தாமரை குறும்படம் ஊனமுற்ற மன நோயாளி மகளைக் கொண்ட ஒரு தாயின் பாசப் போராட்டத்தை எடுத்துக் காட்டுகிறது.
பிறப்பின் அதிசயங்களில் அங்கக் குறைபாடும் ஒன்று. அதன் மூலமாகத் தொடர் பிணைப்புகளுள் ஏற்படும் சொல்ல முடியாத துயரங்களும் வேதனைகளும் பல திறத்தன.
செல்வந்தர் வீட்டில் இதன் ரூபமும், ஏழை வீட்டில் இதன் ரூபமும் அதன் தொடர்ச்சியும், வேறு வேறாய் இருந்தாலும் மனதின் அடுக்குகளை அவை இரத்தக்காடாக மாற்றுபவைகளாகவே இருக்கின்றன.
தூரிகை எடுத்து இதன் வலியை வரையும் எந்த ஓவியனின் நிறமும், ஓவியத்தின் நிறமும் அதல பாதாளத்தின் கருமையாகவே இருந்து விடுகிறது.
எங்கு எது எரிந்தாலும் அதில் தீய்ந்த வாசனையே மூக்கைத் துளைக்கிறது. சூட்டின் தகிப்பும், முள் தைத்த கடுப்புமாகச் சதா மனதை நெருடிக் கொண்டே இருக்கின்றன.
உறுப்புகளில் ஒன்றோ, பலவோ செயல்படாது, அதோடு ஒழுங்கற்ற மூளையின் செயல்பாடு கொண்ட நம் உறவினர்களை நாம் எந்த அளவிற்குப் புரிந்து வைத்து அவர்களுக்காக உதவி இருக்கிறோம் என்றால், பெருமளவு, அவர்களை உணரவில்லை என்பதுதான் பதிலாக இருக்க முடியும்.
இதுதான் இக்குறும்படத்தின் மாபெரும் கேள்வியாக இருக்கிறது.
நமக்கு இப்படி யாராவது ஒருவரைத் தெரிய வாய்ப்பு இருக்கிறது.
அவர்களுக்கு நம்மைப் போன்ற எல்லா உணர்வுகளும் இருக்குமே என்று இதுவரை நாம் யோசித்து அவர்களிடம் பேசி இருப்போமா? இல்லை என்று தான் பெரும்பாலும் பதில் வரும்.
இத்தகு மனப்போராட்டங்கள் கொண்ட இந்த இடத்தை மையம் கொண்டுதான் “தாமரை” எனும் குறும்படம் வெளிப்பட்டிருக்கிறது.
தொடக்கம் முதல் இறுதி வரை உளவியல் அணுகுமுறையில் கொண்டு வரப்பட்ட காட்சி வெளிப்பாடுகள், சமூகப் பிரச்சினையான ஊனமுற்றவர்களை ஒதுக்கித் தள்ளுதலைக் கச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கின்றன.
அற்புதமான படைப்பு
தாமரை குறும்படத்தில் வரும் தாய் செல்லம்மா, வேதனைகளின் விளிம்பில் வாழ்க்கையை அழகுற நடத்திய புதுமைப்பித்தனின் செல்லம்மாவை நினைவு படுத்தும் அற்புதமான படைப்பாகும்.
தாய் எனும் ஒரு சொல்லை 21 ஆம் நூற்றாண்டில் தூக்கிப் பிடித்துத் தாய் என்பவள் ‘நிகரற்றவள்’ என உரத்துக் கூறும் மாட்சிமை பொருந்திய குறும்படம் தான் தாமரை எனும் இக்குறும்படமாகும்.
தன் உயிர் போனாலும் பரவாயில்லை தன் குஞ்சுகளைப் பாதுகாக்க வேண்டும் என்று பாம்பினிடத்தில் கோபத்துடன் போராடும் தாய்க்கோழியின் வீரத்தை செல்லம்மாவிடம் காண நேருகிறது.
உலகில் தாய்மை அவ்வளவு புனிதமானது என்பதை மீண்டும் மீண்டும் பதிய வைத்துக் கொண்டே இருந்தாலும் இலக்கியத்திற்கு இன்னும் சலிப்புத் தட்டவே இல்லை என்பதை நிரூபிக்கும் படம் தான் தாமரை எனும் இக்குறும்படமாகும்.
செல்லம்மாவிற்கு 4 பெண் குழந்தைகள். அதில் ஒரு குழந்தை மனநலம் பாதிக்கப்பட்ட ஊனமுள்ள ஒரு பெண்.
செல்லம்மாவின் கணவன் வேலையில்லாத குடிகாரன். வறுமை வாழ்க்கையில் வாழும் இவளின் துயரங்களைச் சொல்வதாக இக்குறும்படம் காணப்படுகிறது.
