புத்தரின் முதன்மை சீடர்களுள் ஒருவரான மகா காஸ்யபர் ஞானம் பெற்றதும், உலகம் முழுவதும் சுற்ற அவரை அனுப்ப நினைத்தார் புத்தர்.
“காஸ்யபா,
பசித்தவர்களிடம் போ!
தாகம் கொண்டவர்களிடம் போ!
உனக்கு கிடைத்ததை எல்லோருக்கும் பங்கிட்டு வழங்கு!
ஞானத்தைப் பரப்பு!” என்று கூறினார் புத்தர்.
அதற்கு காஸ்யபர், “சுவாமி, நான் ஞானம் பெறுவதற்கு முன்னால் இதைச் சொன்னால் உடனே உங்கள் ஆணையை ஏற்று புறப்பட்டுப் போயிருப்பேன்.
விழிப்புணர்வு என்னுடைய இயல்பு. நான் எப்பொழுது வேண்டுமானலும் அதை அடைய முடியும்.
உங்களை விட்டுப் பிரிந்தால் உங்கள் திருவடிகளை நான் இழக்க நேரிடும். இந்த பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் ஞானத்தை எங்கும் பெறலாம்.
ஆனால் நான் உங்களை விட்டு போய் விட்டால் எப்படி உங்களை வணங்க இயலும்?
உங்களை எப்படி தொடர இயலும்?
நீங்கள் ஏன் இப்படி என்னை விரட்டுகிறீர்கள்?’ என்று கேட்டார்.
“காஸ்யபா, நான் இதைச் செய்து தான் ஆக வேண்டும்.
எல்லோருடைய தாகத்தையும் நான் ஒருவனே நேரில் சென்ற தணிக்க இயலுமா?
நீயே என் கைகள், நீயே என் கண்கள். இப்போது நீயே நான். போ; நான் எப்போதும் உன்னுடனே இருப்பேன்” என்றார் புத்தர்.
“சரி, இரு நிபந்தனைகளின் பேரில் நான் செல்கிறேன்.
எனக்குத் தெரியாமல் நீங்கள் உயிர் விடக் கூடாது.
அந்த வேளையில் நான் உங்களுடன் இருக்க வேண்டும்.
அத்துடன் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதைத் தொடர்ந்து எனக்குத் தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
அப்போதுதான் நீங்கள் இருக்கும் திசையை நோக்கி நான் வணங்க முடியும். உங்களைப் பார்க்க முடியாமல் போனாலும், திக்கு நோக்கிக் கும்பிடவாவது செய்யலாம் அல்லவா?
நீங்கள் என் கண்களில் இருக்கிறீர்களோ இல்லையோ. நான் உங்கள் கண்களில்தான் இருக்கிறேன். அதனால் இந்த இரு நிபந்தனைகளையும் நீங்கள் ஏற்றுக் கொண்டால் நான் உடனே புறப்பட்டு விடுகிறேன்” என்றார் காஸ்யபர்.
“என்னப்பா, நீ விநோதமான நிபந்தனைகளையெல்லாம் விதிக்கிறாயே!
நான் போகும் இடங்களையெல்லாம் பற்றி உனக்குத் தொடர்ந்து தெரிவித்து கொண்டே இருப்பது சாத்தியமா?
அப்புறம் மரணம் பற்றிய விஷயம். இதற்காக நான் மரணத்துடன் சமரசம் செய்து கொள்ள வேண்டி வருகிறது.
என்னைச் சங்கடத்தில் ஆழ்த்துகிறாயே!
நான் யாரிடமும் எதுவும் கேட்கும் வழக்கமில்லை என்பது உனக்குத் தெரியும்.
உனக்காக நான் மரணத்திடம், நீ வரும் வரை காத்திருக்கும்படி கேட்க வேண்டி வருகிறது” என்றார் புத்தர்.
“அப்படியானால் சரி, நான் போகவில்லை” என்றார் காஸ்யபர்.
கடைசியில் வேறு வழியில்லாமல் கௌதம புத்தர் காஸ்யபரின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.
காஸ்யபர் புறப்பட்டார்.
அதன்பின் வந்த நாட்களில் காஸ்யபர் காலையிலும், மாலையிலும் புத்தர் இருக்கும் திசைநோக்கி மண்ணில் விழுந்து புத்தரை வணங்கினார்.
கைகளில் புழுதி படிய, கண்களில் கண்ணீர் வடிய, குரு வணக்கத்தை ஒரு பரவசத்தோடு செய்து வந்தார்.
