தேசியக் குப்பை!

அந்த நாள் ஒரு சாதாரண இன்னொரு நாள்.

“ஏய்ய்ய் எரும! இன்னுமா குளிச்சிட்டு இருக்க?

பெரிய நயன்தாரா இவ! மணக்க மணக்க விஜய் அஜித்கூட ஆடப் போற, ரோட்டோரக் குப்ப தானா பொறுக்கப் போற?” என்று காந்தாவை காலையிலே வசை பாடினான் சங்கர்.

“விஜய், அஜித் வீட்டு வாசல்ல நாலு நாள் குப்ப பொறுக்காம போனா, நாங்க தான் நயன்தாரா”

காந்தாவும் சங்கரும் சென்னையின் பூர்வகுடி குடிசைவாசிகள். சைதை பாலத்தில் கீழ் வசிக்கும் குப்பத்து ஜோடிகள்.

காந்தா வறுமையின் சின்னமாக பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்து, பின் கல்லூரி தொடராமல் தன் தாயின் தொடர்ச்சியாக, சென்னை கார்ப்பரேஷனில் துப்புரவு தொழிலுக்கு வந்து சேர்ந்தாள்.

சங்கர் சலவை தொழிலில் இருந்து இப்போது தெருவோரம் இஸ்திரி கடை வைத்துள்ளான். அவ்வப்போது வீட்டு புரோகர் வேலையும் செய்வதுண்டு.

காதல் திருமணம் தான் என்றாலும் தன் மனைவி தெரு பெருக்குவதை வெறுத்தான். சங்கரின் சக குப்பத்து நண்பர்களின் மனைவிகள் வீட்டு வேலைக்கு போனதின் விளைவு அது.

காந்தா, குளித்துவிட்டு பொட்டு வைத்து, அவன் சொன்னது போல நயன்தாராவாகவே தன்னை உணர்ந்து கிளம்பினாள்.

ரெட்டி குப்பத்தில் வாழும் பெண்கள் யாவரும் காலையில் வேலைக்கு செல்பவர்கள் தான்.

அதிகாலை நான்கு மணிக்கே நாள் தொடங்கிவிடும். குளியல், கழிவு வசதி
இல்லாததால், சூரியன் உதிர்க்கும் முன்னாதாகவே பெண்கள் காலை கடன் முடித்து, குளித்து விட்டு கிளம்புவார்கள்.

குளிர்காலங்களில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை குளிப்பார்கள். பண்டிகை நாட்களும் சேர்ந்து வருடத்தில் எல்லா நாட்களும் வேலைக்குச் செல்பவர்கள். உடல் சரி இல்லாமல் போனால் மட்டும் சம்பள பிடிப்போடு ஓய்வு உண்டு.

காந்தா தன் தோழி எஸ்தருடன் கிளம்பினாள்.

“ஏண்டி காந்தா! காலையில இந்த குளிர்ல குத்த வச்சா எதுவுமே வரமாட்டேங்குது, அப்புறம் அப்பார்ட்மண்டுக்கு வேலைக்கு போனா வருது. என்னா கருமமோ. உன் வீட்லயாச்சும் சின்னதா ஒன்னு கட்டிட்ட” என்று புலம்பினாள் எஸ்தர்.

காந்தா தன் ஒருவருட சேமிப்பில் கட்டிய கழிவறை அது. அதற்கு சில மோசமான சம்பவங்களும் உண்டு.

“அப்போ என்னடி பன்னுவ?” என்று கேட்டாள் காந்தா.

“நான் வேலை பார்க்கும் அப்பார்ட்மண்ட் வாட்ச்மேன் நாயி, நான் போக வர பாத்துட்டே கிடப்பான், அது எனக்கு வசதியா போச்சு. அவன் கக்கூஸ்ல போயிடுவேன்” என்று நகைப்புடன் சிரித்தவாறு சொன்னாள் எஸ்தர்.

“அது சரி, பல பேரோட கக்கூஸ் கழுவுரோம். ஆனா நமக்கு ஒதுங்க ஒரு கக்கூஸ் இல்ல பாத்தியா?” என்று புலம்பியபடி பொடி நடையாக கார்ப்புரேஷன் அலுவலகம் வந்து சேர்ந்தாள் காந்தா.

“எல்லாம் வரிசையில நில்லு.

ஹேய்! அங்க என்ன பேச்சு?

