திக் திக் காட்சிகள்

திக் திக் காட்சிகள்…

அந்த மனை சுமார் 50 வருடங்களுக்கு மேலாக காலியாகவே இருந்தது. அதன் எதிரே அரசினர் ஆரம்பப் பள்ளிகூடம்.

அம்மனையில்தான் தேர்தலின் போது ‘பூத்’ அமைத்து ஓட்டுப் போட எல்லா ஏற்பாடுகளும் செய்து கோலகலமாக இருக்கும். இருபுறமும் வீடுகள்.

அந்த வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அந்த மனைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. அது ஒரு சாபமாக பார்க்கப்பட்டது.

அந்த மனை சுமார் 5 கிரவுண்ட்க்கு மேல் என்று சொல்லிக் கொள்ளலாம்.

ஒருவழியாக அந்த தெரு கவுன்சிலர் அங்கே ஷெட் அமைத்து 10 கார்கள் நிற்பதற்கு வழி வகை செய்தார். இதன் மூலம் அங்கே மக்கள் நடமாட்டம் அதிகரித்தது.

ஷெட் அமைத்து ஒருசில மாதங்கள்தான் ஆகி இருக்கும்.

ஒருநாள் காலை சுமார் 8 மணி அளவில் அங்கு கூட்டம் கூடியது. அதுவே சிறுக சிறுக பெருகி போர்க்களமாக மாறியது. எங்கும் கூச்சல், குழப்பம். தெருவே அல்லோல பட்டது.

காவல்துறைக்கு செய்தி அனுப்பப்பட்டு எஸ்.பி. அங்கு வந்து கூடினார். மனை சுத்தமாக தடுக்கப்பட்டு அங்கு செல்ல யாவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

செய்தி அறிந்து ஊடகங்கள் அங்கு கூடின. சமூக ஊடகங்கள் அதிகமாக இருந்ததாக பார்த்தவர்கள் கூறினார்கள். மேலும் காமிராக்கள், செய்தி சேகரிப்பவர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் கூடியதால் அங்கே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

பிறகு மனையின் கூட்டம் பற்றிய செய்தி வெளியானது. அதுவே ‘பிரேக்கிங் நியூஸ்’ ஆக மாறியது.

மனையில் நிற்க வைக்கப்பட்டு இருந்த கார்களின் பின் வரிசையில் உள்ள ஒரு வண்டியின் பின் இருக்கையில் ஒரு நபர் சடலமாக மீட்டு எடுக்கப்பட்டு இருக்கிறார் என்றும், இது பற்றிய முழுவிவரம் பிறகு தெரிவிப்போம் என்றும் எஸ்.பி. தன் முதல்கட்ட அறிக்கையாக மீடியாவிற்குச் சொன்னார்.

அதற்குள் அந்த மனை பற்றியும், அந்த மனையின் வாயிலாக வந்த கதைகளும் யு-டியூப் முதல் உள்ளூர் பாட்டி வரை உடனே பேசு பொருள் ஆனது.

கவுன்சிலர் அதற்குள் ‘தலைமறைவு’ என்கிற பிளாஸ் நியூஸ் பின்னோட்டமாக ஒளிபரப்பப்பட்டது.

தடயவியல் மற்றும் உளவுத்துறை சார்ந்த நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு காரணங்கள் சேகரிக்கப்பட்டன. அவர்கள் செய்தி சேகரிக்க உதவியவர்கள் எதிரே இருந்த பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பக்கத்து வீட்டு சொந்தக்காரர்கள்.

எல்லோரிடமும் ஒரே மிரட்சி; பதட்டம்.

ஒருவழியாக அந்தக் காரை அப்படியே எடுத்து வந்தனர். இப்போது முழுவதும் மறைக்கப்பட்டு இருந்தது.

முன்புறம் இருந்த டிரைவர் மட்டும் எல்லா மீடியாக்களுக்கும் தெரியும்படி இருந்தார். உள்ளே உள்ள அந்த இறந்த நபரைப் பற்றிய செய்தி இன்னும் வெளிவரவில்லை.

மதியம் சுமார் ஒருமணிக்கு மேல் ஆகி இருந்தது. கூட்டம் சற்று கலைந்து இருந்தாலும் ‘வேலை இல்லாதவர்கள்’ எங்கள் தெருவில் சற்று அதிகம் என்றே சொல்ல வேண்டும்.

பல வகையான போட்டோக்கள் எடுக்கப்பட்டன. கைரேகை நிபுணர்கள் தங்கள் ரகசியத்தை கட்டிக் காத்தனர். தமிழ்நாடு முழுவதும் எங்கள் தெருவும் பள்ளியும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பு செய்யப்பட்டது.

பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு எங்கள் தெருவிற்கு உள்ளே வெளியே செல்லும் பாதைகள் மூடப்பட்டன.

அன்று மாலை மாநகர காவல் ஆணையர் சென்னையில் இருந்து மீடியாக்களுக்கு “காரின் உள்ளே சடலமாக கண்டு எடுக்கப்பட்ட நபரை அடையாளம் கண்டுவிட்டோம்; அவர் ஒரு சீனாவிலிருந்து வந்த ஆசியன்” என பதில் கூறினார்.

குற்றவாளியை ஒருவாரத்தில் பிடித்து விடுவோம் என்று அவர் தன் முதல் கட்ட அறிக்கையில் சொன்னது வைரல் ஆனது.

அடுத்து வந்த கவுன்சிலர் காட்டுமன்னார்குடி அருகே பிடிபட்டார் என்ற செய்தியும் பேசு பொருள் ஆனது.

எங்கள் தெரு கவுன்சிலர் கூறுகையில் “செய்தி கிடைக்கப் பெற்றேன்; வதந்திகளை நம்ப வேண்டாம். என் மகள் வழி பேத்தி பிறந்தமைக்கு குடும்பத்துடன் திருப்பதி சென்று திரும்பி வருகிறேன். வரும் வழியில் என் மைத்துனர் வீட்டில் இருந்து பேசுகிறேன்” என்று மிகுந்த கவலையில் சொன்னார்.

மேலும் அவர் “என் பங்கிற்கு எல்லா ஒத்துழைப்பையும் அரசுக்கும், சம்பந்தப்பட்ட துறைக்கும் முழுமனதுடன் எந்த ஒரு பாரபட்சமின்றி எடுத்துரைக்க கடமைப்பட்டு இருக்கிறேன் என்பதை உங்கள் (செய்தி மற்றும் காட்சி ஊடகங்கள்) வாயிலாக மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்” என்பதாகவும் சொன்னார்.

அதற்குள் அங்கே உள்ள மீடியாக்கள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தெருவாசிகளிடம் ‘மனை பற்றியும் , மனையின் மர்மம்’ பற்றியும் பேட்டி எடுத்துக் கொண்டு இருந்தனர்.

இத்தகைய பேட்டியை பார்க்க அங்கே கூடிய மக்கள் கூட்டத்தை கலைக்க சிறிதாக லத்தி சார்ஜ் செய்ய வேண்டி இருந்தது.

எல்லாவற்றையும்விட தெருவின் ஆஸ்தான ஜோதிடர் ஒருவரின் பேட்டி 10 நிமிடங்கள் நீடித்தது. அவர் ஏற்கனவே அங்கு பில்லி , சூன்யம் வைத்து இருப்பதாகவும் இந்த பேயை விரட்ட கேரளா சென்று மாந்திரியம் கற்று வந்ததாகவும் தெரிவித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இவ்வாறாக செய்திகள் வந்த வண்ணமே இருக்க, இதை தடுக்க அரசு உடனே செயல்பட்டு ஒரு கட்டளையை பிரகடனப்படுத்தியது.

“யாரும் எந்த ஒரு மீடியாவிற்கும் எந்த ஒரு தகவலையும் சொல்லக்கூடாது; அப்படி மீறினால் அவர்களுக்கு 2 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்” என்பதுதான் அது.

இதுவும் ஒரு “போக்சோ” சட்டம் மாதிரி இருப்பதாக சோஷியல் மீடியாக்களில் மீம்ஸ்கள் ஓடின.

நிலைமை சகஜமாக 10 நாட்கள் ஆகின. மீண்டும் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்லத் தொடங்கினர்.

அதற்கு பிறகு 15 நாட்கள் கழித்து வந்த அரசு செய்தியில்,

‘அந்த பகுதியில் ஏதோ வீரன் இருப்பதாகவும் அங்கே செல்லக் கூடாது என்கிற செய்தியும் அறிந்தோம்; நாங்கள் ஊர் மக்களின் மன நிலையை நன்கு அறிந்து இருக்கிறோம். ஆகவே அமைதி காத்து ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

இறந்து போன நபர் ஒரு அயல் நாட்டுக்காரர் என்பதால் , நாங்கள் டெல்லியில் உள்ள தூதரகம் ஜெனரல்-ஐ தொடர்பு கொண்டு இது வரை நடந்த விசாரணை அறிக்கையை மத்திய அமைச்சகத்திடம் சமர்பித்து உள்ளோம்.

ஆகவே இது குறித்து அறிய விரும்பினால் பொதுமக்கள் அரசு இணையதளத்தை அணுகலாம்.

