“நான் மட்டும் அங்கே இல்லைனா நடந்திருக்கிறதே வேற!
நான் தான் அவனைப் படிக்க வச்சேன்!
நான் பேசிய பேச்சுல தான் இவன் மாறிட்டான்!”
போன்ற ‘நான்’ என்ற வார்த்தைப் பிரயோகங்களை நாம் அதிகமாகப் பயன்படுத்தி வருகிறோம்.
இன்று நடைபெறுகின்ற பல பிரச்சனைகளுக்குப் பின்னணியில் ‘நான்’ ஒளிந்து கொண்டிருப்பதை அவ்வளவு எளிதாக யாரும் மறுக்க முடியாது.
நாம் பேசும் ‘நான்’ என்பது யாருக்கு சொந்தம் என்பதை கொஞ்சம் ஆன்மீக கண்ணோட்டத்தில் பார்ப்போம்.
நான் என்பது யார்?
‘நான்’ என்பது எனது பெயரா?
எனது உருவமா? உடலா? உடல் அமைப்பா? உடல் பாகங்களா?
சரி! ஒருமுடிவெடுத்து ‘நான்’ என்பது ‘எனது பெயர்’ என்று வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் பிறந்த முதல் நாளில் இப்பொழுது இருக்கின்ற பெயர் உங்களுக்கு இருந்ததா? என்றால் நிச்சயமாக இல்லை.
உலகில் அனைவருக்கும் இறந்ததற்கு பின்னால் பெயர் ‘பிணம்’
இந்த உருவத்தில் நம்மை அடையாளப்படுத்துவதற்கான காரணப் பெயர்தான் நமக்கு சூட்டப்பட்டிருக்கும் பெயரே தவிர, அந்த பெயர், ‘நான்’ என்ற உள்ளமைக்கு சொந்தமானது அல்ல.
ஒரு பேப்பரை உங்கள் கையில் கொடுத்து இந்த பேப்பரை எது வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று சொன்னால், நீங்கள் அந்த பேப்பரை கிழிக்கலாம், எழுதலாம், எது வேண்டுமானாலும் செய்யலாம்.
“ஏன் அப்படி செய்கிறாய்?” என்று கேட்டால்! “இது எனது பேப்பர். நான் எது வேண்டுமானாலும் செய்வேன” என்று கூறுவோம்.
“சரி! உங்கள் உடம்பில் இருக்கும் உங்கள் கை யாருடையது?” என்றால் யோசிக்காமல் “இது என்னுடையது” என்போம்.
“சரி. உங்கள் கையில் உள்ள விரல்களை பின் பக்கமாக முழுவதும் திருப்புங்கள்”
திருப்ப முடிகிறதா? நிச்சயமாக முடியாது. ‘உங்களுடைய கை விரல்கள் உங்களுடைய கட்டுப்பாட்டிற்கு மீறி செல்கின்றபோது அது எப்படி உங்களுடையதாக இருக்கும்?’ என்ற கேள்வியும் அங்கே எழுகிறது.
இறைவன் நம்மை படைத்து, நமது மனதை சீர்படுத்த, ஒழுங்குபடுத்த, மதங்களை, சித்தாந்தங்களை, மார்க்கங்களை, வேதங்களைக் கொடுத்தான்.
அனைத்து மத மார்க்க சித்தாந்தங்கள், வணக்க வழிபாட்டு முறைகளின் தாத்பரியங்கள் அனைத்தும் ‘நான்’ என்பது இல்லை என்பதை வலியுறுத்தி, ‘இறைவன் தான் அனைத்தும்’, ‘அவன் தான் மிகப்பெரியவன்’ என்ற கோட்பாட்டை வெளிப்படுத்துகின்றன.
இந்து மதத்தில் கோயிலுக்கு சென்று தேங்காய் உடைப்பது அவர்களின் வழிபாட்டு மரபுகளில் ஒன்று. அதற்கென்று தனி இடம் இருக்கும். சரி! கோயிலில் ஏன் தேங்காய் உடைக்கப்படுகிறது. அதன் காரணமும் அகமியமும் என்ன?
தேங்காயின் உருவத்தை பாருங்கள். தேங்காய் இரண்டு பகுதிகளை கொண்டது. ஒன்று உருண்டை வடிவத்தில் உள்ள தேங்காய். மற்றொன்று அதன் குடுமி. குடுமியை பிடித்துக்கொண்டு தேங்காயை உடைப்பதை தான் தேங்காய் உடைப்பது என்று கூறுகிறோம்.
தேங்காயின் வடிவத்தோடு நமது (மனித) உருவத்தை ஒப்பீடு செய்து பாருங்கள். தலைக்கு கீழிருந்து கால் வரை தேங்காயின் குடுமியாகவும் தலையை தேங்காயாகவும் யோசித்து பாருங்கள். அப்படியே பொருந்தும்.
தேங்காயின் குடுமியை இறுக பிடித்துக் கொண்டு தேங்காயை உடைக்கும் போது தேங்காய் சிதறுண்டு போகும்.
அது போல் போட்டி, பொறாமை, கோபம் போன்ற தீய எண்ணங்கள் அதிகரித்து அதன் மூலம் பிறரை தாழ்வாக நினைத்து, நம்மை மட்டுமே உயர்வாக நினைக்கும் ‘நான்’ என்ற அகம்பாவம் உடைபட வேண்டும்.
