நைட்ரஜன் – வளியின் குரல் 13

“வணக்கம் வணக்கம், எப்படி இருக்கீங்க? எல்லோரும் நலம் தானே!

மக்களே, உங்களை மீண்டும் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்லது, உங்களது முகத்திலும் மகிழ்ச்சியை காண முடிகிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் தானே!

சரி, இன்று நான் பேச இருக்கும் தலைப்பிற்கு வந்துவிடுகிறேன். என்ன தலைப்பு என்கிறீர்களா?

‘நைட்ரஜன்’ ஆம், வளிமண்டலத்தில் இருக்கும் நைட்ரஜன் வாயுவைப் பற்றி தான் இப்போது உங்களுடன் பேச இருக்கிறேன்.

உங்களில் பலருக்கும் நைட்ரஜன் பற்றி தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். மனித உடலின் அடிப்படை கட்டமைப்பிற்கு காரணமாக இருப்பது ‘புரதங்கள்’ தான். ஆங்கிலத்தில் Proteins என்று தானே அழைக்கிறீர்கள்?

புரதம் அமினோ அமிலங்களால் ஆக்கப்பட்டுள்ளது. அமினோ அமிலங்களில் கார்பன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களுடன், நைட்ரஜன் அணுக்களும் இருக்கின்றன. இப்பொழுது உணர்ந்தீர்களா? நைட்ரஜன் எவ்வளவு முக்கியமானது என்று.

ஆனால், பூமியில் குறிப்பக வளிமண்டலத்தில் நைட்ரஜன் ஈரணு வாயுவாகத்தான் இருக்கிறது. ஈரணு வாயு என்றால், இரண்டு நைட்ரஜன் அணுக்கள் ஒன்றாக இருக்கும் நிலையை குறிக்கிறது. அதாவது நைட்ரஜன் வாயுவை N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டுடன் அறியப்படுகிறது.

மிகவும் தூய்மையான தனிமங்களில் ஒன்றாக கருதப்படும் நைட்ரஜன், நிறமற்ற, மணமற்ற, சுவைற்ற ஒரு வாயு ஆகும்.

வளிமண்டலத்தின் முழு அளவில் 78.1% நைட்ரஜன் வாயுவே இருக்கிறது. மனித உடலில் சுமார் 3% அளவுக்கு நைட்ரஜன் அணுக்கள் இருக்கின்றன.

நைட்ரஜன் வாயுவின் சில பண்புகளைச் சொல்ல வேண்டும்.
வழக்கமாக பெரும்பாலான வாயுக்கள் நீரில் கரைவதில்லை. ஆனால் நீரில் கரையும் வாயுக்களும் உண்டு என்பதை இங்கு நினைவு கூர்கிறேன். அந்த வகையில், நைட்ரஜன் வாயு நீரில் மிகச்சிறிதளவே கரையக் கூடிய வாயு.

முக்கியமாக, நைட்ரஜன் வாயு நச்சுத் தன்மையற்றது. காற்றில் எரிவதுமில்லை. எரிதல் வினைக்கு உறுதுணையாக இருப்பதுமில்லை.

சரி, வளிமண்டலத்தில் இருக்கும் நைட்ரஜன் வாயுவால் என்ன நன்மை?

இருக்கிறது. இயற்கை செயல்முறைகளால் நைட்ரஜன் வாயு பூமிக்கு வந்து, நன்மைகளை செய்து பின்னர் மீண்டும் வளிமண்டலத்திற்கே சென்றுவிடுகிறது. இது ஒருவகையில் சுழற்சி தானே! ஆம், அதனால் தான் இதனை நைட்ரஜன் சுழற்சி என்கிறீர்கள்.

‘எப்படி நைட்ரஜன் வாயு இயற்கையாக பூமிக்கு வந்து மீண்டும் வளிமண்டலத்திற்கு திரும்புகிறது?’ என்ற கேள்வி உங்களுக்குள் எழுலாம்.

நிச்சயம் கேள்விகள் எழும். மனிதர்களே, நீங்கள் அறிவாளிகள் என்பது எனக்கு தெரியும். பதில் சொல்கிறேன்.

மின்னல் தோன்றும் போது நைட்ரஜன் வாயு அதன் ஆக்சைடுகளாக மாற்றம் அடைந்து, மழைநீரில் கரைந்து பூமியை வந்தடைகிறது. உயிரிச் செயல்முறையால் நைட்ரஜன் அதன் சேர்மமாக பூமியில் நிலைநிறுத்தப்படுகிறது.

நிலைநிறுத்தப்பட்ட நைட்ரஜன் சேர்மம் முதலில் தாவரங்களால் எடுத்துக் கொள்ளப்பட்டு பின்னர் விலங்குகளுக்குள் செல்கின்றன. கழிவுகளாகவோ அல்லது இவ்வுயிரினங்கள் மடிந்து மண்னில் புதைந்து சிதைவடையும் போதோ நைட்ரஜன் மீண்டும் வளிமண்டலத்தில் வெளியேற்றப்படுகிறது.

எனது பதிலில் உங்களுக்கு திருப்தி தானே!

இம்ம்… இயற்கையின் அறிவியல் மகத்தானது அல்லவா!

உங்களுக்கு நன்மை செய்யும், அல்ல அல்ல உங்களை வாழவைக்கும் இயற்கைக்கு நீங்கள் நன்றியோடு இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஏனெனில் நீங்கள் அறிவாளிகள் மட்டும் அல்ல, அன்பானவர்களும் கூடத்தான்.

இருக்கட்டும். மனிதர்களின் அயராத உழைப்பு மற்றும் பெரும் முயற்சியால் நைட்ரஜன் வாயு நேரடியாகவே பலவகைகளில் பயன்படுத்தப்படுகிறது.

ஆம், நைட்ரஜனேற்ற வினைகளில் நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. வெண்சுடர் எரிவிளக்குகளிலும், தீயடக்கியாகவும், எஃகு தயாரிப்பிலும், நைட்ரஜன் வாயு பயன்படுத்தப்படுகிறது.

அத்தோடு, சில வகை வானூர்திகள் மற்றும் பந்தய வாகனங்களின் சக்கரங்களை நிரப்பவும் நைட்ரஜன் வாயு பயன்படுகிறது

முக்கியத்துவம் வாய்ந்த சேர்மமான அமோனியா தயாரிப்பிலும் நைட்ரஜன் வாயு பயன்படுகிறது.

நைட்ரஜனை நினைத்து நான் எப்பொழுதும் பெருமைக் கொள்கிறேன். ஏன் தெரியுமா?

வளிமண்டலத்தில் பெருமளவு இருந்தும், நான் தான் பெரியவன் என்ற எவ்வித கர்வமும் இல்லாத நல்ல வாயு நைட்ரஜன்.

அமைதியாகவும், தீங்கற்றதாகவும், தன்னையே அர்ப்பணித்து பிறருக்கு பல நன்மைகளை செய்து வரும் நைட்ரஜன் போல எல்லோரும் வாழவேண்டும் என்பதே என் விருப்பம்.

மனிதர்ளே! எனது ஆசையை நீங்கள் நிறைவேற்றுவீர்களா?

எனது கோரிக்கையினை நீங்கள் நிச்சயம் பரிசீலிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இன்று விடைபெருகிறேன்.

மற்றொரு நாளில் மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.

நன்றி.”

(குரல் ஒலிக்கும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.