தம் சொந்த தங்கையைவிட, நண்பர்களின் தங்கை மீது பாசம் வைப்பது, பாதுகாப்பு அரணாக இருப்பது, அதே போல் அந்த தங்கைகளும் பெரும் பாசமலராய் உருவெடுப்பது எல்லாம் ஒரு கவிதை போன்ற உணர்வு.
இப்படிதான் என் பள்ளி தோழன் பழனிவேலுவின் தங்கை மாலதி, எனக்கு கிடைத்த பாசமலர். இந்த பாசமலர் இப்போது புகுந்த வீட்டில் போய் வாடி வதங்குகிறது.
முறைப்படி மாப்பிளை பார்த்து பொருத்தம் பார்த்து பெரிய செலவு செய்து நடத்திய திருமணம்.
ஆரம்பத்தில் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அவள் கணவன் ஒரு நூற்பாலையில் நல்ல சம்பளத்தில் வேலையில் இருந்தான்.
அடுத்தடுத்து இரண்டு பெண் பிள்ளைகள். மாலதி கூட்டு குடும்பத்தில் மூத்த மருமகளாக பொறுப்புடன் எல்லாவற்றையும் கவனித்தாள்.
கணவனின் தம்பிக்கு இவள்தான் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தாள். திடீரென்று ஆலையை மூடிவிட, கணவன் வேலை இழந்து, குடியில் மூழ்கி மாலதியின் மொத்த வாழ்க்கையையும் நாசமாக்கி விட்டான்.
குடிகார கணவனால் புகுந்த வீட்டில், அந்த ஊரில் மாலதி பெரும் அவமானத்திற்கு உள்ளானாள்.
காலை முதல் மாலை வரை ஓடாய் உழைத்தாலும் எந்த அங்கீகாரமும் அன்பும் இல்லாத அவள் வாழ்க்கை ஒரு நரகமாகவே மாறிவிட்டது.
பழனி வேலுவிற்கு தங்கை மாலதி என்றால் உயிர். மாலதி வேறு அம்மாவின் முகச்சாடை கொண்டுள்ளதால் ஏகப்பட்ட பாசம்.
‘ஒரு ராணி போல் வாழ்ந்தவள், இப்படி சீரழிகிறாளே’ என்று ஊரார் உறவினரும் ரொம்ப துயரத்தில் இருக்கிறார்கள்
ஒரு வாரமாய் மாலதி வீட்டில் பெரும்பிரச்சினை நடக்கிறது. இளைய மருமகள் மாலதியை அடிக்க துணிந்து விட்டாள்.
மாமியார் தூண்டி விடுகிறார், மாமனார் வேடிக்கை பார்க்கிறார், பிள்ளைகள் பயத்தில் அழுகின்றன. கணவன் குடித்துவிட்டு மட்டையாகி கிடக்கிறான்.
மாலதி ‘தற்கொலை செய்து கொள்ளலாமா? அல்லது யாரையாவது கொலை செய்து விடலாமா? என்று இருக்கிறாள்’ என அக்கம்பக்கத்தில் இருந்து செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.
பழனி துடிக்கிறான், அருவாளை எடுத்து இடுப்பில் சொருகி கொண்டு “இரண்டில் ஒன்று பார்த்து விடலாம்” என்கிறான்.
நான் பழனியை சமாதானபடுத்திக் கொண்டே இருந்தேன். நான்கு பேர் நம்ம தரப்பில் போய் நியாயம் கேட்கலாம் என்ற முடிவானது,
நான், பழனிவேல், இன்னும் இரண்டு பேரும் கிளம்பி மாலதி வீட்டுக்குப் பயணமானோம்.
மாலதி தன் பாதத்தை பேப்பரில் வரைந்து தர, அதற்கு ஏற்றார் போல் நான் சென்னையிலிருந்து வாங்கி தந்த செருப்பைப் போட்டுகொண்டு ஊர் முழுக்க தம்பட்டம் அடித்தது. என் சொந்த தங்கைகளிடமும் போய் வம்பிழுத்தது என்று பழைய நினைவுகள் வந்து கொண்டே இருக்கறது.
மாலதி நடிகை மாதவியின் தீவிர ரசிகை. மாலதிக்கும் அவள் போன்ற பெரிய கண்கள். ‘ராகங்கள் பதினாறு உருவான வரலாறு‘ பாட்டு அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.
மாலதியை மேற்கொண்டு படிக்க வைத்து நல்ல வேலை வாங்க வேண்டும் என்று நான் அப்போது தலைப்பாடாய் அடித்துக் கொண்டேன்.