தலைக்கனம் தகர்க்கப் படவேண்டும் என்ற மனோ நிலையை வெளிப்படுத்தி, கடவுளுக்கு முன் நின்று, ‘கடவுளே! நான் ஒன்றும் இல்லை’ என்ற உயரிய குணத்தை தேங்காய் உடைப்பதன் மூலம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கிறிஸ்தவத்திலும் வழிபாட்டு முறைகள் அப்படித்தான். கிறிஸ்தவர்கள் வழிபடக்கூடிய அவர்களின் கடவுளுக்கு முன் அனைவரும் முழங்கால் இட வேண்டும் என்பது அவர்களின் வழிபாட்டு முறை.
முழங்காலிட்டு கர்த்தரிடம் பாவ மன்னிப்பு கேட்க வேண்டும்.
படித்தவர், படிக்காதவர், பணக்காரர், ஏழை என யாராக இருந்தாலும் இறைவனுக்கு முன் தன்னைத் தாழ்த்தி இறைவன் உயர்ந்தவர் என்ற அகமியத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.
சற்று யோசித்துப் பாருங்கள். எப்போது முழங்கால் இடுவோம். சிறுவயதில் நாம் பள்ளிக்கூடம் படித்திருக்கும் பொழுது ஏதேனும் தவறு செய்தால் ஆசிரியர்கள் முழங்கால் போட செல்வார்கள்.
அப்படியானால் இறைவனுக்கு முன் நாம் பாவம் செய்தவர்கள்; இறைவன் என்னை மன்னிக்க வேண்டும்; என்ற கர்த்தர் முன் கேட்கும் அந்தத்தொனி ‘இறைவன் மிகப்பெரியவன்; நான் ஒன்றும் இல்லை’ என்று நானை ஒழிக்க கற்றுத்தருகிறது கிறிஸ்தவம்.
முஸ்லிம்களின் முக்கிய வழிபாடுகளில் தொழுகையும் ஒன்று. அந்த தொழுகையில் உள்ள அனைத்து வழிமுறைகளும் ஒரு தடவை இருக்கும். ஸஜ்தா (இறைவனுக்கு சிரம் பணிதல்) மட்டும் இரண்டு முறை இருக்கும். ஸஜ்தா (இறைவனுக்கு சிரம் பணிதல்) மட்டும் ஏன் இரண்டு முறை இருக்கிறது?
நான் மண்ணில் இருந்து தான் வந்தேன் என்பதை உணர்த்த அல்லாஹ்விற்கு முதல் ஸஜ்தா (இறைவனுக்கு சிரம் பணிதல்) செய்ய வேண்டும். மீண்டும் மண்ணிற்கே செல்லப் போகிறேன் என்பதை உணர்த்த இரண்டாவது ஸஜ்தா செய்ய வேண்டும்.
சற்று யோசித்துப் பாருங்கள்.
பல ஆண்டுகளுக்கு முன் நான் எங்கிருந்தேன்?
மண்ணாக இருந்தேன்.
பல ஆண்டுகளுக்குப் பின் நான் எங்கே போகப் போகிறேன்?
மண்ணிற்குள் தான் செல்ல போகிறேன்.
பல ஆண்டுகளுக்கு முன் மண்ணாக இருந்த எனக்கு ‘நான்’ என்ற சக்தி இருந்ததா?
பல ஆண்டுகளுக்குப் பின் மண்ணோடு மண்ணாக போனதன் பின் நான் செய்தேன்; நான் பேசினேன் என்பதெல்லாம் எங்கே போகும்?
மண்ணை மனிதனாக மாற்றியது இறைவன்.
மனிதனை மண்ணாக மாற்றுவதும் அவன்தான்.
மண்ணிற்கு பேசும் சக்தி எப்படி வந்தது? அவன் தந்தான். நான் எதுவும் இல்லை. இறைவன் தான் என்னை செய்ய வைக்கிறான் என்ற ‘நானை’ ஒழிக்கும் அருமருந்து தான் ஸஜ்தாவின் [சிரம் தாழ்த்துதலின்] தத்துவம்.
எல்லா மத கோட்பாடுகளிலும் இறைவன் மிகப் பெரியவன் என்று பேசுகிறோம். நம்புகிறோம்.
ஆனால் ‘இறைவன் மிகப் பெரியவன்; நான் ஓர் அற்பம்’ என்பதை ஏற்க மனம் தயங்குகிறது.
இறைவனை உயர்ந்தவனாக்கிப் பார்ப்பது மட்டும் வணக்கமல்ல. நம்மை இறைவன் முன்னிலையில் தாழ்த்திப் பார்ப்பதும் அந்த வணக்கத்தின் மறுபக்கம் என்பதை நாம் உணர வேண்டும்.
நீங்கள் சார்ந்து இருக்கின்ற மதக் கோட்பாடுகளின் வணக்க முறைகளை நீங்கள் ஆராய்ந்து உங்களை நீங்கள் வாசியுங்கள்.
அப்போதுதான் ‘நான் யார்?’ என்பது உங்களுக்குப் புரியும்.
‘நிஜத்தை நோக்கிய பயணம் தான் வாழ்க்கையின் இலக்கு’ என்பதுதான் ஆன்மீகத்தின் தொடக்கம். அந்த நிஜத்தில் இருந்து உங்களைப் பாருங்கள்.
அப்போது உங்களுக்கு நீங்களே கானல் நீராகத் தெரிவீர்கள்.
ஆம். நான் எனும் கானல் நீர்.
முனைவர் மு. பக்கீர் இஸ்மாயில்
இணைப் பேராசிரியர், பொருளாதார துறை,
புதுக்கல்லூரி, சென்னை – 600 014
கைபேசி: +91 96000 94408
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!