நீரும் நாகரிகமும் – நீருடன் ஓர் உரையாடல் 46

வீட்டிற்குள் நுழைந்தவுடன், முதுகில் மாட்டியிருந்த பையை கழட்டி அதிலிருந்து புத்தகங்களை எடுத்து மேசையில் வைத்தேன்.

புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள் தான் அவை. புத்தகங்கள் எல்லாம் அறிவியல் சார்ந்தவையே.

புத்தகங்களை உடனே புரட்டிப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

‘சரி முதல்ல குளிச்சிட்டு பிறகு வாசிக்கலாம்’ என்று முடிவு செய்தேன்.

சில நிமிடங்களில் புத்துணர்வு பெற்றுக் கொண்டு எனது அறைக்கு வந்தேன்.

அலைபேசி ஒலித்தது. எனது நண்பர் தான் அழைத்தார். உடனே அலைபேசியை எடுத்து பேசினேன்.

உரையாடலில் புத்தக கண்காட்சி சென்று வந்த தகவல்களை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். அவரும் சமீபத்தில் புத்தக கண்காட்சியில் தான் வாங்கிய புத்தகங்களை பற்றி பேசினார்.

அப்பொழுது மனித நாகரீக வளர்ச்சி, பண்பாடு மற்றும் அறிவியல் வளர்ச்சி சார்ந்த புத்தகங்கள் பற்றியும் பேசினோம்.

எப்படியும் ஐம்பது நிமிடங்களுக்கு மேல் பேசியிருப்போம். பின்னர், எங்களது அலைபேசி உரையாடலை முடித்துக் கொண்டோம்.

பிறகு தான் பேசிய நேரத்தை கவனித்தேன். ‘இவ்ளோ நேரம் ஆயிடுச்சா’ என்று எண்ணிக் கொண்டேன்.

பின்னர் சிறிதளவு நீரை பருகிவிட்டு, நீர் பாட்டிலை மேசையில் வைத்து விட்டு வாங்கி வந்திருந்த புத்தகங்களை எடுத்து மேலோட்டமாக வாசிக்க தொடங்கினேன்.

″சார் சார்″ என்று என்னை அழைப்பது போன்று உணர்ந்தேன்.

கவனத்தை புத்தக வாசிப்பிலிருந்து திருப்ப, நீர் தான் என்னை அழைக்கிறது என்பதை தெரிந்துக் கொண்டேன். உடனே, நீர்க் குடுவையைப் பார்த்து ″நீ தானா?″ என்றேன்.

″சார் நான் உங்கள கூப்பிட்டுக் கிட்டே இருக்கேன்.. நீங்க தான் கவனிக்கல″ – நீர் சொன்னது.

″அடடா கவனிக்கல… மன்னிச்சுக்கோ..″

″பரவாயில்லங்க.. உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்″

″என்ன கேளு″

″நீங்க ரொம்ப நேரமா யாருகிட்டேயோ பேசிக்கிட்டிருந்தீங்க. அப்போ நாகரீக வளர்ச்சின்னு சொன்னீங்களே″

″அதெல்லாம் நீ கேட்டுகிட்டு இருந்தியா?″

″ஆமா சார்.″

″ஆச்சரியமா இருக்கு″

″சரி சார். சொல்லுங்க. மனித நாகரிக வளர்ச்சின்னு சொன்னீங்களே, அப்படீன்னா என்ன?″

“இம்ம், ஆதியில காட்டுவாசியா இருந்த மனித இனம், நெருப்பு, சக்கரம், விவசாயம் உள்ளிட்ட பல கண்டுபிடிப்புகள் மூலமா படிப்படியா வளர்ச்சி அடைந்து, இப்ப இருக்கும் நிலைக்கு வந்திருக்கு. இதத்தான் நாகரிக வளர்ச்சின்னு சொல்றாங்க″.

அப்பொழுது ′மனித நாகரிக வளர்ச்சி நீரை வலுவாக சார்ந்திருப்பதை′ நீருக்கு சொல்ல வேண்டும் என்று தோன்றியது.

உடனே, ″உனக்கு தெரியுமா? மனித நாகரிக வளர்ச்சிக்கு நீர் எவ்வளவு முக்கியம்ணு?″ என்றேன்.

″நாகரிக வளர்ச்சிக்கு நீர் முக்கியமா? என்ன சொல்றீங்க?″ என்றது நீர்.

″ஆமாம். முதன்முதல்ல மனுச‌ங்க நாடோடியா இருந்தாங்க. அதாவது ஒரு குறிப்பிட்ட இடத்துல நிலையா குடியிருக்காம, ஒரு இடத்துல இருந்து மற்றொரு இடத்துக்கு நகர்ந்துக்கிட்டே இருந்தாங்க. அப்ப அவங்களுக்கு குடிப்பதற்கு நீர் தேவைப்பட்டுச்சு. ஏரிகள், ஆறுகள், நீரோடைகள், நீரூற்றுகள்ணு எங்கு பார்த்தாலும் அவர்களுக்கு நீர் கிடைச்சுது. அவங்களுக்கு மீன்பிடி சூழலாகவும் நீர்நிலைகள் இருந்துச்சு.″

″சார், ஆதி மனுச‌ங்களுக்கு நீர்நிலைகள் மூலமா நீரும் உணவும் கிடைச்சுதுங்கிறீங்க. பின்ன ஏன் அவங்க நாடோடிகளா இருந்தாங்க.″

