சுதாகருக்கு இருப்புக் கொள்ளவில்லை.
அலுவலகத்தில் அவரவர் மிகத்தீவிரமாகத் தங்கள் வேலையில் மூழ்கியிருக்க, இவன் மட்டும் எதுவுமே செய்யத் தோன்றாதவனாக மேஜை டிராயரை இழுப்பதும், மூடுவதும், போனை நோண்டுவதும், டேபிள் வெயிட்டை உருட்டுவதுமாய், ஃபைல்களைத் திறந்து மூடி இருக்கையில் நெளிந்து கொண்டிருந்தான்.
சுதாகருக்கு நேர் எதிர் இருக்கைக் காலியாக இருந்தது. அதில் மோகனா அமர்ந்திருப்பதாகவே தோன்றியது அவனுக்கு. அவளது உருவத்தை மனதிலிருந்து அகற்ற முடியவில்லை.
அதிக பருமனும் இல்லாமல், ரொம்பவும் மெலிந்த தேகமுமின்றி அளவான சதைப் பிடிப்புடன் கூடிய வாளிப்பான அவள் உடல்வாகில் மனதைப் பறி கொடுத்திருந்தான்.
அடர்த்தியான நீண்ட கூந்தல், கூர்மையான நாசி, கவர்ந்திழுக்கும் காந்தக் கண்கள், சராசரியான உயரம், செழுமைப் பிரதேசங்களுடன் கூடிய செதுக்கிய சிலையென அலுவலகத்தில் அவள் பவனி வந்து பரவசப்படுத்துவாள்.
எளிமையான உடையில் அவள் வந்தாலும் அதில் ஓர் தனிக்கவர்ச்சி மிளிரும். ஷாம்பூ பாத் எடுத்துக் கூந்தலைப் பரப்பி நுனி முடிச்சுப் போட்டு அவள் வரும் நாட்களில் சுதாகர் தடுமாறிப் போய் விடுவான்.
அவளது குவிந்த உதடுகளைப் பார்க்கையில் தள்ளாடுவான். அவள் நிறம் கருமையே என்றாலும் அந்தக் கருமையே இவனுக்குப் போதையூட்டுவதாக இருக்கும்.
இத்தனை அம்சங்களையுடைய மோகனா அவளது திருமணத்திற்காக ஒருமாத லீவில் சென்றிருந்தாள். அவளின் இருக்கை காலியாக இருந்தது.
சுதாகரும் பதினைந்து நாட்கள் லீவுக்குப் பின், இன்று தான் வேலையில் சேர்த்திருந்தான்.
அலுவலகம் வந்ததும் பழைய நினைவுகள் அவன் மனதை வாட்ட ஆரம்பித்து, மனம் வேலையில் ஈடுபட மறுத்தது. அது திரும்பத் திரும்ப மோகனாவையே சுற்றி வந்தது.
மோகனா இல்லாமல் அலுவலகம் வெறிச்சோடி, வெறுமையாய் இருப்பது போன்றதோர் உணர்வு அவனுக்கு.
ஏதோ நினைத்துக் கொண்டவனாக அருகில் மாட்டியிருந்த காலண்டரைப் பார்த்தான்.
நாளை சனிக்கிழமை அரசாங்க விடுமுறை. மணியைப் பார்த்தான். நான்கு தான் ஆகியிருந்தது. அலுவலகம் முடிய இன்னும் ஒருமணி நேரம் இருக்கிறது.
இப்பொழுதே செக்ஷன் ஆபீஸரிடம் பர்மிஷன் வாங்கிக் கொண்டு ஊருக்குப் புறப்பட்டு விட்டால் என்ன என்று தோன்றியது. ஆனால் அது நன்றாய் இருக்காது. மறுபடி எதிர் சீட்டைப் பார்த்தான்.
இரவு 9மணி சுமாருக்கு திடுதிப்பென வந்து சேர்ந்த சுதாகரை கண்டதும் அவன் மனைவிக்கு ஒரே ஆச்சரியம்!
“என்னங்க… இன்னைக்குத்தானே டூட்டில ஜாய்ன் பண்ணப் போறதா சொன்னீங்க!”
சுதாகர் எட்டி அவள் இடுப்பை பிடித்தான்; கிள்ளினான்.
“உனக்கென்ன? நீ பாட்டுக்கு ஒரு மாசம் லீவு கெடைச்சுதன்னுட்டு ஜம்முன்னு இங்கேயே இருந்துட்ட. லீவு இல்லாத நான் நம் கல்யாணத்துக்காக பதினைந்தே நாள் லீவு போட்டு அது முடிஞ்சு இன்னிக்கே டூட்டிக்கு போகும்படி ஆகிவிட்டது. சே! நீ இல்லாம ஆபீஸில் வேலையே ஓடலை தெரியுமா..?” என்றவாறே அவளை அருகே இழுத்து அணைத்தான்.
“ச்சீ என்னங்க இது? ஷாப்பிங் போன அம்மாவும் அப்பாவும் வந்துடப் போறாங்க..”
அவன் பிடியிலிருந்து அவள் பட்டும் படாமல் விலக முயற்சிக்க…
அன்று இரவு முழுவதும் சுதாகருக்கு சிவராத்திரிதான்.
ஆபீஸில் ஆயிரமாயிரம் கற்பனைகளுடன் ‘டல்’லடித்துப்போய் அமர்ந்திருந்த அவன், இப்பொழுது தன் ஆசை, அருமை, காதல் மனைவி மோகனாவுடன் கற்பனைகளை நிஜமாக்க படுசுறுசுறுப்புடன் முயன்று கொண்டிருந்தான்.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!