பொரிகடலை வடை செய்வது எப்படி?

பொரிகடலை வடை அசத்தலான சுவையில் எல்லோருக்கும் பிடிக்கும் ஒன்று. வழக்கமாக கடலை பருப்பு, பட்டாணிப் பருப்பு, உளுந்தம் பருப்பு என பருப்பு வகைகளில் தான் வடைகள் செய்யப்படுகின்றன.

பருப்பு இல்லாமல் பொரிகடலையினைக் கொண்டு செய்யப்படும் இதனைச் செய்ய பொரிகடலையை அப்படியே பயன்படுத்தலாம்.

பருப்பு வகைகளைப் போல் இதனைத் தயார் செய்ய பொரிகடலையை ஊற வைக்கத் தேவையில்லை.எனவே சட்டென வடையை விரும்புபவர்கள் இதனை தயார் செய்து ருசிக்கலாம்.

மாலை நேரங்களில், பள்ளிவிட்டு வரும் குழந்தைகளுக்கு இதனைச் செய்து கொடுத்து அசத்தலாம்.

இனி சுவையான பொரிகடலை வடை தயார் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பொரிகடலை – 150 கிராம்

அரிசி மாவு – 4 ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 10 எண்ணம்

கறிவேப்பிலை – 4 கீற்று

கொத்தமல்லி இலை – 1 கொத்து

பச்சை மிளகாய் – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)

வெள்ளைப்பூண்டு – 2 பற்கள் (பெரியது)

பெருஞ்சீரகம் – 2 டீஸ்பூன்

மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கடலை எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை

வெறும் வாணலியில் பொரிகடலையைச் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.

பின் சூடு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து பொடியாக்கிக் கொள்ளவும்.

கொத்தமல்லி இலையை அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக நறுக்கவும். வெள்ளைப்பூண்டினை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். பச்சை மிளகாயை காம்பு நீக்கி அலசிக் கொள்ளவும்.

வெள்ளைப்பூண்டு, பச்சை மிளகாய், பெருஞ்சீரகம் சேர்த்து நன்கு நசுக்கிக் கொள்ளவும்.

பொரிகடலை மாவுடன் நசுக்கிய வெள்ளைப்பூண்டு, பச்சை மிளகாய், சோம்பு விழுது, அரிசி மாவு, சின்ன வெங்காயம், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, உப்பு, மஞ்சள் பொடி சேர்க்கவும்.

அரிசி மாவு, நசுக்கிய விழுது சேர்த்ததும்
சின்ன வெங்காயம் சேர்த்ததும்
கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்ததும்
மஞ்சள், உப்பு சேர்த்ததும்

எல்லாவற்றையும் ஒருசேர நன்கு கலந்து கொள்ளவும்.

ஒருசேரக் கலந்ததும்

பின்னர் அதனுடன் தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து கெட்டியாக ஒரு சேரத் திரட்டிக் கொள்ளவும்.

திரட்டியதும்

அதனை சிறுசிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும். சிறுஉருண்டைகளை உள்ளங்கையில் வைத்து அழுத்தி வட்டமாக விரிக்கவும்.

சிறு உருண்டைகளாக்கியதும்

வடையின் ஓரங்களை உள்ளங்கையில் வைத்து தட்டி ஓரங்களில் விரிசல் ஏற்படாதவாறு சரி செய்யவும்.

வடைகளாகத் தட்டியதும்

வாணலியை அடுப்பில் வைத்து கடலை எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் தட்டிய மாவினைச் சேர்க்கவும்.

எண்ணெயில் சேர்க்கும்போது

அடுப்பினை மிதமான தீயில் வைத்து வடைகளை பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

சுவையான பொரிகடலை வடை தயார்.

தேங்காய் சட்னி, சாம்பாருடன் இதனைச் சுவைக்கலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.