பொரிகடலைச் சட்னி எளிய முறையில் செய்யக்கூடிய சுவையான சட்னி ஆகும். இதனை இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி ஆகியவற்றிற்கு தொட்டுக் கொள்ளலாம்.
தேங்காய் சட்னி செய்வதற்கு தேங்காயை அதிகமாகவும், பொரிகடலையை குறைவாகவும் சேர்த்து தயார் செய்வோம்.
இதில் பொரிகடலையை அதிகமாகவும், தேங்காயை மிகக்குறைவாகவும் சேர்த்து தயார் செய்யப்படுகிறது.
இச்சட்னி தயார் செய்யும்போது நன்கு விழுதாக்கிப் பயன்படுத்தும் போது சுவை அதிகரிக்கும்.
இனி சுவையான பொரிகடலைச் சட்னி தயார் செய்யும் முறை
பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பொரிகடலை – 100 கிராம்
சின்ன வெங்காயம் – 10 எண்ணம்
வெள்ளைப் பூண்டு – 3 எண்ணம் (பெரியது)
மிளகாய் வற்றல் – 6 எண்ணம்
புளி – கொட்டைப்பாக்கு அளவு
தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் (1 இன்ச் கனஅளவு உடையது)
உப்பு – தேவையான அளவு
நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்
தாளிக்க
நல்ல எண்ணெய் – 1 ஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கீற்று
பெருங்காயப் பொடி – 2 சிட்டிகை
மிளகாய் வற்றல் – 1 எண்ணம்
பொரிகடலைச் சட்னி செய்முறை
சின்ன வெங்காயத்தை தோலுரித்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வெள்ளைப்பூண்டினை தோலுரித்து நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
மிளகாய் வற்றலை காம்பு நீக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் வெள்ளைப்பூண்டினைச் சேர்த்து ஒருநிமிடம் வதக்கவும்.
அதனுடன் காம்பு நீக்கிய மிளகாய் வற்றல், புளி சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
பின்னர் அதனுடன் நறுக்கிய தேங்காய் சேர்த்து மூன்று நிமிடங்கள் வதக்கவும்.
அதனுடன் பொரிகடலையைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். தற்போது சின்ன வெங்காயம் கண்ணாடிப் பதம் வந்திருக்கும்.
கலவையை இறக்கி ஆற வைத்து அதனுடன் தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் உலர்ந்தவாறே அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் அதனுடன் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதினைச் சேர்த்து அதனுடன் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு ஒருசேரக் கலந்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் சேர்த்து சூடாகியதும் அதனுடன் கடுகு, உளுந்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயப் பொடி சேர்த்து தாளித்துக் கொட்டவும்.
சுவையான பொரிகடலைச் சட்னி தயார்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் மிளகாய் வற்றலுக்குப் பதில் பச்சை மிளகாய் சேர்த்து சட்னி தயார் செய்யலாம்.
வழக்கமாக சட்னி செய்யும் போது சேர்க்கும் காரத்தைவிட சற்று அதிகமாக காரம் சேர்த்தால் சட்னி சுவையாக இருக்கும்.