அன்றைய நீர் மேலாண்மை எப்படி இருந்தது என நமக்கு விளக்குகிறார் இராமமூர்த்தி இராமாநுஜதாசன்.
நீரை முக்கியமாகக் கொண்டுள்ள உடம்புக்கெல்லாம் உணவைக் கொடுத்தவர் உயிரைக் கொடுத்தவர் ஆவர்.
உடம்பு உணவை முதலாக உடையது.
உணவு என்று சொல்லப்படுவது நிலத்துடன் கூடிய நீராகும்.
அந்த நீரையும் நிலத்தையும் ஒன்றாகச் சேர்த்தவர், இவ்வுலகத்தில் உடலையும் உயிரையும் படைத்தவர் ஆவார்.
விதைகள் விதைத்து மழையை எதிர்பார்க்கும் புன்செய் நிலங்கள் அதிகமாக இருப்பது அதை ஆளும் மன்னர்க்கு பயன் தருவதில்லை.
ஆதலால் பள்ளமான இடத்தில் நீர்நிலை உருவாக்கி நீரைக் கூட்டியவர், தன் பெயரை நிலைநிறுத்தியவர் ஆவார். அப்படி நீர்நலைகளை பெருகச் செய்யாதவர் தன் பெயரை நிலைநிறுத்தாதவர் ஆவார்.
‘நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத் தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் நீண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே
வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்பிற்று ஆயினும் நண்ணி ஆளும்
இறைவன் தாட்கு உதவாதே அதனால்
அடுபோர்ச் செழிய விகழாது வல்லே
நிலன் நெளி மருங்கின் நீர் நிலை பெருகத்
தட்டோர் அம்ம இவண் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே’
– புறநானூறு 18
மன்னர்கள் நமக்காக ஏரிகள், மற்றும் குளங்கள் ஏற்படுத்தினர். எங்கே ஏரிகள் அமைக்க வேண்டும், எங்கே குளங்கள் இருக்க வேண்டும் என்று திறம்பட அமைத்தனர்.
வேளாண்மைக்கும் உகந்தார்போல் இருக்க ஏரிகளை அமைத்தனர். நிலப்பகுதிகளுக்கு ஏற்ப ஏரியில் மதகுகளை அமைத்தனர்.
மதகு கால்வாய்களோடு நிலங்களை இணைத்தனர். இவற்றையெல்லாம் பார்க்கும்போது அன்றைய நீர் மேலாண்மை வியப்பாக உள்ளது.
உழவே இன்றியமையாதது என்ற சிறந்த கோட்பாடு இருந்தது.
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
என்று திருவள்ளுவர் போற்றும் உழவர்கள் இன்று மதிக்கப்படுகின்றார்களா? மிதிக்கபடுகின்றனரா?
தொழுங்குலத்திற் பிறந்தாலென் சுடர்முடி மன்னவராகி
எழுங்குலத்திற் பிறந்தாலென் இவர்க்குப்பின் வணிகரெனுஞ்
செழுங்குலத்திற் பிறந்தாலென் சிறப்புடையர் ஆனாலென்
உழுங்குலத்திற் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தாரே.
என்று உழவரின் சிறப்பை கம்பர் போற்றுகின்றார்.
இன்றைய இளைஞர்களுக்கு இவற்றைப் பற்றி அறிந்து கொள்ளும் மனம் இல்லை. காரணம் எடுத்துச் சொல்லுவாரில்லை.
மனிதர்களின் எண்ணங்கள் இவற்றையெல்லாம் பாதுகாக்க நினைக்கவில்லை. மாறாக சுயநலத்தால் அழிப்பவருக்கே சாதகமாக இருந்தன.
நீர் நிலை ஆக்கிரமிப்பிற்காக குரல் கொடுப்போர் யாரோ ஒரு சிலர். அவர்களும் மெத்தனப் போக்கு கடைபிடிப்பர். காரணம் ஆக்கிரமிப்பு அளவு கடந்துள்ளது.
ஓட்டுக்காக அரசியலார் கண்களை மூடிக் கொண்டுள்ளனர்.
நாட்டு நலனைவிட அதிகார போதை வலிமையானது.
நீர் நிலைகளில் உள்நாட்டுப் பறவைகளும் வெளிநாட்டுப் பறவைகளும் சுதந்திரமாக வந்து செல்லும் நிலை மாறி அவைகளை பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.
சதுப்பு நிலப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டன. அதை நம்பி வாழும் பறவையினங்கள் அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்து காலங்காலமாக வந்து கொண்டிருந்த வெளிநாட்டு பறவையினங்களின் வருகை குறைந்தன.
இப்போதிருக்கும் தலைமுறையினருக்கு எத்தைனையோ பறவைகள் படங்களில்தான் காணமுடியும். நேரடியாக பார்த்திருக்க முடியாது.
அன்று ஆறுகள் பாதுகாக்கப்பட்டன. ஆறுகளை வழிபட்டு வந்தனர். ஆற்றின் நீரை கால்வாய்களின் மூலமாக ஏரிகளுக்கு மடைமாற்றி வேளாண்மை செழிக்கச் செய்தனர்.
இன்றும் பாலாற்றின் நீர் காவேரிபாக்கம் மற்றும் மகேந்திரவாடி ஏரிகளுக்கு வரும் கால்வாய்களைப் பார்க்கலாம்.
ஆற்றங்கரையில்தான் அன்றைய நாகரீகம் வளர்ந்ததாக அறிகின்றோம்.
சென்னைக்கு அருகில் திருவள்ளுர் மாவட்டத்தில் ‘குசஸ்தலை’ ஆற்று கரையோரம் பழங்கால மனிதர்கள் வாழ்ந்ததாக அறிகின்றோம்.
உதாரணமாக பூண்டிக்கு அருகில் ‘குடீயம்‘ என்ற பகுதியில் கற்கால மனிதர்கள் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் சொல்லியுள்ளனர்.
ஆதி மக்கள் வாழ்ந்த குகைப்பகுதிகளை இன்றும் காணலாம். இவ்வூர் குசஸ்தலை ஆற்றின் அருகில் உள்ளது.
இந்த ஆற்றின் அருகில் உள்ள நெய்வேலி, வடமதுரை, ஆட்ரம்பாக்கம், பரிக்குளம் போன்ற ஊர்களில் பழங்கால மக்கள் வாழ்ந்த அடையாளம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது.
இவற்றைக் குறிப்பிடக் காரணம் நீரும் (ஆறும்) வனப்பகுதியும் மக்களுக்கு இன்றியமையாதது என்பதைக் காட்டவே.
அன்றைக்கு சென்னைக்கு வனங்களும் அருகருகே இருந்துள்ளன. திருவேற்காடு, மாங்காடு, தண்டரைக்காடு, ஈக்காடு, திருஆலங்காடு, வேலங்காடு, செங்காடு, மன்னூர்காடு, வயலூர்காடு, வெங்கல்காடு, சித்துக்காடு என இருந்தவற்றுள் இன்றைக்கு ஒன்றிரண்டு காடுகள்தான் உள்ளன.
இன்று நாம் காடுகளையும் நீர்நிலைகளையும் சரியாகப் பராமரிக்கவில்லை. அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும். எனவே அன்றைய நீர் மேலாண்மை பற்றி நன்குணர்ந்து, இன்றைய நம் தேவைகளைக் கருத்தில் கொண்டு பொறுப்புடன் செயல்படுவோமாக!
இராமமூர்த்தி இராமாநுஜதாசன்
திருநின்றவூர் 602024
கைபேசி: 9444410450
மறுமொழி இடவும்