திருநங்கை ரோஜா கோவில் திருவிழாவிற்காக, சேட்டு நடத்தும் அடகு கடைக்கு, நன்கொடை பணம் வசூல் செய்ய வந்தாள்.
“காளியம்மன் கோவில் திருவிழாவிற்கு, உங்களால முடிஞ்ச நன்கொடையை கொடுங்க சேட்டு” சேட்டு மதன்லாலிடம் கேட்டாள் ரோஜா.
“உனக்கு வேற வேலை இல்லையா? நம்மால் ஒரு நயா பைசா கொடுக்க முடியாது. ஜா! ஜா!” சேட்டு மதன்லால் ஆணவத்தோடு பதிலளித்தார். அவள் முகம் வாடியாடியே கடந்து சென்றாள்.
ஒரு வாரம் கழித்து, கனரக லாரி ஒன்று எதிரில் மோத வருவதை கவனிக்காமல், செல் போனில் பேசிக்கொண்டு சாலையை கடக்க முயன்ற சேட்டு மதன்லாலை அந்த வழியாக வந்து கொண்டிருந்த ரோஜா ஓடிப்போய் காப்பாற்றினாள்
“என்னை மன்னிச்சிடுங்கம்மா! உங்க நல்ல மனசை புரிஞ்சிக்காம அன்னைக்கி என் கடைக்கு வந்த உங்களை அவமானப்படுத்தி அனுப்பிட்டேன். என் உயிரை காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றிமா!. பணத்தைவிட மனுஷங்க தான் முக்கியம்னு எனக்கு பாடம் கத்துக் கொடுத்துடீங்க!” சேட்டு மதன்லால் அரவாணி ரோஜாவிற்கு நன்றி சொன்னார்.
”இந்தாங்க கோவில் பிரசாதமும், நன்கொடைக்கான ரசீதும்”
“ஏம்மா! நான் தான் பணமே தரலியே”
“எல்லாரும் நன்கொடை குடுக்கிறப்போ, நீங்க மட்டும் குடுக்கலையின்னா உங்கள தப்பா பேசுவாங்கன்னு, என் சொந்தக் காசில இருநூறு ரூபா உங்க பேருக்கு எழுதியிட்டேன்” கேட்ட மதன்லால் ஆச்சரியத்தில் ஐநூறு நோட்டை நீட்ட, மறுபடியும் முந்நூறு ருபாய்க்கு ரசீது எழுதினாள் ரோஜா.
எம்.மனோஜ் குமார்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!