புலம்பெயர்த் தமிழர்களின் இணையத் தமிழ்ப் பங்களிப்பு

‘உலகின் பல பகுதிகளில் வாழ்ந்து வரும், கணிப்பொறியில் வல்லமை பெற்ற தமிழர்கள் தமிழைக் கணிப்பொறி மற்றும் இணையப் பயன்பாட்டில் கொண்டு செல்ல முயன்றனர்.

அம்முயற்சியின் விளைவே இன்று இணையப் பயன்பாட்டில் தமிழ் தலைசிறந்து வளர்கிறது. தமிழில் இணையதளங்கள் உருவாகப் பிறிதொரு காரணமும் முக்கியமாகும்.

1983 க்குப் பிறகு இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு அரசியல் கலவரத்தால் தமிழர்கள் உலகம் முழுக்க புலம்பெயர வேண்டிய தேவை ஏற்பட்டது.

அது போன்று தமிழகத் தமிழர்கள் பணியின் பொருட்டு அயல் நாடுகளுக்குச் சென்றனர்.

இவ்வாறு சென்ற தமிழர்கள் தாய் நாட்டுடன் தொடர்பு கொள்ளவும், பிற நாடுகளில் வாழும் தமிழர்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும் இணையத்தைப் பயன்படுத்தினர்.

இதில் தங்களை ஒன்றிணைக்கத் தமிழ் வளர்ச்சியில் கவனம் செலுத்தினர்’ என்று இலங்கைத் தமிழர்களின் இணையப் பங்களிப்புக் குறித்துத் தமிழ் விகாஸ் பீடியா கூறுகின்றது. இது மிகச் சரியான கூற்றும் வரலாற்றுச் செய்தியும் ஆகும்.

இலங்கைத் தமிழர்கள் உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து சென்ற நாளிலிருந்து மொழியில் ஏற்பட்டு வரும் இலக்கிய முன்னேற்றம் மிகக் கூர்மையாகக் கவனிக்கப்பட வேண்டியதும் பதிவு செய்யப்பட வேண்டியதுமான விடயமாகும்.

இப்பின்னணியில் தான் தமிழ் இணையத்தில் வளர்ந்தது என்று திட்டவட்டமாகக் கூறலாம். வேறு காரணிகள் இருப்பினும் இக்காரணமே மிகுந்திருக்கும் எனலாம். அந்தளவிற்கு இலங்கைத் தமிழர்கள் இணையத்தின் மூலம் தமிழை மேம்படுத்தி உள்ளனர்.

தமிழ் எழுத்துக்களை உருவாக்கிய கட்டற்ற மென்பொருள் உருவாக்கத்தில் ஈடுபட்டும், வாக்கியப்பிழை திருத்திகளை உருவாக்கியும், தமிழ் எழுத்துரு மாற்ற மென்பொருள்களைத் தந்தும், ஆக்கப்பூர்வமான கணினித்தமிழ்க் கருத்தரங்குகளை நடத்தியும், அதில் பங்கு கொண்டு பல முன்னேற்றத் திட்டங்களை வகுத்தும், செயலாற்றியும் உழைத்த அறிஞர்களில் புலம் பெயர்ந்தோரின் பங்கு குறிப்பிடத்தக்கதாய் அமைந்திருந்தது.

உலகத்தில் எங்கு வாழ்ந்தாலும், தாய் நாட்டையும் தாய் மொழியையும், மறவாத தமிழர்கள் இணையத்தில் செய்த பெரும் புரட்சியை உலக அளவில் மற்ற மொழிகளுக்கு முன் தமிழைப் போட்டி போட்டுக் கொண்டு முன் நிறுத்தி இருக்கிறது.

அவ்வாறான இணையப் பங்களிப்பு குறித்தும், மின்னிதழ் மூலமாகத் தமிழ்ப் பங்களிப்பையும் காண்பது இக்கட்டுரையின் நோக்கமாகிறது.

அடிப்படைக் காரணம்

இலங்கைத் தமிழர்களின் தமிழ்ப் பணியானது, அவர்கள் பட்ட கொடுமைகளின் அடித்தளத்திலிருந்து எழுந்ததாகும். எனவே அந்தப் படைப்புகள் தனித்துவமான பின்புலத்தைக் கொண்டு இருந்தன. வெவ்வேறு மொழிப் படைப்புகளிலிருந்து வேறுபட்டும் புதுமைத்துவத்தோடும் இருந்தன.

