தெருவில் தனிமையில் நடந்து கொண்டிருந்தான் குமார். அவன் வருகையை பார்த்ததும், தெரு நாய்கள் கோபத்தில் சத்தமிட்டு குரைத்தன.
குமாருக்கு கோபம் வந்தது. சட்டென்று குனிந்து, கல் எடுத்து, நாய்களை அடிக்க தயாரானான். அந்த நேரம் பார்த்து, அவனது நண்பன் ராம் ஓடி வந்து அவனை தடுத்தான்.
“நாயை கல்லால் அடிக்க கூடாது; ரொம்ப தப்பு, பைரவர் சாமிடா அது!” என்றான் ராம்.
“கடிக்க வர்ற நாய தோள்ல தூக்கி வச்சு கொஞ்ச சொல்றியா?” கோபமாய் கேட்டான் குமார்.
ராம் எதுவும் பேசாமல், பக்கத்தில் இருந்த பெட்டிக் கடையிலிருந்து பிஸ்கட்டும் ரொட்டியும் வாங்கி வந்து நாய்களுக்குப் போட்டான். அவைகள் வாலாட்டிய படி சாப்பிட்டு விட்டு, அவனைப் பரிவோடு பார்த்தன.
“குமார், பிஸ்கட்டைப் பார்த்ததும் கோபத்தில வந்த நாய் கூட சாந்தமாகிப் போயிடுச்சு! அது மாதிரி, கோபப்படுற மனுசங்க கிட்ட அன்பு, கருணைங்கிற பிஸ்கட்டைப் போட்டா, எதிரியும் நமக்கு நண்பன் ஆயிடுவான்!” என்றான் ராம்.
ராமின் வார்த்தை, குமாரின் அடி மனதில் ஆழமாய் விதை போட, மற்றவர்கள் மீது ‘பரிவு’ காட்ட வேண்டும் என்ற எண்ணம் வேரூன்றியது.
எம்.மனோஜ் குமார்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!