பச்சையூரில் கண்ணப்பன் என்ற நல்லவன் ஒருவன் இருந்தான். அவன் வீட்டின் முன்புறம் சாலையை ஒட்டி மாமரம் ஒன்ற இருந்தது.
பரந்து விரிந்து கிளைகளை எல்லா திசைகளிலும் பரப்பி மிகப் பெரிதாக அது வளர்ந்து இருந்தது. ஆண்டுதோறும் அம்மரத்தில் ஏராளமான பழங்கள் பழுத்தன.
சாலை வழியாகச் செல்லும் வருவோர், போவோர் என பலரும் அதன் நிழலில் தங்கினார்கள். மாம்பழம் பழுக்கும் பருவத்தில் திருவிழாவைப் போல மக்கள் மாமர நிழலில் கூடினார்கள்.
மாம்பழங்களைப் பறித்து மகிழ்ச்சியாக உண்டார்கள். கூடைகளில் பழங்களை எடுத்துக் கொண்டு தங்கள் வீட்டிற்குச் சென்றார்கள்.
இதனால் அந்த மரத்தைப் பற்றி எல்லோரும் புகழ்ந்து பேசினார்கள். அந்த நாட்டு அரசன் அதைப் பற்றிக் கேள்விப்பட்டான்.
அமைச்சரிடம் “அந்த மாமரத்தைப் போல ஒருமரம் நம் அரண்மனைத் தோட்டத்தில் இல்லை என்கிறார்களே. அது உண்மையா?” என்று கேட்டான்.
“ஆமாம் அரசே! அது மட்டும் அல்ல. குடிமகன் ஒருவனிடம் உள்ளது அரசரிடமே இல்லை என்றும் மக்கள் பேசிக் கொள்கிறார்கள்” என்றார் அமைச்சர்.
தன் பெருமை குலைந்ததே என்று கோபம் கொண்டான் அரசன்.
வீரர்களை அழைத்த அவன் “நாளை காலையில் நீங்கள் அந்த மரத்தை வெட்டி வீழ்த்த வேண்டும்” என்று கட்டளை இட்டான்.
அன்றிரவு படுக்கையில் படுத்த அரசனுக்குத் தூக்கம் வரவில்லை. கெட்ட கெட்ட கனவுகள் வந்தன. அமைதியின்றி அரசன் புரண்டு புரண்டு படுத்தான்.
அவன் கனவில் தோன்றிய வணிகன் ஒருவன் “அரசே! நீங்கள் நீடுழி வாழ வேண்டும். நான் ஒரு வணிகனின் ஆவி. பல ஆண்டுகளுக்கு முன் இந்த ஊரில் வாழ்ந்து வந்தேன்.
பேராசை கொண்ட நான் பொருள்களில் கலப்படம் செய்தேன். குறைந்த அளவு எடையில் பொருள்களை விற்றேன். எத்தனை வழிகளில் ஏமாற்ற முடியுமோ அத்தனை வழிகளிலும் மக்களை ஏமாற்றினேன்.
நான் இறந்ததும் என் உயிரை நரகத்திற்கு இழுத்துச் சென்றார்கள். என் மீது இரக்கம் கொண்ட கடவுள், ‘உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். நீ திரும்பவும் உன் ஊருக்குச் சென்று நீ செய்த பாவங்களுக்கு ஈடாக நன்மை செய்’ என்றார்.
நான் அந்த மாமரத்தில் தங்கி உள்ளேன். என்னால் பொருள்களை இழந்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் என்னிடம் வந்து பழங்களைப் பெற்றுச் செல்கிறார்கள்.
இப்படியே தொடர்ந்து நடந்து வருகிறது. இன்னும் ஓராண்டில் என் பாவக் கணக்கு தீர்ந்து விடும். நீங்கள் அந்த மரத்தை வெட்டி என் ஆவியை அலைய விட்டு விடாதீர்கள். உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்” என்று கண் கலங்கச் சொல்லிவிட்டு மறைந்தான்.
விழித்த அரசன் ‘அந்த மரத்தை வெட்ட வேண்டாம்’ என்று வீரர்களுக்குக் கட்டளை இட்டான்.
அந்த மாமரத்தின் நிழலில் மக்கள் மகிழ்ச்சியுடன் இளைப்பாறினார்கள். அதன் பழங்களை உண்டு விட்டுச் சென்றார்கள்.
வணிகனின் ஆவி சொன்னபடியே அந்த மரம் ஓராண்டில் பட்டுப் போய் விட்டது.