அவற்றைத் தன் இன மக்களோடு பகிர்ந்து கொள்ள ஒவ்வொரு புலம்பெயர் படைப்பாளரும் அத்தருணத்தில் விரும்பினார். அதற்குப் பெருந்துணையாய் நின்றது அக்காலத்தில் இணையமே ஆகும்.

எனவே புலம்பெயர்ந்தோரின் கவனம் அதில் ஆழமாகப் பதிந்தன. அவ்வாறு கவனத்தோடு கற்றுக் கொண்ட இணைய அறிவியலில் தமிழைப் புகுத்திப் பெரு வெற்றி காணத் தலைப்பட்டனர்.

முயற்சி ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு முறையாக இருந்தன. கூட்டு முயற்சியோடு இது அத்தனையையும் ஒன்றிணைத்து அசாத்தியமான ஒன்றாக மாற்றினர்.

இதன் மூலம் அவர்கள் மனத்துயரங்களும் தாய்நாட்டின் போராட்டங்களும் பட்ட வேதனைகளும், எழுத்து எழுத்தாக இணையத்தில் படைப்புகளாகவும் செய்திகளாகவும் பதிவு செய்யப்பட்டன.

அந்த அடிப்படையில் புலம்பெயர்ந்த தமிழர்களின் இணையப் பங்களிப்பை இரண்டாகப் பிரிக்கலாம். அவையாவன

1. இணைய மின்னிதழ் தளங்கள்

  1. செய்தி இணையதளங்கள் என்பதாகும்.

இணைய மின்னிதழ் தளங்கள்

”இலக்கியம் தொடர்பான தகவல்களைத் தரும் இதழ்கள் இலக்கிய இதழ்கள் எனப்படும். உலகில் உள்ள எவரும் தமிழ் இலக்கியம் தொடர்பான தகவல்களைப் பெறத் தமிழில் இணைய இதழ்கள் பெரிதும் உதவி புரிகின்றன” என்கிறார். கி. கண்ணன்.

”கணினியில் தட்டச்சு செய்து, அச்செய்திகளுக்குத் தேவையான புகைப்படங்கள், காணொளி அல்லது அசைவூட்டுப் படங்களை இணைத்துப் இணைய இதழில் பதிவேற்றுவர்.

உடனே இது எந்த விநியோகிப்பாளரும் இன்றி நேரிடையாக கணினி அல்லது செல்பேசி வழியாக வாசகர்களைச் சென்றடைகிறது.

சில இணைய இதழ்கள் வானொலியைப் போன்று ஒலி வடிவிலும் செய்திச் சேவையை வழங்குகிறது, இத்தகைய இதழ்களே இணைய இதழ்கள் எனப்படுகின்றன” என்கிறது விகாஸ் பீடியா.

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மன், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, லண்டன், நார்வே ஆகிய நாடுகளில் வாழும் புலம்பெயர்த் தமிழர்கள், தமிழ் உணர்வுடன் பற்பல இணைய இதழ்களான மின்னிதழ்களைக் கொண்டு வருகின்றனர்.

இவ்விதழ்கள் இதழியல் துறையில் உலக அளவில் செய்யப்படும் புதுமைகளை எல்லாம் கவனத்தில் கொண்டு தமிழிலும் அதனைக் கொண்டு வந்து தமிழுக்கு மேன்மையைத் தருகின்றன. அவற்றில் ஒரு சில இணைய இதழ்களை உதாரணத்திற்கு அறியலாம்.

பதிவுகள்

எழுத்தாளர் வ. ந.கிரிதரன் குறிப்பிடத்தகுந்த கனேடிய ஈழத்து எழுத்தாளர். இவர் பல சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் மற்றும் நாவல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.

பதிவுகள் என்னும் இணைய இதழை 2000 ஆண்டிலிருந்து கொண்டு வருகிறார். ’அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்’ என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டு இந்த இணைய மின்னிதழ் வெளிவருகின்றது.

இவ்விதழில் வெளிவரும் படைப்புகள் நூல்களாகத் தொகுக்கப்பட்டு இணையக் காப்பகம், நூலகம் போன்ற எண்ணிம நூலகங்களில் வெளியிடப்படுகின்றன.

