போலிச் சம்பிரதாயங்கள் – சிறுகதை

பட்டுப்புடவை சரசரக்க, கால்களில் கொலுசும், கைகளில் வளையல்களும் சிணுங்க, நெற்றியில் குங்குமம் சுடரிட்டு நிற்க, கையில் குங்குமச் சிமிழுடன் அப்போதுதான் பறித்து வந்த மலரென ‘பளிச்’சென்று, ஒவ்வொரு வீடாகச் சென்று, “எங்க வீட்ல கொலு வச்சிருக்கோம். அவசியம் வந்து வெற்றிலை பாக்கு வாங்கிட்டுப் போங்கோ மாமி” எனப் புன்னகை ததும்ப அழைத்துக் கொண்டு வந்த விஜி எங்கள் வீட்டை நோக்கி வருவதைக் கவனித்ததும்,

“ஏய் சாந்தி, விஜி வர்றா பாரு” என உள்ளே குரல் கொடுத்தேன்.

நான் குரல் கொடுத்ததும் என் தங்கை சாந்தி கிடுகிடுவென வெற்றிலை, பாக்கு, பழம், பூ, குங்குமச் சிமிழ், மஞ்சள், ஒரு ரூபாய் நாணயம் ஆகியவற்றை ஒரு தட்டில் எடுத்து வைத்து, கூடவே பட்டாணி சுண்டல் பொட்டலம் ஒன்றையும் கொஞ்சம் தட்டில் தயாராக எடுத்து வைத்தாள்.

விஜியை வரவேற்க என்னுடன் வாசலில் வந்து நின்று கொண்டாள்.

“வா விஜி!” என்று அழைத்துச் சென்றோம்.

தட்டில் வைத்திருந்த தாம்பூலத்தை அவளிடம், நீட்ட புன்னகையுடன் பெற்றுக் கொண்டாள்.

வீதிக்கு வந்து வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தேன்.

பெண்கள் ஒவ்வொருவர் வீட்டுக்குச் செல்வதும், கைகளில் அங்கங்கே கொடுக்கப்பட்ட மங்களகரமான பொருட்களை ஏந்தி வருவதும், ஒருவருக்கொருவர் சிரித்துப் பேசி மகிழுவதும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

‘ஆண்டுக்கொரு முறை வரும் நவராத்திரியில்தான் எத்தனை இனிமை?’ என வியந்தேன்.

‘தங்கள் அந்நியோந்நியம், நட்பு, சகோரத்துவம் எவ்வளவு புனிதமானது என்பதையும், நாம் அனைவரும் சமம்’ என்பதையும் எடுத்துக்காட்ட ஆண்டுக்கொரு முறை வரும் பெண்களுக்கான, பெண்களால் கொண்டாடப்பட்டு வரும் இப்பண்டிகையின் போது, பெண்கள் தெய்வமாகக் காட்சியளிக்கிறார்கள்.

வீதியின் நவராத்திரிக் கலகலப்பில் மெய் மறந்து நின்று கொண்டிருந்த என்னை சாந்தியின் குரல் விழிப்படையச் செய்தது.

“அக்கா, வா… நாமும் போய் வெற்றிலை, பாக்கு வாங்கி வந்து விடுவோம்.”

விஜி அழைத்தது ஞாபகம் வரவே, முதலில் அவள் வீட்டுக்குச் சென்றோம்.

வாயெல்லாம் பல்லாக விஜி உள்ளிருந்து வந்து வரவேற்று எங்களை அழைத்துச் சென்றாள்.

பாட்டுப் பாடச் சொன்னாள்.

பாடி முடித்ததும், கட்டியிருந்த புடவை பற்றி விசாரணை, தங்கை சாந்தியிடம் டெயிலரிங் சம்பந்தப்பட்ட சந்தேகங்கள் போன்றவை எல்லாம் முடிந்தன.

குங்குமம் இட்;டுக் கொள்ளச் சொன்னாள். வெற்றிலை, சீவல், பழம், பூ, ரவிக்கைத்துணி, மஞ்சள், குங்குமச் சிமிழ் வகையாறாக்களை தாம்பாளத்தில் வைத்து நீட்டினாள்.

உள்ளம் மகிழ, பூரண திருப்தியுடன் எடுத்துக் கொள்ளும் சமயம் உள்ளே சமையற்கட்டிலிருந்து விஜியினுடைய தாயின் மெல்லிய குரல் தெளிவாக என் காதில் வந்து மோதியது.

“தொடாதேடீ; பொட்டலங்களைப் பிரிக்காம அப்படியே எடுத்துண்டு போய் கழனீர்த் தொட்டியில கொண்டு போடு. ஒவ்வோர் வீட்லேயும் எவ, எந்த நிலைமையில பண்ணின சுண்டலோ, கண்டதையெல்லாம் தின்னு தொலைக்காதே!”

எனக்கு பகீரென்றது! விஜியின் தங்கை ஒவ்வோர் வீட்டிலும் வாங்கிக் கொண்டு வந்த சுண்டல் பொட்டலங்களை ஒரு முறத்தில் வைத்து மாட்டுத் தொழுவம் பக்கம் கொண்டு சென்றாள்.

நான் கொடுத்த பட்டாணி சுண்டல் பொட்டலமும் அதில் கொலுவீற்றிருந்தது.

நவராத்திரியின் அருமை பெருமைகளையும் மகத்துவத்தையும் சற்று முன்பு எண்ணி மகிழ்ந்த என் இதயம் நொறுங்கிப் போனது.

கனத்த இதயத்துடன் விஜி தந்த பொருட்களை கைகளில் எடுத்துக் கொண்டேன்.

காராமணிச் சுண்டல் பொட்டலம் ஒன்றும் அவற்றில் இடம் பெற்றிருந்தது.

“வாரேன் விஜி…” எனச் சொல்லிக் கொண்டு கிளம்ப முற்பட்டபோது-

“வா புவனா! அட… சாந்தியா! வழி தெரிஞ்சுதா? ரெண்டு பேரும் குங்குமம் வாங்கிக் கொண்டேளா?

புவனா உங்காத்து சுண்டல் நன்றாக இருந்தது. எப்படி செஞ்சேன்னு ஒருநாள் எனக்குக் சொல்லிக் கொடேன்…” என்றவாறே சமையற்கட்டிலிருந்து வெளிப்பட்டாள் விஜியின் தாய்.

எந்த பதிலும் சொல்லப் பிடிக்காத நான், விஜி தந்த காராமணிச் சுண்டல் பொட்டலத்தை எடுத்து அவள் தாயின் கைகளில் திணித்தவாறே,

“மாமி, எங்காத்து மாடு பருத்திக் கொட்டையும் புண்ணாக்கும்தான் தின்னும். அதனால இந்தச் சுண்டலையும் உங்காத்து மாட்டுக்குக் கழனீர்த் தொட்டியில் கொண்டு போய் போடுங்கோ…” என அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டு தங்கை சாந்தியுடன் வேகமாக வெளியேறினேன்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.