எருமைங்க மாதிரி ஆடி அசஞ்சி வர வேண்டியது, இங்க வந்தும் உன் ஆத்தா கத, அப்பன் கத பேசிட்டு இருப்பியா?” என்று கத்தி தீர்த்தான் சூப்பர்வைசர் சந்துரு.

சந்துரு கடுமையான கோபக்காரன். அனைத்து அரசு மற்றும் கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கு உடைய முரட்டுத்தனம் அவனிடம். சந்துரு மேல் பல பெண்கள் புகார் அளித்து உள்ளனர்.

அந்த புகார் நீங்கள் நினைப்பது போல் இல்லை, புகார் அளிக்கப்பட்ட நபரிடமே நகைப்புடன் பகிரப்படும்.

அடுத்த நாள் புகார் அளித்த நபர்களுக்கு சாக்கடை, பொது கழிப்பிடம், அரசு பள்ளி கழிப்பறை சுத்தம் செய்யும் டியூட்டி வழங்கப்படும்.

இன்று காந்தா.

நேற்று அவள் டியூட்டி முடித்து, நாள் முடிவின் அட்டவணையில் கையெழுத்து போட போகும்போது, காந்தாவை தன் இருக்கைக்கு வரச்சொன்னான் சந்துரு.

“காந்தா, இங்க வாமா. அந்த பீரோ கீழ ரொம்ப நாளா குப்பையா இருக்கு. கொஞ்சம் பெருக்கிட்டு போயேன்’

“சரி அண்ணே!” என்று குனிந்து பெருக்கிக் கொண்டிருந்த போது அதை தன் செல்போனில் படம் எடுத்தது மட்டுமல்லாமல் அருகே சென்றான்.

தன் பின்னால் தொடுதலை உணர்ந்த காந்தா, அமைதியாக துடைப்பத்தை கீழே போட்டாள். செய்வதறியாமல் அமைதியாக நின்றாள். மேலும் அழுத்தத்தை உணர்ந்தாள். கண்ணில் நீருடன் திரும்பினாள்.

பெண்களின் மௌனம் கொடியது. கூச்சல் வலியது. காந்தா மௌனமாக சென்றாள். இச்சம்பவத்தை, ராஜேஸ்வரி அக்காவிடம் கூறிய போது அவர் தான் டீ.ஓ.விடம் அழைத்துச் சென்றார்.

அதன் விளைவு.

“காந்தா! நாளைக்கு எம்.பி அம்மா, டி.நகர் கவுர்மெண்ட் பள்ளிக்கு வராங்களாம். நீ அங்க கக்கூஸ் சுத்தம் பன்னிட்டு, இங்க கார்ப்பரேஷன் ஆப்பிஸு கக்கூஸும் கழிவிடு. என் ரூம் கக்கூஸும். புரிதா?” என்றான் சந்துரு

“ராஜேஸ்வரி, நீ லட்சுமி நகர் பத்து தெரு பாத்துக்கோ”

“அண்ணே நாலு தெரு தானே மானுவல் அட்டையில இருக்கு” என்று தயங்கியபடி கேட்டாள் ராஜேஸ்வரி.

“என்னா எதிர்த்து பேசுற? சொல்லுரத மட்டும் செய்.

அப்புறம் உன் குடிகார புருஷனுக்கு டாஸ்மாக் போக எவ காசு கொடுப்பா?

அப்படியே நாலாவது தெருல, டி.சி – கைலாஷ் அய்யா வீட்டுல சம்பு அடச்சி கெடக்காம், அதையும் என்னானு பாத்திரு” என்றான்.

காந்தா பள்ளிக்கு சென்றாள். நாற்றம் என்றால் குடலைப் புரட்டும் நாற்றம். அதை நாற்றம் என்றும் உணராமல் பழகி போன ஒன்றாக கழுவிக் கொண்டிருந்தாள் காந்தா.

வேலை முடிந்தவுடன் கைகள் சுத்தம் செய்ய சோப்புக்கட்டிகூட இல்லாமல், சோற்றில் கைவைக்கும் வேதனை சொல்லில் அடங்காது.

இரவு வீட்டுக்கு வந்தாள். அதே வசை, அதே நயன்தாரா. அதே புலம்பல்.
இதற்கிடையில் சந்துரு ஒரு முக்கிய அறிவிப்புக்காக அனைவரையும் காலையில் முன்னதாகவே வரச்சொன்னான்.