இன்னல்களில் கதை ஆரம்பித்துத் துன்பம் மேல் துன்பம் எனக் கதைகளை அடுக்கிக் கொண்டே போய், உச்சத்தில் நின்று அப்படியே ஒவ்வொரு சிக்கலும் தீர்க்கப்பட்டுத் திடீர் திருப்பமாகச் கதை ஜிவ்வென்று வேறு திசை நோக்கிப் பறந்து, தீர்வைத் தந்து விடாமல், எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனப் பார்வையாளர் மனநிலைக்கே அதை விட்டுவிட்டு இருப்பது கதைசொல்லலின் புதுமையாகும்.
தந்தை மகள்களை எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என நினைக்கிறார்.
ஆனால் முடியவில்லை. தன் இயலாமையினால் துடிதுடிக்கிறார். எனவே, மனநோயாளியாகவும் ஊனமுற்றவராகவும் இருக்கும் தன் கடைசி மகளைத் தானே கொன்றுவிட நினைக்கிறார்.
அவரும் மன நோயாளியாக மாறுவதற்கு அவரின் இயலாமையும் ஒரு காரணமாக மாறுகிறது.
தன் மகள் தாமரையைக் கொல்ல நினைக்கும் அவரின் செயலால், கடைசியில் வருத்தப்பட்டுத் தாயிடமும் மனைவியிடமும் தன் தவற்றுக்காக மன்னிப்பு கேட்கப் பின் தொடர்ந்து செல்லுகிறார்.
மனிதன் சந்தர்ப்பத்தின் லாபகங்களில் சிக்கி நியாயத் தர்மங்களை மறந்து விடுகின்றான் என்பதைத் தந்தை கதாபாத்திரம் வழி இயக்குநர் கூறுகின்றார்.
தாய், தன் குழந்தை எப்படிப் பிறந்தாலும் தனக்குப் பொக்கிஷம் தான் என்று நினைக்கின்றவள். எப்படியும் அவள் குணமாகி விடுவாள் எனக் கோயில் கோயிலாகச் சுற்றுகிறாள்.
தன்னையே வருத்தி கடவுளிடம் மன்றாடுகிறார். தனக்காக வாழாமல் தன் ஊனமுற்ற மகளுக்காகவே வாழ்கிறாள்.
தன் மகளைக் கொன்று விட நினைத்த தன் கணவனையே தூக்கி எறிந்து விட்டுச் செல்கிறாள்.
குறும்படத்தின் சிறப்பு
உச்சக்கட்டமான கதையில் தாய் கதாபாத்திரம் மிக உயர்வான இடத்தைப் பெற்றிருக்கிறது.
கோபம், பரிதவிப்பு, உச்சக்கட்டத் துயரம், இயலாமை, பக்தி, பாசம், அரவணைப்பு, ஆறுதல், புன்சிரிப்பு என எத்தனை எத்தனை உணர்வுகள். தாயாக நடித்த நடிகை அற்புதம் செய்திருக்கிறார்.
திரைக்கதையில் முன் பின்னரான கதை வைப்பு சிறப்பாக இருக்கிறது.
மகளுக்கு விஷம் வைக்கும் காட்சியை திரைக்கதையில் கடைசியில் வைத்தது அருமை.
கதையின் தொடக்கத்தில் சிறுத்தை அம்மாபேட்டையில் ஆடுகளை இழுத்துச் சென்று விட்டன என ஆடுமேய்ப்பவன் கூறுவதும், பாட்டியும், தாமரையும் அப்பகுதிக்குள் சென்று காணவில்லை என்பதும், கடைசியில் அப்பகுதியிலேயே நான்கு பேரும் சுற்றித் திரிவதும், பார்வையாளர்களுக்குக் கதையின் வேறொரு களத்தை அமைத்துத் தருகின்றன.
ஒரு விதமான பயத்தோடும் எதிர்பார்ப்போடும் கதையை நோக்குவதற்குத் திரைக்கதை இக்களத்தை உருவாக்கி இருக்கிறது எனலாம்.
மனிதர்கள் உலவும் பகுதியில் அமைதி இல்லை. சிறுத்தைகள் உலவும் பகுதியில் அமைதி இருக்கிறது.
மனிதர்கள் சிறுத்தைகளை விட மோசமானவர்களாக மாறிவிட்டனர் என்பதைக் குறியீடாய்த் திரைக்கதையில் தந்துள்ளார் இயக்குநர்.
எம். லோகநாதன் இயக்கிய ’லில்லி’ எனும் குறும்படத்தில் ஊனமுற்ற பெண்ணின் சோகமான மனம் வெளிக்காட்டப்பட்டது.
ஆனால், தாமரையோ அவளின் துயரங்களை அவளை அறியாதவளாக இருக்கிறாள். இதை இயக்குநர் பல இடங்களில் நுட்பமாகப் பதிவு செய்துள்ளார்.
அவள் பட வேண்டிய துயரங்களின் வலியைத் தாயும் பாட்டியும் மேல் அதிகத் துயரமாக அடைகின்றனர் என்பதைத் திரைக்குள் கொண்டு வந்து பார்வையாளர்களின் மனதை கனமாக்குகிறார் இயக்குநர்.