பல்கலைக்கழகத் தரத்தில் எழுதப்படும் ஆய்வுக் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், செய்திகள், மின்னூல்கள் எனப் பல இணைப்புகளில் இலக்கியம் இவ்விதழின் மூலம் வளர்கிறது.

வ.ந.கிரிதரனின் பல நூல்கள் மின்னூல்களாக வெளிவந்துள்ளன.

ஞானம்

தி.ஞானசேகரன் அவர்கள் இவ்விதழைத் தொடங்கினார். ஞானம் ஞானசேகரன் இணை ஆசிரியராகவும் ஞா.பாலச்சந்திரன் நிர்வாக ஆசிரியராகவும் இருக்கின்றனர். சிவா கௌதமன் ஓவியராக இருக்கின்றார்.

2000 முதல் தொடர்ந்து வெளிவரும் இதழில் பல நாடுகளில் உள்ள தமிழர்கள் மிகத் தரமான படைப்புகளை எழுதுகின்றனர்.

நவீனமும் மரபும் இதழ் கட்டமைப்பை உருவாக்குகின்றன. ஈழத்துப் போர்க்காலச் சிறப்பிதழாக ஞானத்தின் 150 வது இதழ் வெளியிடப்பட்டது.

ஈழத் தமிழ் இலக்கியங்களின் ஒட்டுமொத்த பதிவுகளையும் இவ்விதழ்க் கட்டுரைகள் திறனாய்வு செய்து பதிவு செய்திருக்கின்றன.

மின்னஞ்சல் மூலமாக மாதம் தோறும் இதழ், ஞானம் வாசகர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. ஓவியங்கள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நவீன இலக்கியமாக இவ்விதழில் திகழ்கின்றன.

இதழ் குறித்த விமர்சனங்களுக்காகத் தனித்தளம் ஒன்றையும் ஆசிரியர் நிர்வகிக்கின்றார். 250 இதழ்களுக்கு மேலாகத் தொடர்ந்து இந்த இதழ் வெளிவருகின்றது.

தாய் வீடு

பி.ஜெ.டிலிப் குமார் பதிப்பாளராகவும், ஆசிரியராகவும் திகழ்கின்றார்.

இலங்கை மற்றும் உலக அரசியல் குறித்த கட்டுரைகள் மற்றும் இலக்கியக் கட்டுரைகள் அதிகமாக வெளி வருகின்றன. வீடு கட்டுமானத் தொழில் சார்ந்த செய்திகளும் இடம்பெறுகின்றன.

ஆழமான அறிவான சமூகத்தை உருவாக்கத் துடிக்கும் இதழாக இந்த இதழ் காணப்படுகிறது.

தமிழக மற்றும் உலகத் தமிழ் எழுத்தாளர்கள் எழுதிக் கொண்டிருக்கும் சிறந்த மின்னிதழ் மற்றும் மாதாந்திர அச்சு இதழ் இது.

டிசம்பர் 2022 ஆம் ஆண்டு இதழ் தெளிவத்தையார் சிறப்பிதழாக நூற்று எண்பத்து ஆறு பக்கங்களுடன் வெளிவந்துள்ளது.

காற்று வெளி

முல்லை அமுதன் எழுத்தாளராக உலகம் முழுவதும் அறியப்பட்டவர். அவரின் மிகச் சிறப்பான மின்னிதழ் இது. ஆசிரியராக சோபா இருக்கிறார்.

தொடர் பயணமாகக் காற்று வெளி இலக்கியத்திற்கான ஒரு பெருவெளியைத் தோற்றுவித்திருக்கிறது. லண்டனில் இருந்து வெளி வருகிறது.

பல முன்னோடி இலக்கிய கருத்தாக்கள் தற்காலப் புதிய எழுத்தாளர்கள் அனைவரும் இதில் எழுதுகின்றனர். இலக்கிய மேம்பாட்டை மட்டும் கருத்தில் கொண்டு இயங்கும் இணைய இதழ் காற்றுவெளியாகும்.

இலக்கிய மேம்பாடு கொண்டுவர அயாரது உழைப்பவர்களாக முல்லை அமுதன், சோபா மற்றும் நெகிலன் போன்றோர் உள்ளனர். நவீனப் படைப்புகள் அதிகமாக இடம்பெறுகின்றன. அவை உலகத் தரத்தைப் பெறுகின்றன.