“ஹே எல்லாரு வந்தாச்சா?

அடுத்த வாரம் எதோ தேசிய சுற்றுச்சூழல் தினமாம்,

அன்னிக்கு நம்ம பிரதமரு, பத்து சுத்தம் பன்னுற தொழிலாளர்கள கெளரவிக்கிர நிகழ்ச்சி ஏதோ இருக்காம். எல்லா மாநிலத்திலையும் சேத்து பத்து பேர தேர்ந்தெடுத்து இருக்காங்களாம்.

அன்னைக்கு டி.நகர் பள்ளிக்கு வந்த நம்ம எம்.பி அம்மா, காந்தா வேலை செஞ்சத பாத்து, காந்தா பேர சொல்லிருக்காங்க. இன்னும் இரண்டு நாள்ல காந்தா டில்லிக்கு போக போறா, இது நம்ம எல்லாத்துக்கும் பெருமை தானே. என்ன காந்தா, அன்னைக்கு டியூட்டி போட்டப்போ பதறின. இப்ப பாரு” என்று பிதற்றிக் கொண்டான் சந்துரு.

அவள் ‘நேற்று அள்ளிப் போட்ட செத்த நாயைப் போல’ அவனைப் பார்த்து விட்டு பதறியவாரே குடிசைக்கு சென்றாள்.

‘இன்று வேலை இல்லை என்று அனுப்பி விட்டார்கள், நாளை சில அதிகாரிகள் வருவார்கள் என்று கூறினார்கள்’ என்று எண்ணியவாறே பாயில் உருண்டு கொண்டிருந்தாள் காந்தா.

சங்கர் உள்ளே வந்தான். நடந்ததை கூறினாள் காந்தா.

“என்னடி சொல்லுர?” என்று பலமாக சிரித்தான்.

“நயன்தாரா கலக்கு, உனக்கு வந்த வாழ்வ பாரு!” என்று அவளை எள்ளி நகையாடினன் சங்கர்.

அடுத்த நாள் காலை, பேட்டைக்கு சம்மந்தமே இல்லாமல் கோட், சூட் போட்ட ஐந்து நபர்கள், காந்தா குடிசைக்கு வெளியே நின்றனர்.

“இங்க காந்தா யாரு?” என்றான் ஐந்து நபர்களில் ஒருவனான தமிழன்.

“நான்தான்!” என்றபடி வெளியே வந்தாள் காந்தா.

“பி.ம் புரோட்டோகால், போலாம் வாங்க. மொதல ஹாஸ்பிட்டல் போனும், ரத்த
பரிசோதனை செய்யனும்” என்றான்.

பேட்டையின் வாசலில் கருப்புத்தேரை போல் வாகனம்.

“நயன்தாரா…!” என்று வாயை பிளந்தான் சங்கர்.

அனைவரும் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர். காரில் ஏறிச் சென்றாள் காந்தா.

அதிநவீன ஆஸ்பத்திரியில் இரத்த பரிசோதனை முடிந்தது. ரிசல்ட் பாசிடிவ்.
பின்பு அதிநவீன சிகை அலங்கார கடைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சுத்தம் செய்யப்பட்டாள்.

இதே போல் டெல்லி செல்லும் வரை, இரண்டு நாட்களுமே வரவழைக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, நல்ல உணவளிக்கப்பட்டது காந்தாவுக்கு. சங்கருக்கும் பார்சல் வாங்கிக்கொண்டு வந்தாள்.

தன் உடலின் நிறம் மாறியதை உணர்ந்தாள் காந்தா.

அடுத்த நாள் கோட், சூட் அதிகாரிகள் வந்தனர். பெருமிதத்துடன் அவர்கள் வாங்கி கொடுத்த பெட்டியில் இரண்டு நாட்களுக்கு தேவைப்பட்ட துணிகளை எடுத்து வைத்துக் கொண்டு புறப்பட்டாள்.

விமான நிலையத்தின் வாசல் தெருவை பெருக்கியவாறு வேடிக்கை பார்த்து, நான்கு விமானம் பறக்கும் வரை நின்று பார்த்துவிட்டு செல்லும் பழக்கம் காந்தாவுக்கு உண்டு.

இன்று விமானத்தில் சகல சவுகரியங்களுடன் பறக்க போகிறாள். உள்ளுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள். பயமும் தான்.

