சுந்தர ஆவுடையப்பன் உரை ‘தமிழ்’ அதுவும் ‘சங்கத்தமிழ், தென்றல் காற்று’ என அனைவரையும் வருடிச் சென்றது.
24.11.2022 அன்று விருதுநகர் புத்தகத் திருவிழாவில் இரு வல்லவர்களின் (வல்லுநர்களின்) உரை வீச்சு.
முதலாவதாக கும்கி மற்றும் காக்கா முட்டை திரைப்படப் புகழ் ஜொ. மல்லூரி, அடுத்ததாக கோடைப் பண்பலை முன்னாள் இயக்குநர் முனைவர் சுந்தர ஆவுடையப்பன்.
கவிதைத் தேன் அடை மழையாய் ஜொ. மல்லூரி சொற்பொழிவு முடிந்த பின்னர் ‘தமிழ்’ அதுவும் ‘சங்கத்தமிழ், தென்றல் காற்று’ என வருட வந்தது முனைவர் சுந்தர ஆவுடையப்பன் அவர்களின் உரை.
புத்தகக் கண்காட்சியின் அணில் இல்லச்சினை பார்த்தவுடன் தனது நினைவுக்கு வந்த “அணிலாடும் முன்றில்” குறுந்தொகைப் பாடலின் பொருள் கூறினார்.
பின்னர் ‘யாரைத்தான் நம்புவதோ‘ எனும் தலைப்பில் உரையாடினார் பெருந்தகை.
‘நம்பு’ என்ற சொல்லுக்கு தொல்காப்பியம் தரும் பொருள் ‘நசை’. நசை என்றால் “விருப்பம்” அதாவது விரும்புவதால் வருவது நம்பிக்கை எனக் கூறினார் முனைவர்.
பின், ‘தன்னை தூக்கிப் போட்டு பிடிக்கும் தந்தை, தன்னை பிடித்து விடுவான்’ என்ற நம்பிக்கையில் சிரிக்கும் குழந்தை மற்றும் ஓரு சிறிய ஆலம் பழத்தினுள் நூற்றுக்கும் மேற்பட்ட ஆல விதைகளை… இல்லை இல்லை ஆல மரத்தினை அடக்கி வைத்திருக்கும் இறைவனால், ஊசியின் காதுக்குள் யானையினை கண்டிப்பாக செலுத்திவிட முடியும் என நம்பிய செருப்பு தைக்கும் தொழிலாளி பெற்ற முக்தி வரம் குறித்த சுவாரசியமான கதை மூலம் விளக்கினார்.
இயற்கையுடன் இயைந்து வாழ்ந்து அதன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்த பரம்பு மலையின் பாரி தன்னை முப்புறமும் முற்றுகை இட்ட மூவேந்தர் படைகளிடம் இருந்து தனது குடிகளை எவ்வாறு காத்தான் என்ற கபிலர் பாடலின் பொருளினை இவர் அலசி ஆய்ந்த விதம் இதம்.
பரம்பினை சுற்றிய மூவேந்தர் படை பாரிக்கு தந்தது பொருளாதாரத் தடை.
இதனால் அவன் நம்மிடம் தஞ்சம் அடைவான் என்பது மூவேந்தர் மனத்திடை நினைப்பு.
நடந்தது என்ன? கபிலர் சொல்கிறார்
‘மூங்கில் அரிசியும், தேன் சுளைப் பலாவும், வள்ளிக்கிழங்கும், தேனும், பஞ்சமின்றி பரம்பில் உண்டு.
அவன் தஞ்சமடைய உங்களிடம் வர மாட்டான். உங்களுக்கு அவன் நாடு வேண்டுமென்றால் படை வேண்டாம்; கலை போதும்.
நல்ல கலைஞர்களை அனுப்புங்கள். அவர்கள் திறமையினை அவனிடம் காட்டி பரிசாக நாட்டினைக் கேட்டால் தந்து விடுவான் பாரி’ என்று.
தொடர்ந்து நம்பிக்கையின் வெற்றிகளை சின்னஞ்சிறு கதைகள் மூலம் விளக்கினார் பெருந்தகை.
அவர் கூறிய ஏழு உலக அதிசயங்களான பார்த்தல், பேசுதல், கேட்டல், சிரித்தல், சுவாசித்தல், உணர்தல் & சிந்தித்தல் எனக் கேட்டு அதிசயித்தோம்.
ஒரு உளி சுத்தியலுடன் மலையினை தகர்த்து வழி உருவாக்கக் கிளம்பிய இளைஞனின் நம்பிக்கை வார்த்தைகளைக் கண்டு ‘இவன் நம்மை தகர்த்து விடுவான்’ என்று பயந்த மாமலைக் கடவுள், பாதைக்கு இடம் விட்டு மலையினை சற்று நகர்த்தினார் என்று மாசேதுங்குக்கு பிடித்த சீனக் கதையினைக் கூறினார்.
இறுதியாக ” கணியன் பூங்குன்றனார் எழுதிய “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றப் பாடலின் அனைத்து வரிகளுக்கும் பொருள் கூறி சுந்தர ஆவுடையப்பன் உரை நிறைவு செய்தார்.
விழாவில் நிறைவாக நன்றி உரை வழங்கிய துணை ஆட்சியர் நன்றி கூறிய விதம் ரொம்ப அருமை.
விழா சிறக்கக் காரணமான மாவட்ட ஆட்சியர் முதல் வளாகத்தின் சுத்தம் காக்கும் சுகாதார பணியாளர்கள் வரை ஒவ்வொரு காரண கர்த்தாக்களையும் விளித்து / நினைவுறுத்தி அதே சமயம் அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் சொன்ன பாங்கு இதமாக இருந்தது.
‘அன்பிற்கு மேலான சக்தியில்லை அறிவை விட சிறந்த கத்தியில்லை’ என இவர் உரைத்தது, ‘பிறந்து சிறந்த மொழிகளுள் சிறந்தே பிறந்த மொழி தமிழ் மொழி’ என்பதனை பறைசாற்றியது மகிழ்ச்சி.
விழா சிறக்க ஏற்பாடுகளை சீரோடும் சிறப்போடும் செய்த மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டுகளும் நன்றிகளும்.
முனைவர் பொ.சாமி
வேதியியல் இணைப் பேராசிரியர்
வி.இ.நா. செந்திக்குமார நாடார் கல்லூரி
விருதுநகர் – 626 001
கைபேசி: 9443613294