காலை ஒன்பது மணிக்கு சுதர்சனம் கடையைத் திறக்கும் சமயம் மாணிக்கவேலு டாக்டர் சீட்டு ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார்.
சுதர்சனத்தின் பால்ய சினேகிதர். அந்த ஊருக்கு மாற்றலாகி வந்து ஓராண்டுக்குள் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி.
“என்ன சுதர்சனம், உன் பையன் பூபதி பி.ஏ., முடிச்சிட்டு வீட்டில் சும்மா தானே இருக்கிறான். கூடமாட ஒத்தாசைக்கு வச்சுக்கப் படாதா?”
“நீ ஒருத்தன் தான் பாக்கி சொல்லிட்டே, என் தலைவிதி. வேறு என்னத்தைச் சொல்ல? ஒரே மகனாச்சேன்னு செல்லம் கொடுத்து வளர்த்துக் குட்டிச்சுவராக்கிட்டேன். அவனைத் திருத்த யாராலும் முடியலே”
“என்னப்பா, ரொம்ப அலுத்துக்கிறியே? என்ன சமாச்சாரம்?”
“இந்த மருத்துக் கடையைக் கூடமாட என்னோட இருந்து நடத்தத் துப்பில்லாத, கொஞ்சங்கூட பொறுப்பில்லாத பயலா இருக்கான் மாணிக்கவேலு.
காலையிலே ஒன்பது மணி வரைக்கும் தூங்குறான். வீட்டு வேலையும் செய்யாமல், கடையையும் கவனிக்காமல் என் கழுத்தை அறுத்துக்கிட்டிருக்கான்.
சாப்பிட வேண்டியது, தூங்க வேண்டியது, வெளியிலே சுத்த வேண்டியது, காலையிலே பூத்துக்குப் போய் பால்கூட வாங்கிட்டு வரமாட்டேன். சோம்பேறிப்பயல்!”
சுதர்சனம் ரொம்பவும் அலுத்துக் கொண்டார். “நான் இந்த ஊருக்கு வந்தப்போ உங்க வீட்டு மாடிப் போர்ஷனில் குடியிருந்தவங்க போன வாரம் காலிபண்ணிட்டுப் போயிட்டதாச் சொன்னியே. வேறு யாராவது குடி வந்துட்டாங்களா?”
“இல்லைப்பா… யாராவது இருந்தா சொல்லேன்.”
“கவலையை விடு சுதர்சனம்! ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். உனக்கு வாடகையும் வரும். உன் மகனும் திருந்துவான்.”
“என்ன மாணிக்கவேலு, என்ன சொல்ற நீ?”
சுதர்சனத்தை அருகில் அழைத்து அவர் காதில் கிசுகிசுத்தார் மாணிக்கவேலு.
சுதர்சனத்தின் முகம் மலர்ந்தது.
மாணிக்கவேலுவின் கைகளைப் பிடித்தபடி நா தழுதழுக்க, “அப்படியே செய் மாணிக்கவேலு. என் ஆயுள் உள்ள வரைக்கும் உன்னை மறக்கவே மாட்டேன்.” என்றார் சுதர்சனம்.
அடுத்த இரு நாட்களுக்குள், ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்துக் கொண்டு அடுத்த தெருவில் இருந்த மாணிக்கவேலு சுதர்சனத்தின் மாடிப்போர்ஷனுக்குக் குடிவந்தார்.
பார்மஸிஸ்ட் கோர்ஸ் முடித்திருந்த தன் அழகிய மகள் இந்திராவை சுதர்சனத்தின் மருந்துக் கடையில் வேலைக்கும் சேர்த்து விட்டார்.
இப்பொழுதெல்லாம் சுதர்சனம், மகனைப் பற்றி அலுத்துக் கொள்வதே இல்லை.
அதிகாலையிலேயே எழுந்து பூத்திற்குச் சென்று பால் வாங்குவது முதல் காலையில் மிகச் சரியாக ஒன்பது மணிக்குக் கடையைத் திறந்து மிக அக்கறையாக, சுறுசுறுப்பாக வியாபாரத்தைக் கவனித்துக் கொள்வதே வரை அனைத்துமே அவர் மகன் பூபதிதான்!
பார்மஸிஸ்ட் இந்திராவை ‘இந்திரா பூபதி’யாக மாற்ற பிரம்மப் பிரயத்தான முயற்சிகளில் இறங்கிக் கொண்டிருக்கிறான்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!