உங்கள் சந்தேகங்களையும் காவல்துறைக்கு தெரியப்படுத்தினால் துப்பு துலங்குவதில் பெரும் உதவியாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.

இதில் ஒரு வெளிநாட்டு பிரஜை சம்பந்தப்பட்டு இருப்பதால், எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கக் கூடாது என்பதில் இந்திய அரசின் வெளியுறவுத் துறை கண்காணிப்புடன் செயல்பட்டது என்று தான் சொல்ல வேண்டும். ” என்று முதன்மை செயலாளர் செய்தி வெளியிட்டு இருந்தார்.

அதே சமயத்தில்,

‘உங்கள் ஊர் கவுன்சிலர் மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்று நல்ல பல காரியங்களை செய்து உள்ளார். ஆகவே எந்த ஒரு வதந்தியையும் நம்ப வேண்டாம்’ என்று பள்ளியில் பெரிய விளம்பரம் செய்யப்பட்டது.

இவ்வாறாக ஒருமாதம் சென்று விட்ட நிலையில் மக்கள் அமைதியை இழந்து தத்தம் வேலைகளை பார்ப்பதில் மும்முரமாக இருக்கத் தொடங்கினர்.

தற்போதைய செய்தியாக “அடியார்க்கு நல்லான்” என்கிற செய்தி ஊடகம் ஒரு தகவலை பரப்பியது.

அதாவது , இதுவரை கிடைத்த தகவல்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் எல்லோரும் ஒன்றாக நினைத்த ஒரு விஷயம் இங்கே ‘வீரன்’ இருப்பது என்பது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை.

சடலம் இருந்த கார் தவிர்த்து மற்ற கார்கள் அதே தெருவில் அணி வகுத்து நின்றன.

‘வீரன் பற்றிய அரசு தகவல்களை மக்கள் நம்புவதாக இல்லை. இது ஒரு சாமியாரிடம் இருந்து வந்து இருக்க வேண்டும் என்பது அவர்கள் நம்பிக்கை’ இப்படியாக ஒவ்வொருவரும் தத்தம் கருத்துக்களை காட்சி ஊடகத்திற்கு பகிர்ந்த வண்ணம் இருந்தனர்.

அவர்களின் முழு நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு ‘இந்த பகுதியை மனிதர்கள் செல்ல தடைசெய்யப்பட்ட பகுதி’ என்று அறிவிக்க வேண்டும் என்பது தான். அப்படி இல்லையேல் இது ஒரு மாபெரும் போராட்டமாக மாறும் என்றும் எச்சரித்தனர்.

எதிர்க்கட்சிகள் இதில் குதிப்பதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்று அரசும் முன் வந்து அவ்வாறே செய்தது.

“பேய்கள் ஜாக்கிரதை “-அத்துமீறினால் அதிகபட்சமாக 10 வருட கடுங்காவல் தண்டனை என்று அறிவிக்கப்பட்டது.

மனையின் அருகே கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டன. அங்கே ராட்ச மின் கம்பம் நிறுவப்பட்டது. அது அந்த தெருவிற்கே நல்ல வெளிச்சத்தை தந்தது. மக்கள் மகிழ்ச்சி உற்றனர்.

ஒருமாதத்திற்கு பிறகு, தெரு கவுன்சிலரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில் அவரின் தாய்மாமனும் அதே தெருவில் இருப்பவருமான ஒருவரின் தூண்டுதலின் பேரில் இது நடந்து இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக செய்தி வந்தது.

மூன்று மாதங்களுக்கு பிறகு, அந்த நபர் அதே தெருவில் 30 வருடங்களாக வசித்து வருகிறார். அவருடைய மகன்கள் அமெரிக்காவில் பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரிந்து வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில் செயற்கை நுண்ணறிவு மூலம் இந்த உடலை எம்பாமிங் செய்து பதப்படுத்தி உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அதிர்ச்சி விஷயம் என்ன என்றால், இறந்த உடல் ஒரு மனிதக் குரங்கு என்பதை தடய அறிவியல் ஆய்வகம், புதுதில்லி தன்னுடைய விரிவான அறிக்கையில் கூறி இருப்பது கல் நெஞ்சங்களையும் கரைக்கும் விதத்தில் இருப்பதாக பிரதம மந்திரி தன் ட்விட்டர் செய்தியில் தெரிவித்து உள்ளார் என்பது வெளியானது.

இந்த செயலுக்கு காரணம் கவுன்சிலர் பெயரை கெட்டு அழிக்க வேண்டும் என்பது தானாம் – அரசியல் காழ்ப்புணர்ச்சி.

சாந்தி செல்வராஜ்
கும்பகோணம்


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.