“காந்தா! பறக்க போற! பயப்படாத. பிரதமரே நம்ள கெளரவிக்கப் போறாரு. நீ முக்கியமானவ!” என்று ராஜேஸ்வரி அக்கா கூறியது நினைவுக்கு வந்தது காந்தாவுக்கு.

விமானம் புறப்பட்டது.

ஜன்னலின் வெளியே சென்னை மாநகரை பார்த்தாள். தான் விடிய விடிய சுத்தம் செய்த நகரம். ஆத்மாத்தமாக எந்த ஒரு குற்றம் குறை இல்லாமல் சுத்தம் செய்த நகரம். ஒருவிதத்தில் அவளின் வேலைக்கு தான் இன்று இந்த வாழ்க்கை. பெருமூச்சு விட்டு முடித்தவுடன் வந்து சேர்ந்தது டெல்லி.

அவள் ஒரு நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டாள். ஏக போக ஏற்பாடுகளுடன் விருந்து, நல்ல குடிநீர், அவள் குடிசையை விட பெரிய அளவிற்கு குளியலறை. குறிப்பாக சுத்தமான கழிவறை.

இவை அனைத்தையும் விட, காந்தா அதிக நேரம் செலவிட்டது கழிவறையில் தான். அவளின் முப்பது வருட அழுக்கைக் கழுவிக் கொண்டாள்.

சுற்றுச்சூழல் தினம் காலை.

காந்தாவை தினசரி சீருடை அணிந்து வரச்சொல்லி தகவல் வந்தது. காரில் அழைத்துச் செல்லப்பட்டாள் காந்தா. மற்ற ஒன்பது தூய்மை பணியாளர்களும் வந்து சேர்ந்தனர். அனைவரும் இருக்கையில் அமர்ந்தனர்.

பிரதமர் இன்னும் அரைமணி நேரத்தில் வந்து விடுவார் என்று தகவல் வந்தது. காந்தா நடுங்கினாள், அந்த அரைமணி நேரத்தை அவள் வாழ்வின் முக்கியமான நேரமாகக் கருதினாள்.

‘பிரதமருக்கு வணக்கம் சொல்லவா? இல்லை இவர்களை போல் நமஸ்தேவா?’ என்று பல சிந்தனைகள்.

சிந்தித்துக் கொண்டே இருக்கையில், ‘சில்’லென்ற ரோஜா பூவின் வாசம். அந்த வாசத்தை அவள் முகர்ந்ததே இல்லை. வந்தார் பாரத பிரதமர் .

காந்தாவின் இதயம் துடித்தது. ‘வெடித்து சிதறிவிடும்’ என்பது போல் உணர்ந்தாள்.

முதலில் நின்றிருந்த காந்தா “வணஸ்காரம்” என்றாள்.

சிரித்துவிட்டு “வணக்கம்” என்றார் பிரதமர்.

பின்னர் பூங்கொத்து கொடுத்து கெளவித்தார் பிரதமர்.

புதிய மனிதியாக தன்னை உணர்ந்து தன்னையே அறியாமல் கண்ணீர் விட்டாள் காந்தா.

கெளரவிக்கும் நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர் அனைவருக்கும் வணக்கம் சொல்லி அங்கிருந்து கிளம்பினார். பின்னர் மாளிகையில் விருந்து வழங்கப்பட்டது.

அன்று இரவு விமானம் ஏறி வந்து சேர்ந்தாள் காந்தா. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் அவளை வட்டமிட்டு கேள்வி கேட்ட வண்ணம் இருந்தனர். அவை அனைத்தையும் முடித்து விட்டு மூச்சு விட்டாள் காந்தா.

பின்னர் குடிசைக்கு திரும்பினாள். சங்கர் உறங்கிக் கொண்டு இருந்தான்.

காலையில் காந்தா குளித்துக் கொண்டு இருக்கும் போது ஒரு குரல்.

“ஏய்ய்ய்…. எரும! இன்னுமா குளிச்சிட்டு இருக்க?”

தான் வாரும் குப்பையைப் போலத் தானும் உபயோகிக்கப்பட்டு தூக்கி குப்பையில் விசிறப்பட்டதை உணர்ந்தாள் காந்தா.

க.சஞ்ஜெய்
சென்னை
கைபேசி: 7904308768

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.