யாரும் கேட்கவில்லை. அவளை இளவரசி போல் பார்த்துக் கொண்டார்களே தவிர, எதிர்காலம் பற்றி யோசிக்கவில்லை,
பொத்தி பொத்தி வளர்த்து கடைசியில், புதை குழியில் தள்ளுவதுதான் எங்கள் ஊர் வழக்கம்.
மாலதியை யாரோ ஒருவன் காதலிப்பதாய் சொன்னான். அவனையும் இதுபோல் நங்கள் நான்கு பேர் போய் அடித்து விரட்டி விட்டோம்.
அவன் “எனக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. மாலதியும் என்னை காதலிக்கிறாள். நான் அவளை பத்திரமாக வைத்து பார்த்து கொள்வேன்” என்று மன்றாடினான்.
எதுவும் எங்களுக்கு அப்போது கேட்கவில்லை; புரியவில்லை, அவனை அடித்து விரட்டுவதிலேயே குறியாய் இருந்து, அதில் வெற்றியும் பெற்று பெரும் பந்தா காட்டித் திரிந்தோம்.
ஒரு வழியாக மாலதி வீட்டுக்கு வந்துவிட்டோம். மாலதி வரவேற்றாள். மிகவும் மெலிந்து தலை முடியெல்லாம் கொட்டி , நரைத்து, எத்தியோப்பிய பஞ்சத்தின் பிடியில் சிக்கிய பெண் போல் இருந்தாள்.
‘அடபாவிகளா! எப்படி இருந்தவளை இப்படிஆக்கி விட்டீர்களே?’ அவளை பார்த்ததும் வயிறெல்லாம் எரிந்தது.
பழனி கடும் கோபத்தில் இருந்தான்.
அவர்கள் ஏதோ சொல்ல ஆரம்பிக்கும் போதே இவன் இடைமறித்து பேச ஆரம்பித்து விட்டான்
அவனை கட்டுப்படுத்தவே முடியவில்லை. சமாதானப்படுத்தியும் அவனால் பொறுமையாக பேச முடியவில்லை.
மாலதியின் மாமனாரும் மாமியாரும் மாலதியின் குறைகளை அடுக்கிக் கொண்டே போனார்கள்.
நான் அவர்களுக்கு சமாதானம் சொல்லி நிலைமையை அமைதியாக்கி, பின்னர் நம் தரப்பு நியாத்தை சொல்ல முயற்சி செய்தேன்.
அதில் ஒரு யுக்தியாக மாலதிக்கு கொஞ்சம் புத்திமதி சொல்வது போல் ஆரம்பித்து அவள் மாமனார் மாமியாரை சாந்த படுத்த நினைத்தேன்.
மாலதிக்கு எரிமலை வெடித்ததுபோல் கோபம் வந்து விட்டது,
“என்னை என்ன அட்ஜஸ்ட் செய்யச் சொல்கிறீர்கள்?
குடித்து விட்டுவந்து நடுவீட்டில் மூத்திரம் போகும் கணவனையா? உள்ளாடையைகூட என்னை துவைக்க சொல்லும் இந்த இளைய மருமகளையா?
ஏதோ கேவலமான மிருகத்தை போல் என்னை நடத்துகிறார்கள் பரவயில்லை, என் பிள்ளைகள் என்ன பாவம் செய்தார்கள்?
யாராவது ஒரு ரூபாய்க்கு ஒரு சாக்லேட் வாங்கி இதுவரை தந்ததுண்டா? எல்லவற்றையும் பொறுத்துக்கொண்டேன்,
ஆனால், அடிமடியில் கை வைப்பதுபோல் தவ வாழ்க்கை வாழும் என் நடத்தையைப் பற்றி கேவலமாகப் பேசுவதை எப்படி பொறுக்க முடியும்?
என் கணவன் குடிப்பதால் நான் நடத்தை கெட்டவளா?
பக்கத்து வீட்டு ஆளிடம் பேசினால் அதற்கு கதை திரைக்கதை எழுதும் சின்ன மருமகள் சொன்னதை நம்பி என்னை கேவலப் படுத்துவார்களா?
நான் பதிலுக்கு அவள் வண்டவாளத்தை சொல்ல, உடனே அவள் என்னை ஒரு கம்பை எடுத்து அடிக்கிறாள்.
அவளை தடுக்காமல் மாமனாரும் மாமியாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? நான் இங்கு யாரை அட்ஜஸ்ட் செய்ய வேண்டும்?