காற்று வெளியில் எழுதப்பட்ட கவிதை, சிறுகதை போன்றவற்றைத் தொகுத்து ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. ஓவியம், படைப்பு இரண்டும் ஒன்றிணைந்து புதுவித வாசிப்புத் தன்மையை வாசகனுக்கு இவ்விதழ் அளிக்கின்றது.

ஜீவ நதி

இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் மின்னிதழ் ஜீவநதி. இதுவரை 138 இதழ்களைக் கொண்டு வந்து சாதனை செய்திருக்கிறது.

காத்திரமான படைப்புகளை இவ்விதழ் முன்னெடுக்கின்றது. இதன் மையம் தமிழர்களின் ஒருமித்த ஒருமைப்பாட்டை நிகழ்த்துவது ஆகும்.

நடு

பிரான்சில் இருந்து வெளிவரும் கலை இலக்கிய இணைய இதழ். ’கலையில் உண்மை உண்டு. உண்மை எல்லாம் கலை அல்ல’ என்னும் தாரக மந்திரத்தைக் கொண்டு அற்புதமான தரமான இலக்கிய இதழாக நடு விளங்குகிறது.

மயூரனின் கடும் உழைப்பால் இவ்விதழ் தொடர்ந்து வெளிவருகிறது. ’இவர்களைக் கொண்டாடுவோம்’ எனும் பகுதியில் நிவேதா உதயராஜன், ரஞ்சக்குமார், அலெக்ஸ் பரந்தாமன், எஸ். நளீம், ஆசை ராசையா, யோ கர்ணன், மல்லிகை சிற்றிதழ் ஆசிரியர் ஜீவா நந்தினி, சேவியர், எஸ் எம் அனிபா போன்ற தமிழ் ஆளுமைகள் குறித்துப் பதிவு செய்து பெருமைப்படுத்தி உள்ளனர்.

மார்கழி 2021 வரை 49 இதழ்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு இதழும் வரலாற்றுப் பெட்டகமாக இருக்கின்றது.

புதினப் பலகை

இந்தத் தளம் தொடர் இணைய இதழ் போன்று அமையாவிடினும் தரமான கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் புதினப் பார்வை போன்றவற்றை வெளியிடுகின்றது.

2009 ஆம் ஆண்டு நவம்பரில் தொடங்கி இன்று வரை ஆழமான அரசியல் கட்டுரைகள் மற்றும் சமூக மேம்பாட்டுக் கட்டுரைகள் வெளியிடுகின்றது.

வடு

’சாதிய வடு அகற்றிடத் துணிந்த நெடும் பயணம் இது’ எனும் தாரக மந்திரத்துடன் இணைய இதழ் அரசியல், பண்பாடு, இலக்கியம் எனும் முப்பொருள் கலந்த படைப்புகளைத் தாங்கி வருகிறது.

பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளிவருகிறது. ’இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி‘ இத்தளத்தை நிர்வகிக்கிறது. இதுவரை 23 இதழ்கள் வெளிவந்துள்ளன.

விதன்யா விநோ நிர்வாக ஆசிரியராக உள்ளார். விஜி முதன்மை ஆசிரியராகவும், தேவதாசன், யோக இரட்சகன், அருந்ததி சுந்தரலிங்கம், அசுரா ஆகியோர் ஆசிரியர் குழுவில் இருந்தும் செயலாற்றுகின்றனர். சமூக மேம்பாட்டை முன் நிறுத்தும் இணையதளமாக மலர்கின்றது வடு.

சூத்திரம்

சாகரன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு இயங்கும் இணைய இதழ் இது.

கட்டுரைகள், கவிதைகள், செய்திகள் மற்றும் அறிவித்தல்கள் இதழில் உள்ளன. சர்வதேச அரசியல் குறித்த கட்டுரைகள் உலக அறிவை ஒவ்வொருவருக்கும் கொண்டு செல்லும் வீரிய தன்மையுடையனவாக இருக்கின்றன.

கவிதைகள் மூன்று பிரிவுகளைக் கொண்டதாக அதாவது, சமூக விழிப்பு, பொது விடயம் மற்றும் போராட்டம் என்பதாக உள்ளன.

குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் நடத்தும் பல இனிய இதழ்கள் மற்றும் இணையதளங்கள் அறிமுகம் இருக்கின்றன.

அவ்வகையில் சூத்திரம் இணைய இதழில் நடேசன் இணையம், பூந்தளிர், தூ, தேனி, தமிழ் நியூஸ் வெப், பத்மநாபா, மலையகம், அதிரடி, அதிரடி ஊடகம், இ ஈபிஆர் எல் எப், ரெலோ நியூஸ், விடிவெள்ளி, எங்கள் பூமி, சலசலப்பு மற்றும் இடதுசாரிகள் எனும் இணையதளங்கள் அல்லது வலைப்பூக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

நோயல் நடேசன்

எழுத்தாளர் நோயல் நடேசன் அவர்கள் பல்வேறு இதழ்களில் எழுதும் படைப்புகள் மற்றும் நூல் விமர்சனங்கள், இவர் குறித்துப் பிறர் எழுதும் விமர்சனங்கள் போன்றவற்றை இந்த இணையதளத்தில் தந்துள்ளார். ஒரு சேர இவரை இவர் படைப்புக்களை அறிந்து கொள்ள இந்த இணையதளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.

அ .முத்து லிங்கம்

அ.முத்துலிங்கம் அவர்களின் தளமிது. சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், புத்தக மதிப்புரைகள், நாடகம், திரைத்துறை விமர்சனங்கள் என அவர் எழுதும் அனைத்து படைப்புகளையும் ஒரே இடத்தில் ஒரே தளத்தில் காண முடிகின்றது.

இவரின் மொத்தத் தமிழ்ப் படைப்பையும் படிக்க விரும்புகிறவர்களுக்கு இத்தளம் பேருதவியாக இருக்கின்றது.

வேர்கள்

தமிழ் ஈழத் தாய் மண்ணில் விடியலுக்காய்த் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களின் விவரம்’ என்னும் தலைப்போடு இத்தளம் உள்ளது. வரலாற்றுச் செய்திகளின் பெட்டகமாக இளைய தலைமுறையினருக்கு இத்தளம் விளங்குகிறது. இதேபோன்று ’வீர வேங்கைகள்’ தளமும் இயங்குகின்றது

தமிழ் அரங்கம்

பி. இரயாகரன் சமர் எழுதிய கட்டுரைகள் உலக நடப்புகளைத் திறனாய்கின்றன.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி, புதிய ஜனநாயகம் மற்றும் புதிய கலாச்சாரம் ஆகிய இதழ்களின் படைப்புகளை இங்குப் படிக்க உதவும் வகையில் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. மார்க்சிய நூல்கள், ஆவணக் களஞ்சியம், ஒலி, ஒளி, சமூகவியலாளர்கள் மற்றும் நூல்கள் பகுதிகள் மிகவும் பயனுள்ள பகுதிகளாக அமைந்திருக்கின்றன.

சோபா சக்தி

உலகம் அறிந்த எழுத்தாளர்; நடிகர்; விமர்சகர், இவரின் தனிப்பட்ட எழுத்துக்களின் தளமாக இது உள்ளது.

இணைய இதழ் போன்று அல்லாமல் தனிப்பட்ட எழுத்தாளனின் இலக்கிய வெளிப்பாட்டை அறிந்து கொள்ள உதவும் தனித் தளமாக இது போன்றவற்றைக் கொள்ளலாம்.

படிப்பகம்

ஒரே இணையதளத்தில் பல தளங்களில் படிக்க வேண்டிய படைப்புகள் மற்றும் செய்திகளை ஒரே இடத்தில் படிக்கும் வசதியை இத்தளம் அமைத்துத் தருகிறது.

நூலகம்

ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 546 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எண்ணற்ற பத்திரிகைகள் நூல்கள் மின் நூல்களாகக் காணப்படுகின்றன இந்த இணையத்தின் சாதனை மிகப் பெரும் சாதனைதான்.

யாழ்

நாமார்க்கும் குடியல்லோம் எனும் தலைப்பில் உலகத் தமிழர்களின் படைப்புகள் அனைத்தையும் அவரவர் உள்ளீடு செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட மாபெரும் ஆவணக்களஞ்சியம் மற்றும் வரலாற்றுப் பெட்டகம்.

