பச்சை பட்டாணி கூட்டு அருமையான தொட்டுக்கறி ஆகும். தற்போது பச்சை பட்டாணி சீசன் என்பதால் இதனை அடிக்கடி செய்து ருசிக்கலாம்.
இதனை ரசம் சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணப் பொருத்தமாக இருக்கும்.
இதனை விரைவாகவும் செய்து முடிக்கலாம். பண்டிகைக் காலங்களிலும், விருந்தினர் வருகையின் போதும் இதனை செய்து அசத்தலாம்.
இனி சுவையான பச்சை பட்டாணி கூட்டு செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பச்சை பட்டாணி – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு
மசாலா தயார் செய்ய
பச்சை மிளகாய் – 1 எண்ணம் (பெரியது)
தேங்காய் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
பெருஞ்சீரகம் – 1/2 டீஸ்பூன்
கசகசா – 1/2 டீஸ்பூன்
முந்திரி பருப்பு – 5 எண்ணம்
தாளிக்க
நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 3 எண்ணம் (சிறியது)
கறிவேப்பிலை – 1 கீற்று
கடுகு – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 1/8 டீஸ்பூன்
செய்முறை
பச்சை பட்டாணியுடன் தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பட்டாணி முக்கால் பாகம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் பச்சை மிளகாய், முந்திரி பருப்பு, கசகசா, பெருஞ்சீரகம், தேங்காய் துருவல் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து விழுதாக்கிக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, கறிவேப்பிலை மற்றும் சீரகம் சேர்த்து தாளிதம் செய்யவும்.
பின்னர் அதில் மசாலா விழுதினைச் சேர்த்து அதனுடன் தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
மசாலா கொதி வந்ததும் அதனுடன் வேக வைத்த பட்டாணி மற்றும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
மிதமான தீயில் வாணலியை மூடி வைத்து அவ்வப்போது கிளறி விடவும்.
தண்ணீர் வற்றிக் கெட்டியானதும் அடுப்பினை அணைத்து விடவும்.
சுவையான பச்சை பட்டாணி கூட்டு தயார்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் பெருஞ்சீரகத்திற்கு பதிலாக சீரகம் சேர்த்து மசாலா தயார் செய்யலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!