பாதுகாப்பான வங்கிச்சேவை

பாதுகாப்பான வங்கிச்சேவை – நல்ல நடைமுறைகள்

பாதுகாப்பான வங்கிச்சேவை குறித்த நடைமுறைகளை நாம் அனைவரும் அறிந்து செயல்பட வேண்டும்.

ஒரு புறம் வசதிகள் கூடுகின்றன. மறுபுறம் அதற்கேற்றவாறு ஏமாற்றுக்காரர்களும் பெருகிவிட்டார்கள்.

மின்னணு சேவை எளிதானது. ஆனால் பாதுகாப்பானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பணப் பரிவர்த்தனைகளில் வசதிகள் கூடிக் கொண்டே போகிறது. ஒரு காலத்தில் வங்கிக்கு சென்று மணிக்கணக்கில் கால் கடுக்க நின்று நாம் செய்த வேலைகளை,  இன்று ஏடிஎம் இயந்திரங்களின் மூலம் அல்லது இணைய வழி சேவை மூலம் மிக எளிதாகச் செய்து முடிக்கின்றோம்.

வங்கிக்கே செல்லாமல் வங்கிக் கணக்கு ஆரம்பிக்க முடியும். வங்கிக்கே செல்லாமல் நிறைய பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும்.

மின்னணு சேவையைப் பாதுகாப்பான வழிமுறையில் பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிப் பார்ப்போம்.

பாதுகாப்பான வங்கிச்சேவை பெற‌ 

இணையதளம் மூலம் சேவை பெற‌, சோதித்து அறியப்பட்ட, நம்பகமான உலாவிகளை (Browser) மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

பணம் செலுத்தும் பரிவர்த்தனைகளுக்கு https பாதுகாப்புடன் கூடிய இணையதளங்களைப் பயன்படுத்தவும். உலாவியில் இணையதள முகவரி அருகில் பூட்டு படம் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பணம் செலுத்தும் செயலிகள் (Apps) மற்றும் உலாவிகளை (Browser) அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

பொது இடங்களிலுள்ள கணினி அல்லது மற்ற‌ சாதனங்களை உபயோகித்து உங்கள் கணக்கிற்குள் லாக்இன் செய்ய வேண்டாம்; எந்தவிதமான பணப் பரிவர்த்தனையும் செய்ய வேண்டாம்.

பாதுகாப்பற்ற மற்றும் திறந்த வலைதள வசதிகளை உபயோகித்துப் பரிவர்த்தனைகள் செய்ய வேண்டாம்.

தெரிந்த பயனாளிகளுக்கு மட்டுமே பணத்தைப் பரிமாற்றம் செய்யுங்கள்.

யுபிஐ (UPI) மூலம் பணம் செலுத்தும்போது பெறுபவரின் கோரிக்கைத் தகவல்களைச் சரிபார்க்கவும்.

உங்கள் வங்கிக் கணக்கு சார்ந்த முக்கிய தகவல்களான‌
பின் (PIN), ஓடிபி (OTP), சிவிவி (CVV), யுபிஐ பின் (UPI PIN), கடவுச் சொல் (Password) ஆகியவற்றை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

உங்களின் முக்கியத் தகவல்களை போனில் வைத்திருக்க வேண்டாம்.

பரிவர்த்தனைக்குப் பிறகு வரும் குறுஞ்செய்தியில் உள்ள பரிவர்த்தனைத் தொகை சரியாக உள்ளதா என்று பார்த்திடுங்கள்.

கடன் அட்டை / பற்று அட்டை பயன்படுத்தும்போது

கடன் அட்டை அல்லது பற்று அட்டை பயன்படுத்தும்போது அட்டை மீது எப்போதும் கவனம் செலுத்துங்கள்.

உங்கள் கண்பார்வையில் இருந்து அட்டை விலகிச் செல்லக் கூடாது.

பரிவர்த்தனைக்குப் பிறகு வரும் குறுஞ்செய்தியில் உள்ள பரிவர்த்தனைத் தொகை சரியாக உள்ளதா என்று பார்த்திடுங்கள்.