சிறுத்தை கொன்று போட்டிருக்கலாம் என நம்ப வைக்க, ரத்தக்கரை படிந்த தாமரை மற்றும் பாட்டியின் ஆடைகளை புதரில் போட்ட காட்சியின் பின்புல அர்த்தம் தான் புரியவில்லை.
துன்பங்களுக்கெல்லாம் காரணம் மற்றவர்கள் தானென்று மனிதர்களால் மிக எளிதாக அடையாளப்படுத்தி விட முடிகின்றது.
அந்தத் துன்பத்தை மாற்றிவிட எவ்வித முயற்சியும் எடுத்து விடுவதில்லை.
அப்படி இல்லாமல் தாய் தன்னிச்சையாகத் துன்பத்தைக் களைய முனைந்து பெரும் சவால்களைச் சந்திப்பதாக இக்குறும்படத்தின் கதை அமைந்திருக்கிறது.
இக்கதையைப் பார்க்கும் பொழுது, ஒவ்வொரு பெண்ணும் சாதனைப் பெண்ணாக மாறுவதற்குக் குறும்படம் உறுதுணையாக இருக்கும் என்பதை உறுதியாகக் கூறமுடியும்.
இசையும், ஒளிப்பதிவும், எடிட்டிங் ஆகிய இம்மூன்றும் இக்குறும்படத்தை வேறு ஒரு நிலைக்குக் கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது.
இசையமைப்பாளரும், ஒளிப்பதிவாளரும், படக்கலவை செய்தவரும் கலை ஓவியமாக இக்குறும்படத்தை உருவாக்கித் தந்திருக்கின்றனர்.
மூ. சக்திவேல் அவர்களின் கலையில் பின்புல வடிவமைப்புக்கள் நேர்த்தியாய் இருக்கின்றன.
சுக முருகன் அவர்களின் ஒளிப்பதிவில் கிராமத்தின் அழகையும், அழுகையின் வலியையும் உணர்வு குறையாமல் வெளிப்படுத்தியுள்ளார்.
முழு நீளக் கதையான இக்குறும்படம் அழகாகக் குறைக்கப்பட்டுத் தெளிவான புரிதலோடு கூறியிருப்பதற்குக் காரணம் இக்குறும்படத்தின் தொகுப்பாளர் ஆவார். அவர் அற்புதமான வேலையைச் செய்திருக்கிறார்.
இயக்குநர் ரவிசுப்பிரமணியன் கைதேர்ந்த ஆவணப்பட இயக்குநர்களில் மிக முக்கியமானவராகவும், கவிஞராகவும், இன்னும் பன்முகம் கொண்டவராகவும் விளங்குகிறார்.
சமூகத்திற்கான விழிப்புணர்வைத் தோற்றுவிக்கும் இக்கலைப் படைப்பு அவரின் சிறந்த படைப்பாக அமைந்திருக்கிறது.
கதையின் தெளிவு, திரைக்கதையில் நவீனம், புதுமுக நடிகர்களிடம் சிறப்பாக நடிப்பை வாங்கியது என இவை அனைத்தும் இயக்குநரின் அனுபவத்தையும் மற்றும் திரை இலக்கிய ரசனையையும் வெளிப்படுத்தி நிற்கின்றன.
பாடல்கள்
இக்குறும்படத்தில் நான்கு பாடல்கள் கதையோட்டத்திற்குப் பெரும் துணையாக இருக்கின்றன.
”நாவல் துவர்க்குமோ
இலந்தை புளிக்குமோ
இப்படியா கசப்பு இருந்திட்டு போகட்டுனு
சிந்திக்கின்ற மனுசனுக்கு
தெரியாத சேதியெல்லாம்
சிறுத்தைக்குத் தெரியுமா?
சீர் தூக்கித்தான் பார்க்குமா?”
என்ற பாடல் மனதை உருக்கிறது.
”என்ன அமைதி இது,
யார் செஞ்ச பாவமிது”
என்ற பாடல் ஒட்டுமொத்த வலிகளையும் எடுத்துக் கூறுகிறது.
”விதி கிடக்குது விதி” என்ற பாடல் புத்துணர்ச்சியைத் தருகின்றது.
பாடலாசிரியர் ஜெயநதி எதார்த்த வரிகளால் வலிகளை உணரவைத்திருக்கின்றார்.
The paper boy, the children of Helen போன்ற குறும்படங்கள் சிறுவர்களின் வாழ்வியல் துன்பத்தை வெளிப்படுத்தும்.
அவ்வகையில் சர்வதேசப் பார்வையாளர்களையும் பல குறும்பட விருதுகளையும் இக்குறும்படங்கள் பெற்றன.
அதே வரிசையில் சமூகத்தில் தள்ளி வைக்கப்பட்டு இருக்கும் மனநலம் பாதித்தோர் மற்றும் ஊனமுற்றோரின் வாழ்வியல் துன்பத்தைப் பேசும் இக்குறும்படமும் உலகளாவிய கவனத்தைப் பெரும். பல விருதுகளையும் சர்வதேச அளவில் பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.
தாமரை குறும்படம் பாருங்கள்
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!