″உண்மையில எனக்கு இதுபத்தி ரொம்ப விளக்கமா தெரியாது. புத்தகத்த படிச்சு சொல்லட்டுமா?″

″உங்களுக்கு இப்ப என்ன தெரியுமோ அத சொல்லுங்க. போதும்.″

″இம்ம். ஒருவேள வறட்சியின் காரணமா, மனிதர்கள் மற்ற நீர் ஆதாரங்கள நோக்கி நகர்ந்திருக்கலாம். இல்ல ஈரப்பதம் இருக்கும் இடம் தேடி இடம்பெயர்ந்திருக்கலாம்″

″ஓ…ஓ… ஆமாம்ல…″

″காலப்போக்கில, மனுச‌ங்க பெரிய ஆற்றுச் சமவெளியில குடி அமர்ந்து நீர பயன்படுத்தி விவசாயம் செய்ய‌ தொடங்கினாங்க. அப்போது தான் மனித நாகரிகங்களின் வளர்ச்சி ஆரம்பமாச்சுன்னு சொல்றாங்க.″

″அப்படியா?″.

″ஆமாம், ஒரு இடத்துல விவசாயம் பண்ணி உணவ உற்பத்தி செஞ்சாங்க. உணவு தேவை பூர்த்தியானதால அவங்களுக்கு இடம்பெயர தேவை ஏற்பட்டிருக்காது இல்லையா″

″சரிதான். நீங்க முன்ன சொன்ன மாதிரி நீர்நிலைகள் வறண்டிருந்தா?″

″கிணறு தோண்டி அதன்மூலமா நிலத்திற்கு நீர்ப்பாசனம் செஞ்சிருக்காங்க. அத்தோட வளர்க்கப்பட்ட விலங்குகளைப் பயன்படுத்தியும் விவசாயத்தினை மேற்கொண்டருக்காங்க″

″அப்படியா..″

″இம், பிறகு, நீர்நிலைகள்ல இயற்கையா ஏற்படும் வெள்ளத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள கரைகள் மற்றும் அணைகளை எவ்வாறு உருவாக்குவது என்பதை மனித சமூகம் கத்துகிட்டு இருக்கு. தெரியுமா முதல் மனித தொழில்நுட்பங்களில் ஒன்றாக நீர்ப்பாசனம் கருதப்படுது.″

″சிறப்பு″

″பிறகு, பாசனத்திற்காக நீரை உயர்த்துவதற்கு பாயும் நீரின் இயக்க ஆற்றலைப் பயன்படுத்தி நீர் சக்கரம் உருவாக்கப்பட்டது. பண்டைய நாகரிகங்களில் மனிதர்கள் கோதுமை அரைக்க நீர் அரவை இயந்திரங்களையும் உருவாக்கியிருக்காங்க.″

″மகிழ்ச்சி சார்″

″இம், சுருக்கமா சொல்லணும்னா குடிநீர் வழங்கல், நீர்ப்பாசனம், வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பு, நீர்வழிப் பயணம் மற்றும் மீன்பிடி தொழில்நுட்பங்கள் ஆகியவை நாகரிக வளர்ச்சியின் அடையாளங்கள். இவற்றுக்கு எல்லாம் நீர் மூலாதாரமா இருந்திருக்கு.

நீர்வழிப் பயணத்திற்காக கால்வாய்களை நிர்மாணிப்பதும், செல்லக்கூடிய நதிகளில் வழிசெலுத்தலை மேம்படுத்துவதும் நவீன கால நாகரிகங்களுக்கு முக்கியமான நீர் தொடர்பான பங்களிப்பாக இருக்குது.

அத்தோட, தொழில்துறை ஆலைகள் மற்றும் உற்பத்தி செயல்முறைகளுக்கு நீர் வழங்குதல், குடிநீர் வழங்குதல், ஆகியவை மிக முக்கியம்.

மேலும் அணைகள் போன்ற நீர்நிலைகள் மின் உற்பத்தி நிலையங்களாக மாற்றப்பட்டு அதன் மூலம் மின்சாரமும் உருவாக்கப்படுது. இன்னொன்றும் சொல்லணும். நாகரிகங்கள் வளர்ச்சியடைந்த போது, உணவு சமைப்பதற்கும், சுகாதாரத்திற்கும் நீர் முக்கியமா பயன்படுது. ஆகமொத்தத்துல, ஒரு நாகரிகம் என்பது பல்வேறு உள்கட்டமைப்புகளின் தொகுப்பாகக் கருதப்பட்டாலும் அதுல நீருக்கு பெரும் பங்கு இருக்கு.″

″அப்ப நீர் வளத்த பொருத்து தான் நாகரிக வளர்ச்சி அமைஞ்சிருக்கு.″

″ஆமாம், 21 ஆம் நூற்றாண்டின் நாகரிக வளர்ச்சியும் நீர் வளத்தை பொருத்து தான் அமையுமாம்″

″நல்லது சார். அப்ப நான் புறப்படுறேன்″ என்றுக் கூறி நீர் சென்றது.

″சரி″ என்றுக் கூறி, நான் ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்க தொடங்கினேன்.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

நீர் ஆற்றல் – நீருடன் ஓர் உரையாடல் 45

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.