பாசிப்பயறு கிரேவி சூப்பரான தொட்டுக்கறி ஆகம். இது இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதம் போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ள பொருத்தமாக இருக்கும்.
பாசிப்பயறு சத்து மிகுந்தது. இது தோலுடன் இருப்பதால் இதில் நார்ச்சத்து அதிகம். எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
பாசிப்பயறு கிரேவி செய்வது மிகவும் எளிது. குறைவான நேரத்தில் அசத்தலான சுவையில் இதனைச் செய்து முடிக்கலாம்.
இனி சுவையான பாசிப்பயறு கிரேவி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பாசிப்பயறு – 150 கிராம்
பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (பெரியது)
தக்காளி – 3 எண்ணம் (நடுத்தர அளவு)
மசாலா பொடி – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி இலை – 2 டேபிள் ஸ்பூன் அளவு (நறுக்கியது)
நெய் – 1 ஸ்பூன்
கரம்மசாலா பொடி – 2 டீஸ்பூன்
இஞ்சி – 1 இன்ச் அளவு
வெள்ளைப்பூண்டு – 2 பற்கள் (மீடியம் சைஸ்)
தாளிக்க
நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1 எண்ணம் (பெரியது)
கறிவேப்பிலை – 2 கீற்று
சீரகம் – 1 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்
செய்முறை
பாசிப்பயறினை வாணலியில் சேர்த்து மீடியம் தீயில் வைத்து, ஒருசேர வாசனை வரும்வரை 4 நிமிடங்கள் வறுத்து ஆறவிடவும்.
பின்னர் பாசிபயறினை கழுவிக் கொள்ளவும்.
குக்கரில் பாசிப்பயறுடன் அதன் அளவினைப் போல் 4 மடங்கு தண்ணீர் சேர்த்து 8 விசில் வரை வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
தக்காளியை அலசி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
கொத்தமல்லியை அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை காம்பு நீக்கி அலசிக் கொள்ளவும்.
வாணலியில் நல்ல எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் அதில் சீரகம், பெருஞ்சீரகம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.
பின்னர் அதில் பெரிய வெங்காயம் சேர்த்து கண்ணாடிப் பதம் வரும்வரை வதக்கவும்.
அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசனை நீங்கியதும் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும்.
அதனுடன் மசாலா பொடி சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
பின்னர் அதனுடன் வேக வைத்துள்ள பாசிப்பயறினைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் ஒருசேரக் கிளறவும்.
பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் கரம் மசாலா பொடி சேர்க்கவும்.
ஒருகொதி வந்ததும் அடுப்பினை மிதமான தீயில் வைத்து கிரேவி பதம் வந்ததும் கொத்தமல்லி இலையைத் தூவவும்.
பின்னர் அதில் நெய்யினைச் சேர்த்து அடுப்பினை அணைத்துவிடவும்.
சுவையான பாசிப்பயறு கிரேவி தயார்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் மசாலா பொடிக்குப் பதில் கொத்தமல்லி பொடி, சீரகப்பொடி, மிளகாய் பொடி மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து கிரேவி தயார் செய்யலாம்.