அண்ணா நீங்க ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பேச கூடாது. நீங்கள் காதலித்து திருமணம் செய்து நல்லபடியாக செட்டில் ஆகி விட்டீர்கள்,
நீங்கள் காதலிக்கும்போது உங்களை ‘என்ன ஏது?’ என்று கேட்காமல் யாரும் அடித்து விரட்டவில்லை.
எனக்கு அப்படியா? இங்கே கொண்டு வந்து தள்ளி விட்டு விட்டு உபதேசம் செய்கிறீர்கள்.
எனக்கு எந்த சமரசமும் வேண்டாம், நீங்க எப்போதும் போல் ‘வழ வழா கொழ கொழான்னு பேசாதீங்க,
என்னுடைய 40 பவுன் நகையும், என் வீட்டுக்காரருக்கு கிடைக்க வேண்டிய சொத்தும் தந்து விடச் சொல்லுங்கள் நான் இங்கிருந்து போய் விடுகிறேன்.
அந்த சொத்து கூட என் பெயரில் வேண்டாம். இந்த பிள்ளைகள் பேருக்கு மாற்றி கொடுத்தால் போதும்” என்று படபடவென பேசிவிட்டு மாலதி எழுந்து போய்விட்டாள்.
பழனி எழுந்து படியில் அமர்ந்து இருந்த இளைய மருமகளை ஓங்கி ஒரு உதை விட்டான்.
“என் தங்கச்சி மேலே கை வச்சிட்டியா நீ?” என்று அசிங்கமாக திட்டி அடிக்கத் தொடங்கினான்,
தடுக்க போன மாமனாருக்கும் ஒன்று கொடுத்தான், மாலதியின் கொழுந்தன் பழனியை கீழே தள்ளினான்.
பெரும் கலவரம் மூண்டது. ஒரே கூச்சல், கூக்குரல். காது கூசும் அளவுக்கு கெட்ட வார்த்தைகள். அக்கம் பக்கம் உள்ளவர்கள் கூடி விட்டார்கள்,
அவர் அவர் நியாயங்கள் சொல்லப்பட்டன,
மற்ற நண்பர்கள் பழனியை சமாதானப்படுத்தி பஸ் ஸ்டாண்டண்டுக்கு அழைத்து போனார்கள் , மாலதியும் கூடவே போனாள்,
அந்த அடிபட்ட பெண்ணிடம் போய் நான் மன்னிப்புக் கேட்டேன், போலீசுக்கு க்ளம்பிய அவள் கணவனை மறித்து “அது இன்னும் பிரச்சனையைப் பெரிசாக்கும். உன் மனைவியும் காவல்நிலையம் அலைய வேண்டும்” என்று சொல்லி அவனிடமும் மன்னிப்பு கோரினோம்.
மாமனாருக்கு ஒரு கும்பிடு, மாமியாருக்கு ஒரு கும்பிடு. நிலைமை கொஞ்சம் கட்டுக்குள் வந்தது.
“6 மாதத்தில் 40 பவுன் நகை திருப்பி தரப்படும், சொத்தில் ஒரு பங்கு பிள்ளைகள் பெயருக்கு மாற்றப்படும்.
வயதானவன் என்று கூட பார்க்காமல் என்னை அவள் அண்ணன் அடி த்து விட்டான், மாலதி இங்கிருந்து போய் விட வேண்டும் எங்கள் சாவுக்கு கூட வரக்கூடாது, ஒட்டும் இல்லை உறவும் இல்லை” மாமனார் திட்ட வட்டமாக சொல்லி விட்டார்.
பஸ் ஸ்டாண்டுலிருந்து திருப்பி வந்த பழனி, மாலதி மாமனார் வீட்டு வாசலில் மண்ணை வாரி இறைத்தான்.
“என் தங்கச்சி வாழக்கையை கெடுத்த நீங்கள் எல்லாரும் நாசமாக போவீங்க” என்று சாபம் இட்டான். அங்கிருந்து கிளம்பினோம்,
பழனி தொடர்ந்து சபித்து கொண்டே வந்தான்,
“பழனி, மாலதி வாழ்க்கையை நாமளும் தான்நாசம் பண்ணியிருக்கோம். நீ அவர்களை மட்டும் சபிக்காதே” என்று சொன்னேன்.
