பூஜ்ஜியம் (வசன கவிதை)

இரு சக்கர வாகனம் வந்தது
இரு கால்களின் சக்தியை இழந்தோம்!

மிக்ஸி கிரைண்டர் வாஷிங் மெஷின் வந்தது
இரு கைகளின் வலுவை இழந்தோம்!

கூகுள் வந்தது
குவியல் குவியலாக தகவல் கடலில்
நம்மை இழந்தோம்!

வாட்ஸாப் வந்தது
வாட் ஈஸ் திஸ் என்று
கேட்டு அறியும் திறனை இழந்தோம்!

பேஸ்புக் வந்தது
மக்களின் முகம் பார்த்துப்
பேசுவதை இழந்தோம்!

கைபேசி வந்தது
உள்ளங்கையில் உலகையே பார்த்துப் பேசி
உண்மை உலகை இழந்தோம்!

டி.வி. வந்தது
குடும்பத்தின் குதூகலமான
திரை அரங்கை இழந்தோம்!

கால்குலேட்டர் வந்தது
காலையும் முக்காலையும் கூட்டும்
பொறுமை இழந்தோம்!

கம்ப்யூட்டர் வந்தது
கண் பார்வையை சற்றே இழந்தோம்!

இணைய தளம் வந்தது
இணையில்லா மக்கள் தொடர்பை இழந்தோம்!

வீடியோ பேச்சு வந்தது
வீட்டிற்கு சொல்லாமல் வந்து
இன்ப அதிர்ச்சி அளித்த
விருந்தாளியை இழந்தோம்!

ஈமெயில் வந்தது
தபால் கார்டில் தாத்தாவின்
எழுத்துக்களை இழந்தோம்!

பாஸ்ட் புட் வந்தது
பாரம்பரிய உணவின் மகிமை இழந்தோம்!

ஸ்விக்கி சோமாட்டோ வந்தது
சமையல் அறையில் பசிவேளையில்
ஏதோ கொதிக்கும் வாசனை இழந்தோம்!

ஒன்றைப் பெற ஒன்றை இழந்தோம்
நிகர லாபம் பூஜ்ஜியம்!

பூஜ்ஜியத்தில் நின்று கொண்டு
ராஜ்ஜியத்தை ஆளும்
இறைவன் பதில் சொல்லட்டும்!

ஜெ.ஜெயகுமார்
சென்னை
கைபேசி: 98842 51887

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.