முல்லை வனக் காட்டின் ராஜாவான சிங்கத்திற்கு வயதானதால் உடல்நலம் குன்றியது. இதனால் அக்காட்டில் வசித்த ஓநாய் ஒன்று சிங்க ராஜாவை அருகே இருந்து கவனித்துக் கொண்டது.
காட்டில் இருந்த எல்லா விலங்குகளும் அவ்வப்போது சிங்க ராஜாவை நலம் விசாரித்துக் கொண்டன. அப்போது ஒருசமயம் நரி ஒன்று சிங்க ராஜாவை நலம் விசாரிக்க வந்தது.
ஓநாய் சிங்க ராஜாவிடம் கோள் மூட்டும் விதமாக “மகாராஜா கவனித்தீர்களா? நீங்கள் திடகாத்திரமாக இருந்த போது உங்களை எப்படியெல்லாம் நரி பாராட்டியது? ஆனால் உங்கள் உடல்நிலை குன்றியதும், நரி இதுவரை உங்களை வந்து பார்க்கவில்லையே?” என்று கூறியது.
உடனே நரி சுதாரித்துக் கொண்டு சிங்க ராஜாவிடம் “மன்னிக்க வேண்டும் மகாராஜா. ஓநாய்க்கு ஓர் உண்மை தெரியவில்லை. நீங்கள் விரைவில் குணம் பெற மருந்தைத் தேடி இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தேன். அதனால்தான் உங்களைக் காண வர இயலவில்லை.” என்று பணிவுடன் கூறியது நரி.
“அப்படியே மருந்து கிடைத்ததா?” என்று ஆர்வத்துடன் கேட்டது சிங்கம்.
“கிடைத்திருக்கிறது, மகாராஜா! ஓநாயைக் கொன்று அதன் தோலை உரித்து, உடனே நீங்கள் உடல்மீது போர்த்திக் கொண்டால் நோய் குணமாகி விடும் என்று முதிய மருத்துவர் ஒருவர் சொன்னார்” என்று நரி கூறியது.
உடனே சிங்கம் ஓநாயின் மீது பாய்ந்து, அதைக் கொன்று அதன் தோலைக் கிழிந்தது.
ஓநாயின் கோள் மூட்டும் பேச்சு அதனைக் கொன்றது. இதையே தன்வினை தன்னைச் சுடும் என்று பெரியவர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!