வணக்கம் லண்டன்

செய்திகள், லண்டன், உலகம், கட்டுரை, இலக்கியம், திரைத்துறை மகளிர் ஏனையவை மற்றும் நிகழ்வுகள் எனும் தலைப்புகளின் கீழ் பல்வேறு படைப்புகள் உள்ளன.

உண்மையில் உலகத் தமிழர்கள் அனைவரும் பங்கீடு செய்யும் திறன் கொண்ட அற்புத தலமாகத்தான் இது விளங்குகிறது

இவை போன்ற இன்னும் பல நூறு இணைய இதழ்கள் இலங்கைத் தமிழர்களால் நடத்தப்பட்டு நின்று போயிருக்கின்றன; பதிவுக்கு வராமலும் இருக்கின்றன. இதன் மூலமாகத் தமிழ் வளர்ச்சி தொடர்ந்து இயங்கிக் கொண்டே தான் இருக்கிறது.

கலாநிதி சு குணேஸ்வரன் அவர்கள் ’புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் இதழியல் செயல்பாடுகள்’ எனும் ஆழமான கட்டுரையில் பல நூறு அச்சு இதழ்கள் புலம்பெயர்ந்த தமிழர்களால் உலக அளவில் கொண்டுவரப்பட்டுள்ள செய்தியினை நாம் அறிகிறோம்.

எவ்வளவு பெரிய தமிழ்த் தொண்டினை தமிழர்கள் செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை இக்கட்டுரை மூலம் நாம் உணர்கின்றோம்.

சுந்தரலிங்கம், சண்முகநாதன், வாசுதேவன், கி லட்சுமணன் ஐயர், வேந்தனார் இளங்கோ, பாக்கியநாதன், எஸ். பொன்னுத்துரை, அருள், கலாநிதி கந்தையா, பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் போன்ற தமிழ்ப்பெரும் ஆளுமைகள் ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழ்ப் பணி செய்து வருகின்றனர்.

இதே போல் ஒவ்வொரு நாட்டிலும் தமிழ் ஆளுமைகள் இருக்கின்றனர். இவற்றையெல்லாம் இணையதளங்கள் தற்பொழுது பதிவு செய்து வைத்திருக்கின்றன.

வலைப் பூக்கள்

இணைய மின்னிதழ் போன்று இலக்கியத்தினை மேம்படுத்தும் வகையில் உள்ள ஒன்றுதான் வலைப்பூக்கள்.

இலவசமாக இணையதளத்தில் இடம் கிடைக்கின்றது என்கிற வசதியைக் கொண்டு வலைப்பூக்கள் பல நூறு எனும் பெருக்கத்தில் தமிழில் காணக் கிடைக்கின்றன. தமிழ் மனம் பரப்பி இலக்கிய மேம்பாட்டிற்கு அவைகள் உதவுகின்றன.

வலைப் பூக்கள் ( blogspot.com) என்னும் முகவரியிலும், (wordpress.com) எனும் முகவரியாலும் இரு தளங்களில் காணக் கிடைக்கின்றன.

ஆக்காட்டி, அட்சய பாத்திரம், உள்ளக்கமலம் ஆகிய வலைப்பூக்களில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழரான யசோதா பத்மநாபன் அவர்களின் படைப்புகள் நிறைந்து இருக்கின்றன. தரமான படைப்புக்களை அவர் தந்திருக்கின்றார்.

தீபச்செல்வன் மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளராக அறியப்பட்டவர். அவரின் கவிதைகள், நூல் திறனாய்வு, நாவல்கள், சார்ந்த கட்டுரைகள், பிறர் எழுதிய இவர் எழுதியவை என்பவற்றைப் பல இணையதளங்களில் காணலாம். அவற்றை இவரது தனிப்பட்ட வலைப்பூக்களில், ஒன்று சேர நம்மால் அறிய முடிகிறது.

கீறல் பட்ட முகங்கள், தீபம், வெளிக்களம் ஒலி, ஒளிதீபம் பல்லியறை, நேர்முகம், கீறிய தீபம், எனும் தனித்தனி வலைப்பூக்களில் தீபச்செல்வனின் தமிழ்ப் படைப்புகளைக் காணலாம்.

