்டில் இறந்து விட்டதாக கூறி விட்டு அன்று அவர் ஆபீஸுக்கு வரவில்லை!

முதலாளி பெரிய காரியத்திற்கு சென்று விட்டதால் பேக்டரி மானேஜர் முருகேசன்தான் இருந்தார்.

எப்படியும் காலை 11 மணி ரயிலில் முன்பதிவு செய்ததன்படி விஜய் சென்னை சென்று விடுவான் என்பதை அறிந்த முருகேசன் “முதலாளி மதியம் 2 மணி அளவில் ஈரோட்டிலிருந்து வந்து விடுவார்” என்றார்.

‘ரயிலோ 11 மணிக்கு கிளம்புகிறது, பரந்தாமனோ 2 மணிக்குத்தான் வரலாம்’ என்று அறிந்த விஜய் மேலும் டென்ஷன் ஆனான்.

அவன் அங்கேயே உட்கார்ந்திருக்க, உட்கார்ந்திருக்க, முருகேசனுக்கு உள்ளூர் டெலிபோன் அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன.

முருகேசன் மரியாதை கலந்த குரலில், சங்கேத மொழியில் பதிலளிக்க முருகேசனின் உடல்மொழியிலிருந்து, பரந்தாமன்தான் அவருக்கு ஆணைகள் பிறப்பித்து கொண்டிருக்கிறார் என்று அவதானித்தான் விஜய்.

இது போன்ற இக்கட்டான தருணங்களில் அவன் படித்த சுய முன்னேற்ற நூல்கள் அளித்த உத்வேமும், ‘மாற்றி யோசி’க்கும் திறமையும் கைவரப் பெற்ற விஜய் சற்று நேரம் கழித்து, “நான் 11 மணி ரயிலில் சென்னை செல்கிறேன், நாளை மறுநாள் வருடாந்திர சேல்ஸ் மீட்டிங்” என்று சொல்லிவிட்டு விடை பெற்றுக் கொண்டான்.

அவன் சென்னை செல்கிறான் என்பதை அறிந்து நிம்மதி பெருமூச்சு விட்ட முருகேசன், “போயிட்டு வாங்க சார்! டி.டி.எங்கே போய்டப் போவுது; நம்ம முதலாளிக்கு இந்த பத்து லட்சம் எல்லாம் பெரிய விஷயமே இல்லை. மீட்டிங்கெல்லாம் முடிச்சுட்டு வந்து வாங்கிக்கங்க!” என்று மகிழ்ச்சியுடன் விடை கொடுத்தார்.

அந்த வழியனுப்பில் ஒருவித நிம்மதிப் பெருமிதம் இருந்ததை விஜய் உணர்ந்தான்.

முதலாளி இல்லையென்றால் வேலை ஒழுங்காக நடக்காது என்பது தெரிந்த விஷயம். அதனால்தான் ஆர்வமிகுதியால் நான் போய்விட்டேனா? என்று தெரிந்து கொள்ள அடிக்கடி பரந்தாமன் போன் செய்து கொண்டேயிருப்பதை புரிந்து கொண்டான் விஜய்.

பாக்டரியை விட்டு வெளியே வந்த விஜய், தன் விற்பனை பிரதிநிதி அடையாளங்களான டை மற்றும் பேட்ஜை கழற்றிவிட்டு, சாதாரண மனிதனாக பரந்தாமன் ஆபீசுக்கு சற்று எதிரே இருந்த டீக்கடையில் டீயை மெதுவாக அருந்திக் கொண்டு, ஒரு தினசரி செய்தித்தாளில் முகம் புதைத்துக் கொண்டு, பரந்தாமன் ஆபீஸ் வாசலையே உற்று கவனித்துக் கொண்டிருந்தான்.

11.00 மணி கழிந்து சற்று நேரம் கழித்து, ‘விஜய் ரயிலில் சென்றிருப்பான்’ என்று நினைத்து பரந்தாமன் காரில் ஆபீஸிற்குள் நுழைந்தார்.

டீக்கு பரபரப்புடன் பணம் கொடுத்து விட்டு, தினசரியை போட்டு விட்டு விஜய், பரந்தாமன் ஆபீசிற்குள் நுழைந்தான்.

விஜய்யின் அதிரடி வருகையால் பரந்தாமனும் முருகேசனும் செய்வதறியாது நிலைகுலைந்து நின்றனர்.

முதலாளி தன்னை வேலை நீக்கம் செய்து விடுவாரோ என்ற அச்சத்தில் அதிர்ச்சியில் முருகேசன் உறைந்தார்.

காலையிலிருந்து பாக்டரி நிர்வாகத்தை ஒழுங்காக கவனிக்க முடியாமல் டிமிக்கி கொடுத்துக் கொண்டிருந்த பரந்தாமன், விரக்தி அடைந்து “தொலைகிறது போ” என்று டேபிள் டிராயரை திறந்து டி.டி.யை விஜய்யிடம் கொடுத்து விட்டு, இப்பொழுதுதான் “அவசரம் அவசரமாக ஈரோட்டிலிருந்து வந்தேன்” என்று சமாளித்தார்.

ஆயிரம்தான் இருந்தாலும் ‘இவர் நம் மிகப்பெரிய கஸ்டமர்; இவரை இன்சல்ட் செய்யக்கூடாது’ என்று தீர்மானித்து மிக்க நன்றி கூறி கைகுலுக்கி விடை பெற்றுக் கொண்டான் விஜய்.

வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் சென்று விட்டால் என்ன, இன்னொரு ரயில் பிடித்து சென்னை சென்றடைந்தான் வெற்றியுடன் விஜய்.

ஒரு தேர்ந்த விற்பனைப் பிரதிநிதிக்கு ஒரு ‘டெய்ல் கார்னகி’யும் ஒரு ‘நெப்போலியன் ஹில்’லும் ஒரு ‘எட்வர்ட் டி போனோ’வும் எப்பொழுதும் ‘யாமிருக்க பயம் ஏன்?’ என்று உறுதுணையாக இருப்பார்கள்!

ஜெ.ஜெயகுமார்
சென்னை
கைபேசி: 98842 51887

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.