ரசீதுகளை பாதுகாப்பான முறையில் அகற்றிடுங்கள். முக்கியமாக‌ பரிவர்த்தனை நடந்த இடத்திலேயே கிழிக்காமல் போட்டுவிட்டு வரக்கூடாது.

கடன் மற்றும் பற்று அட்டை குறித்த தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

அங்கீகரிக்கப்படாத மின்னணு வங்கிப் பரிவர்த்தனை

வங்கி அனுப்பும் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) எச்சரிக்கைகளுக்குப் பதிவு செய்யுங்கள்.

உங்கள் வங்கியின் தொலைபேசி எண் / இலவச தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, கணக்கு வைத்துள்ள கிளையின் முகவரியைத் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் வங்கிக் கணக்கில் அல்லது கடன் / பற்று அட்டையில் அங்கீகரிக்கப்படாத அல்லது மோசடியான பரிவர்த்தனை நடைபெற்றால் பயப்படாதீர்கள். உடனடியாக வங்கிக்குப் புகார் அளித்து ஒப்புதலைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

நீங்கள் அறிவிக்கும் வரை இழப்பு உங்களுடையது. நீங்கள் அறிவித்தபின் பரிவர்த்தனை நடைபெற்றால், இழப்பு வங்கியுடையது.

ஏமாற்றுத் திட்டங்கள்

அதிக வருவாய் தரும் திட்டங்களைக் கண்டு மயங்காதீர்கள்; ஊக்கத்துடன், கவனத்துடன் செயல்படுங்கள்.

அதிக வருவாய் தரும் வாய்ப்புக்கள் அதிக நேரிடர் (risk) உடையவை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியினால் நெறிப்படுத்தப்பட்டு மேற்பார்வையிடப்படுவதால் வங்கியில் போடப்படும் வைப்புகள் (Deposits) பாதுகாப்பானவை.

மேலும் வங்கி குறைதீர்ப்பாளர் மூலம் புகார் தீர்விற்கான அமைப்பு முறையும் உள்ளது.

வங்கிகளில் போடப்படும் வைப்புகள், டெப்பாசிட் இன்ஸ்யூரன்ஸ் மற்றும் கிரிடிட் கியாரென்டி கார்ப்பரேசன் மூலம் உத்திரவாதம் ஒரு வங்கிக்கு வாடிக்கையாளர் ஒருவருக்கு ரூ 1 இலட்சம் வரை வழங்கப்படுகிறது.

பிரச்சினை தீர்க்கும் வழிமுறைகள்

உங்கள் புகார்களை எப்படி சமர்ப்பிப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தவறிய ஏடிஎம் பரிவர்த்தனைகள், முன்னறிவிப்பின்றி வசூலித்த கட்டணத்தைக் காட்டும் அறிக்கை, கடன் அட்டை சார்ந்த பிரச்சினைகள் கவலை அளிக்கிறதா? இதோ தீர்க்கும் வழிமுறைகள்.

முதலில் வங்கிக் கிளையிலுள்ள புகார் பதிவேட்டில் புகாரைப் பதிவு செய்யவும். அல்லது வங்கியின் இணையதளத்தில் ஆன்லைனில் புகாரைப் பதிவு செய்யவும். தேவைப்பட்டால் புகார் தீர்விற்கான அதிகாரியை அணுகவும்.

பொதுவாக ஒரு மாத காலத்திற்குள் உங்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

ஒரு மாதத்திற்கும் தீர்வு இல்லை என்றால் வங்கிக் குறைதீர்ப்பாளரை (Banking Ombudsman) அணுக வேண்டும்.

காகித வடிவில் புகாரை பதிவு செய்ய வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகார் படிவத்தைப் பயன்படுத்துவது நல்லது.

https://bankingombudsman.rbi.org.in என்ற இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் புகார் பதிவு செய்யலாம்.

பாதுகாப்பான வங்கிச்சேவை பற்றி அறிவோம். விழிப்புடன் இருப்போம். பணத்தைப் பாதுகாப்போம்.

 


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.