நல்ல குடும்பம் நல்ல சமுதாயத்திற்கு அடிப்படை.
துறவறம் மற்றும் இல்லறம் என்பது இரு வாழ்க்கை முறைகள். ஒன்று உயர்ந்தது மற்றது தாழ்ந்தது என்று கிடையாது.
உண்மையைச் சொல்வதென்றால் நிறையப் பேருக்கு உகந்தது இல்லறம்தான். இனிய இல்லறம் இந்த பூமியைச் சொர்க்கமாக மாற்றும்.
ஆண் பெண் உறவையோ இயக்கத்தையோ உலகின் எந்த மதமும் மறுத்ததில்லை.
அப்படி எந்த மதமாயினும் மறுத்திருக்குமானால் அந்த இயக்கமே தடுமாறிப் போயிருக்கும்.
இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் இந்து மதம் இவை அனைத்துமே முழுக்க இல்லறத்தை ஆதரித்தவையாகும்.
‘பெண்டு பிள்ளைகளை துறந்து விட்ட மாத்திரத்திலேயே ஒருவன் முக்திக்கு தகுதியுடையவன் ஆக மாட்டான்’ என்று ஸ்ரீ கிருஷ்ண பகவான் கீதையில் உபதேசிக்கிறார்.
பெண்டுகள், பிள்ளைகள், சுற்றத்தார், இனத்தார் மற்றும் நாட்டாரை துறந்து செல்பவன் கடவுளுடைய இயற்கை விதிகளைத் துறந்து செல்கிறான். மனவலிமை இல்லாமையே அதன் காரணம்.
வசிட்டர், வாமதேவர் முதலிய மகரிஷிகள் அத்தனை பேரும் மணம் புரிந்து கொண்டு மனைவி மக்களுடனேயே இன்புற்று வாழ்ந்தனர்.
புலன்களை அடக்கியாளும் பொருட்டாக, அக்காலத்து ரிஷிகள் பிரம்மச்சாரிகளாக இருந்து நெடுங்காலம் பலவகைக் கொடிய தவங்கள் செய்து முடித்து, பின்பு இல்வாழ்க்கையில் புகுதலே மகரிஷிகளுக்குள் வழக்கமாக நடைபெற்று வந்தது.
ஆண் பெண் உறவு என்பது வெறும் காம இச்சை அன்று. உடல் உறவின் புனிதத் தன்மையைக் கோவில் பிரகாரத்தில் இருந்து கோவிலின் உள்ளேயும் பார்க்கிறோம் அல்லவா! அப்படியே வாழ்க்கையையும் வாழ்ந்து பார்க்க வேண்டும்.
உற்சாகமான ஒரு தாம்பத்ய வாழ்க்கையை மேற்கொள்வதை ஆடவர்கள் புனிதமான கோவில் வாழ்க்கையாக எண்ணிக் கொள்ள வேண்டும்.
வெறும் வரட்டுத்தனமும், வெறும் காம வேட்கையுமல்ல இல்லற வாழ்க்கை என்பது. அது பல கடமைகளுக்கு நடுவே காதல். என்றாலும் காதல் தான் முதலிடம் வகிப்பது. அந்த முதலிடத்தை கணவன் தான் மனைவிக்குத் தந்தாக வேண்டும்.
கற்புடைய மனைவியுடன் காதலுற்று அறமும், தர்மமும் தவறாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் சுவர்க்க வாழ்க்கையை ஒத்ததாகும்.
ஒருவனுக்கு தன் வீடே கோவில். வீட்டிலே தெய்வத்தைக் காண திறமையில்லாதவன் மலைக்குகையிலோ, மற்ற கோவிலிலோ கடவுளைக் காண மாட்டான்.
மனைவியுடன் துயிலும் போது, மனைவியின் கையால் சாப்பிடும் போது, மனைவி தமக்குப் பெற்றெடுத்துத் தந்த குழந்தை தொட்டிலில் தூங்கும் போது இந்தப் புனிதமான வாழ்க்கை உலகில் எவருக்கும் அமையாது என்கிற உற்சாகம் வேண்டும்.
பல கடமைகளுக்கு மேலே தான் அவள் காதலை வைத்திருக்கிறாள் என்றாலும் அவளுடைய உடம்பையும் அமைதிப்படுத்த வேண்டியது, நிம்மதிப்படுத்த வேண்டியது கணவனின் கடமையாகும்.
‘ஒரு பெண் வாழ்ந்தாள்’ என்று சொல்வதே அவள் ‘கணவனோடு வாழ்ந்தாள்’ என்பதைத்தான் குறிக்கும்.
‘இல்லறமல்லது நல்லமறமில்லை.’ அனுசரித்துப் போவதுதான் இல்லறத்தில் மிக முக்கியம். நல்ல குழந்தை ஒரு வீட்டில் பிறந்திருக்கிறதென்றால் கணவன், மனைவி நன்றாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பது அதன் பொருளாகும்.
கணவன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விடக்கூடாது. மனைவியிடம் இருந்து கணவனும் கடமையை எதிர்பார்க்கலாம். அதை நிறைவேற்ற அவள் தயங்கக்கூடாது.
ஒரு இந்தியப் பெண் தன்னுடைய கணவனின் தேவைகளை எந்தக் காலத்திலும் மறுக்கவும் மாட்டாள்; மறக்கவும் மாட்டாள்.
எனவே கணவன் – மனைவி உறவு என்பது புனிதமானது. கோவில் போன்றது, கோபுரத்துச் சிலை போன்றது என்பதை மனதிலே கொண்டு வாழ்வைத் துவக்குங்கள்.
உங்களுக்கு பிறக்கின்ற குழந்தையும் ஆரோக்கியமாகவும் இருக்கும். அவனுக்கு வருகின்ற மனைவியும், அவளுக்கு வருகின்ற மணமகனும், ஆக மாப்பிளை வந்தாலும், மருமகள் வந்தாலும் உங்களைப் பார்த்து அவர்கள் வாழக் கற்றுக் கொள்வார்கள். ஆரோக்கியமான சந்ததி உருவாகும்.
உங்களாலே நீங்கள் மட்டுமல்ல; உங்கள் குழந்தைகள் வாழ்கின்றன. உங்கள் பேரன், பேத்திகள் வாழ்கின்றார்கள்.
உங்களைப் பார்த்து அடுத்த வீடு, அக்கம், பக்கம் வாழ்கின்றது. அத்தோடு சமுதாயம் வாழ்கின்றது.
நல்ல சமுதாயத்திற்கு அடிப்படை நல்ல குடும்பம்.