அதையெல்லாம் கவனித்த மக்கள்,
“மகா காஸ்யபரே, நீங்களே ஞான குருதானே. ஏன் இப்படி இப்போதும் ஒரு சீடனைப் போல, குரு வணக்கம் செய்கிறீர்கள்?” என்று கேட்டனர்.
“புத்தர் பெருமான்தான் என்னுடைய குரு. அவர் உயிர் தாங்கி இருக்கும் வரை, நான் அவருடைய சீடன்தான்.
இப்படி சீடனாக இருப்பது அற்புதமான அனுபவம். குருவின் நிழலில் குளிர்ச்சியாக இருப்பது போன்றது இது.
குரு போய்விட்ட பிறகு, நானே குருவாகி விடும்போது, வெயிலில் இருப்பது போல ஆகிவிடும் அது. அப்போது எனக்கு நிழல் இல்லை.
என்னைத் தடுக்காதீர்கள். என்னை கேள்வி கேட்காதீர்கள். சீடனாக இருப்பது குருவாக இருப்பதைவிட எந்த விதத்திலும் தாழ்ந்ததும் ஆகாது. இரண்டிற்கும் வேறுபாடு இல்லை.
ஒருவிநாடி நேரம்கூட என்னால் அவரை மறந்து இருக்க முடியாது. அப்படி இருப்பது இருளில் தடுமாறுவது போன்றது.
என் வாழ்வில் அவர் ஓர் இனிய பாடலாக வந்தார். ஓர் ஆடலாக வந்தார். ஓர் ஒளியாக வந்தார். என்னை மாற்றியவர் அவர். என்னைப் புதுப்பிறவி எடுக்க வைத்தவர் அவர்.” என்றார் காஸ்யபர்.
புத்தரின் மரண நாள் வந்தது.
அதை அறிந்த புத்தர் காஸ்யபருக்கு தனது மற்றறொரு முதன்மை சீடரான ஆனந்தரிடம் தகவல் சொல்லியனுப்பினார்.
காஸ்யபர் சென்ற பிறகு, ஆனந்தர்தான் அவருடைய பிரதான சீடனாக இருந்தார்.
“ஆனந்தா, மகா காஸ்யபனை உடனே வர ஏற்பாடு செய். மரணத்திடம் தாமதிக்கச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. நான் அப்படி யாரிடமும் கேட்டுப் பழக்கமில்லை.
அதனால் சீக்கிரம் எப்படியாவது அழைத்து வர ஏற்பாடு செய். நாளை காலை உதயத்திற்குள் அவன் வராவிட்டால், நான் மரணத்திடம் கெஞ்ச வேண்டி வந்து விடும். அந்த நிலைக்கு என்னை உள்ளாக்கிவிட வேண்டாம்!” என்றார் புத்தர்.
ஆனந்தர் பல்வேறு திசைகளில் பலபேர்களை அனுப்பினார்.
இறுதியில் மகா காஸ்யபர் வந்து விட்டார். புத்தருக்கு மகிழ்ச்சி.
“நீ வந்து விடுவாய் என்று எனக்குத் தெரியுமப்பா. என்னை நீ சங்கடத்தில் மாட்டி விடமாட்டாய் என்பது எனக்குத் தெரியும். ம்.. சரி… காஸ்யபன் வந்து விட்டான். மரணமே நீ வரலாம்” என்றார் புத்தர்.
புத்த பெருமான் தன் சீடன் மகா காஸ்யபரின் மடியில் உயிர் துறந்தார்.
பல்லாயிரம் மாணவர்கள் அந்தக் காட்சியைக் கண்டனர். காஸ்யபருக்கு மட்டும் எப்படி அந்த பாக்கியம் கிடைத்தது?
புத்தரின் முதன்மை சீடர்களில் ஒருவரான சாரிபுத்தர் சொன்னார்.
“வெளியே போனவர்கள் எல்லாரும் குருமார்களாகத்தான் மாறிப் போனார்கள். அவர்கள் தம் குருவை மறந்து போனார்கள்.
காஸ்யபர் ஒருவர் மட்டுமே, வெளியில் சென்ற பிறகும் சீடராகவே இருந்தார்.
காஸ்யபர் ஞானச் செல்வம் மிக்கவர். அவர் சிறந்த சீடராக இருந்ததால் இப்போது குருவாகிறார்”
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!