இதே போல் எழுத்தாளர் ஹேமா (புலம்பெயர் தமிழர்) அவர்களின் வலைப்பூக்களாகச் சந்தியில் நாம், உப்புமடச் சந்தி, ஈழத்து முற்றம் மற்றும் வானம் எரித்த பின் எனும் வலைப்பூக்களைக் காணலாம்.

ஈழத்து முற்றம் எனும் வலைப்பூவில் புலம்பெயர் தமிழர்கள் பலரின் படைப்புக்களின் இணைப்புகள் தரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தகுந்தது.

செய்திக்கான இணையதளங்கள்

ஈழத் தமிழர்களின் செய்திகள் மற்றும் அந்தந்த நாட்டின் செய்திகளைப் பரிமாற்றிக் கொள்ள அதிகமான தமிழ் இணையதளங்களைப் புலம்பெயர் தமிழர்கள் நடத்துகின்றனர்.

அரசியல், சமூக மாற்றம் மற்றும் தொழில் சார் முன்னேற்றம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு அவை இயங்குகின்றன.

தினக்குரல், செய்தி, பனிப்புலம், சுபிட்சம், ஆலியூர், தமிழ்முரசுஆஸ்திரேலியா, இனிஒரு, லங்காசிரி, தமிழ்வின், அள்வேட்டி போன்ற துரிதமாகச் செய்திகளை வெளியிடும் பெரும் நிறுவனங்களாக இச்செய்தி தளங்கள் இயங்குகின்றன.

ஈழச் செய்தி, தமிழ்ச் செய்தி மற்றும் பத்மநாபா போன்ற வலைப்பூக்கள் உலகம் முழுவதும் இருக்கும் இல்ல தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளைப் பரப்புவதற்காக உருவாக்கப்பட்டுள்ளன.

சில தளங்களில் தமிழ் இலக்கியங்கள் இடம் பெறுகின்றன. மரண அறிவித்தல் பல தளங்களில் முக்கியமானதாக இருக்கின்றது. தமிழர்களின் அறிவுக் கூர்மையை வெளிப்படுத்தும் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

இணையத்தில் மின்னிதழ்கள் மூலமாக உலக மொழிகளுக்குப் போட்டியாக தமிழ் இலக்கியப் படைப்புகளை எழுதிய பங்கு புலம்பெயர் தமிழர்களுக்கு உரித்தானது. புதுமை மற்றும் மரபு சார்ந்த படைப்புகளாக அவைகள் உள்ளன. எண்ணற்ற அமைப்புகள் மூலமாகவும் அவர்கள் தமிழ்ப் பணி செய்து வருகின்றனர்.

கட்டுரை எனும் வகையில் அரசியல் திறனாய்வுகளைச் செய்வதற்கு இணையச் செய்தித்தளங்களை நடத்துகின்றனர்.

தமிழ் மொழிக்கு ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து உலகம் முழுவதும் சென்று வாழும் தமிழர்களின் இணையப் பங்களிப்பு தொடர்ந்து கால் நூற்றாண்டுக்கும் மேலாகச் செம்மையாக அமைந்திருக்கின்றது.

மொத்தத்தில் அவர்களின் பங்களிப்பினால் தமிழ் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளதாக உறுதிபடக் கூறலாம்.

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com

3 Replies to “புலம்பெயர்த் தமிழர்களின் இணையத் தமிழ்ப் பங்களிப்பு”

  1. தமிழர்கள் தொழில் ரீதியாக புலம் பெயர்ந்தாலும் தங்கள் மொழித் திறனை இணையம் மூலம் வளர்த்து, தமிழ் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளனர் என்பதைப் பல உதாரணங்கள் மூலம் அருமையாக கூறியுள்ளீர்கள்.

  2. நண்பர் பாரதிசந்திரன் அவர்களின் புலம்பெயர் தமிழர்களின் இணையப் பங்களிப்பு குறித்த கட்டுரை சிறப்பு.

    புலம்பெயர் தமிழர்களின் இணைய வளர்ச்சிக்கான காரணிகளைக் கண்டறிந்து, அவர்களின் இணைய பங்களிப்புகளை எளிய சொற்களில் ஆழமாக ஆய்வு செய்துள்ளீர்கள். பாராட்டுகள்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.