என் நினைவில் நிற்கும் மாணவர்

சாதாரணமாக எந்த ஒரு பள்ளியிலும், எந்த ஒரு ஆசிரியரும் தன்னிடம் பயிலும் மாணவனிடம் முக்கியமாக எதிர்பார்ப்பது பணிவு, அடக்கம், மரியாதை மற்றும் ஒழுக்கம். இவைகள் யாவும் அமையப் பெற்றாலே படிப்பறிவு மிக எளிதாக வந்து விடும்.

என்னுடைய முப்பது ஆண்டு பணிக்காலத்தில் எவ்வளவோ மாணவர்களைச் சந்தித்திருக்கிறேன். குறிப்பாகப் பள்ளி இறுதி வகுப்பில் பயிலும் மாணவர்களை பல்வேறு குணாதிசயங்களுடன் எதிர் கொண்டிருக்கிறேன்.

என் நினைவில் நிற்கும் மாணவனை நினைவு கூர்கையில் எவ்வளவோ பேர் மனக்கண் முன்வந்து சென்றார்கள்.

இருப்பினும், என் மனதில் ஆழமாகப் பதிந்திருந்த அந்த ஒரு மாணவனை நினைத்து அசைபோடுகையில் ஒரு சிறந்த மாணவனுக்குரிய இலக்கணத்துடன் அவன் பயின்ற நாட்கள் நினைவில் தோன்றின.

ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்த அவன் படிப்பில், இதர பள்ளி நிகழ்ச்சிகளில் காட்டிய ஈடுபாடு, ஆசிரியர்களிடம் காட்டிய மரியாதை, பணிவு, அடக்கம் மற்றும் அவனது விடாமுயற்சி, ஊக்கம் போன்றவைகள் மனதில் பசுமையாகப் பதிந்திருந்தன.

பள்ளியை விட்டுச் சென்ற அவன் இன்று எங்கு எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறானோ என்னும் கேள்விக்குறியுடன் இருந்தபோது, எதேச்சையாக ஒருநாள் திருச்சி ரயில் நிலையத்திற்கு ஒரு வேலையாகச் சென்ற சமயம், முதல் பிளாட்பாரத்திற்கு வெளியே உள்ள மிகப்பெரிய அறையின் முன் நிலைய மேலாளர் – அரசுப் பதிவுச் சான்றிதழ் பெற்றவர் (Gazetted) எனக் கொட்டை எழுத்தில் பொறிக்கப்பட்டிருந்த பலகையில் கண்ட பெயரைப் பார்த்ததும் உள்ளத்தில் ஒருவித பரவசத்துடன் கூடிய ஐயம்.

அந்த குளிர்சாதன அறை மூடப்பட்டிருந்ததால், மீண்டும் பிளாட்பாரத்திற்குள் நுழைந்து அலுவலக ஊழியர் ஒருவரிடம் என் பெயரையும், பணிபுரிந்த பள்ளியின் பெயரையும் எடுத்துக்கூறி, நிலைய மேலாளரைச் சந்திக்க விரும்புவதாகக் கூறினேன்.

அடுத்த ஒருசில வினாடிகளில் நான் உள்ளே அழைக்கப்பட்டேன். என் ஐயம் தீர்ந்தது. அங்கு கம்பீரமாக அமர்ந்திருந்தது என்னிடம் பயின்ற மேற்கூறிய அதே மாணவன் ஆர்.ரகுராமன்.

பரவசம் மேலிட திகைத்து நின்ற என்னை நொடியில் அடையாளம் கண்டுகொண்டு அதே புன்னகை, மரியாதை, அடக்கத்துடன் எழுந்து வந்து என் கைகளைப் பற்றி, என்னை எதிரில் அமரச் செய்து மகிழ்ச்சியுடன் எவ்வளவோ பேச, அம்மாணவனின் படிப்படியான முன்னேற்றம், ரயில் நிலைய அதிகாரியில் துவங்கி, பயிற்சிப்பள்ளி ஆசிரியராக மாறி, உதவி இயக்க மேலாளராகப் (Assistant Operation Manager) பதவி உயர்வு பெற்று இன்று திருச்சிராப்பள்ளி சந்திப்பு ரயில் மேலாளராகப் பொறுப்பு வகிக்கும் நிலைக்கு வந்திருப்பதை அறிந்தபோது என் மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

என் நினைவில் நிற்கும் மாணவனை இன்று ஒரு பொறுப்புமிக்க உயர் அதிகாரியாக காண்பதில் எனக்கு மட்டுமல்ல, எங்கள் பள்ளிக்கும்கூட பெருமை தானே!

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.