“என்னடா சொல்றே?.” அதிர்ந்தான்
“ஆமாண்டா நாம மாலதியை லவ் பன்றேன்னு சொன்ன ஒரு பையனை அடிச்சு விரட்டுனோமில்ல. அவனை மாலதியும் விரும்பியிருக்காடா. நாம அவளையும் கேட்டிருக்கனும்டா.
ஏதோ நல்லது செய்யிறோம், அவளை பத்திரமா பாத்துகிறோம் பேர்வழின்னு அவளை இந்த நரகத்திலே தள்ளி விட்டுவிட்டோம்டா..” என்றேன்
“இத்தனை வருடம் கழித்து சொன்ன எப்படிடா? இப்ப என்ன செய்யிறது?”
“பிராயசித்தம் தான் செய்யணும். அவளை அங்கிருந்து மீட்டு எடுத்து ஒரு தனி வீடு கட்டி கொடுத்து அட்லீஸ்ட் நிம்மதியவாவது வாழ விடணும்.”
“சரிடா, கட்டாயம் செய்யிறேன்டா” என்றான்பழனி.
ஆனால் அவள் இழந்த வாழ்க்கையை எப்படி மீட்டு எடுப்பது? அதற்கு என்ன பிராயச்சித்தம்.
மாலதி அந்த பையனை அடித்து விரட்டியதை குத்திக் காட்டி பேசியது திரும்ப திரும்ப எனக்கு காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது .
அவள் காதலை கெடுத்து, நான் காதல் திருமணம் செய்து கொண்டது எல்லாம் வேண்டுமென்றே நடக்கா விட்டாலும் அதனால் ஏற்பட்ட வலி வலிதானே. ஒரே வெறுப்பாய் இருந்தது.
வீட்டுக்குள் நுழைந்ததும் பாகற்காய் பொரியல் திங்க மறுத்து அடம் பிடிக்கும் பிள்ளைகளிடம் மனைவி சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.
எனக்கும் திட்டு விழுந்தது. “நீங்க ஊர் சுத்துங்க, இதுங்க ரெண்டும் சொன்ன பேச்சு கேட்க மாட்டேன்கிறது. காசு கொடுத்து வாங்கி கஷ்டப்பட்டு சமைச்சா இதுங்க இப்படி தூக்கி மண்ணுல போடுதுங்க” என்று சத்தம் போட்டாள்.
“வேணாம்னா அவனுகள விடுமா” என்றேன்
“அப்ப நீங்க சாப்பிடுங்க” என்று ஒரு தட்டு பாவக்காயையும் என்னிடம் தள்ளினாள்.
“அய்! ஜாலி… “பிள்ளைகள் கோரஸ் பாடினார்கள்.
நான் எதுவும் பேசாமல் எல்லா பாகற்காய் பொரியலையும் கட கடவென்று சாப்பிட ஆரம்பித்தேன்.
“உங்களுக்கு கசப்பு தெரியலையா டாடி? சொல்லுங்க டாடி?” பிள்ளைகள் ஆச்சர்யப்பட்டார்கள்.
நாடி நரம்பு, மூளை, மனது என உடல் முழுவதும் மாலதி கதைகள் போன்ற தீராக் கசப்புகள் ஊறிக் கிடக்க, பாகற்காய், கடுக்காய் எதுவும் கசப்பதில்லை.
முனைவர் க.வீரமணி
சென்னை
கைபேசி: 9080420849
உங்க கதையெல்லாம் வேற லெவல் சார் வாழ்த்துக்கள் சார் சூப்பர். இந்த கதையில் வரும் ஒவ்வொரு வார்த்தைகளும் மனதை நெகிழி செய்கிறது சார்.
அருமையான கதை. வாழ்த்துகள்
எப்பொழுதும் போல் பெண் சார்ந்த சோகக்கதை ஆனால் ஒவ்வொரு கதைக்கும் ஒரு உண்மைத்துவமும் உணர்வு போராட்டமும் கதையின் வடிவத்தை உருவாக்கி விஸ்வரூபம் எடுக்க வைத்திருக்கிறது எல்லாமும் நாம் நடிப்பதை போல் வாழ்வதைப் போல் இருந்து விடாது அது வாழ்வின் சூட்சுமம் என்பதை தங்களின் ஒவ்வொரு கதையும் விளக்குகிறது நளினமும் உணர்வுகளும் எங்கு பார்த்தாலும் நிரம்பிக் கிடக்கிறது..
Awesome story sir… it’s very realistically portrayed… literally just like mirrors of lives surrounded in the world…
Very nice to 📖read and ❤heart touching
Keep writing a story like this 😊