மகாகவியின் ஆன்மீகத் தேடல்

மகாகவி பாரதி சுயத்தாலும் கற்றலாலும் பல துறைகளில் ஆழங்கால் பட்டுத் தெளிவடைந்திருந்தார்.

தீர்வுகளின் முடிவுகளை அவர் முன்பே கண்டிருந்தார். கற்றது கொண்டு, கல்லாத எல்லைகளை உய்த்தறிந்து அதன் பால் தீர்மானமாய்க் கட்டுமானங்களை எழுப்பி அழகுற வடிவமைத்திருக்கிறார் அனைத்திலும்.

உலக இலக்கிய நியதிகளையும் அதன் ஆழத்தையும் தேடிப் பிடித்து அதனைப் போல் தாம் சார்ந்த மொழிக்குள் கொண்டு வர அயராது உழைத்திருக்கிறார்.

அவருக்கான படைப்புகளின் எல்லைகள் விரிந்த தளத்தை உடையதாய் விரிந்து கொண்டே இருந்திருக்கின்றன.

தமிழ்ப்பற்று, தேசப்பற்று, சமுதாயப் பற்று, பெண் முன்னேற்றம், ஆன்மீகத் தேடல் என வெகுமதி அற்ற பெரும் எல்லைகளுக்குள் முதலானவராகச் சிலவற்றிலும், சாதனையாளராகச் சிலவற்றிலும் இருந்து சிறப்புச் செய்திருக்கிறார்.

இவரின் படைப்புகளில் ஆன்மீகத் தேடல் எத்தகையது என்பதைப் பதிவு செய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

இக்கட்டுரையில் உலகம் என்னும் பொருள்களாலான ஒன்றைக் கடவுளுக்கு மாறாக அல்லது கடவுளாகவே சித்தரிக்கும் கருத்துக்களை மட்டும் சிறப்பாக இக்கட்டுரை ஆராய்கிறது.

ஆன்மீகம் என்பது, மானுட சமூகத்தின் உயர்வான அறிதலின் அறிவுப் பெட்டகம். உலக உயிர்களின் திறனிலிருந்து தனித்து மானுடம் பெரும் அதிசயத்தை நிகழ்த்தியது என்பதின் வெளிச்சம்.

இது தேடலின் பாதையையும், நிதர்சன உண்மையையும் நெடுகிலும் எண்ணவெளியில் தீர்க்கமான வடிவத்தையும் மாயப்பிணைப்பையும் ஏற்படுத்திக் கொண்டே செல்கிறது.

பழமையின் சுவடுகளைத் தாங்கிய புதுமை நோக்கில் தன்னைத் தகவமைத்துக் கொண்டே காலம் காலமாய் வியாபித்து நிற்கிறது.

அத்தகு தன்மை வாய்ந்த ஆன்மீகத் தேடல் பாரதியின் மூலமும் நிகழ்ந்திருக்கிறது.

அவரின் அறிவு எல்லைக்குள் ஆன்மீகம் குறித்த விசாரணையும், அதற்கான பதிலும் நிறையவே கிடைத்திருக்கின்றன.

ஆன்மீகம் மனிதனை பண்படுத்தும் மாபெரும் ஆயுதம். வாழ்வியலின் சூட்சுமங்களை எல்லாம் விளங்கி, இன்புற்று வாழ்ந்து மடிவதே வாழ்க்கை.

அதனை ரவீந்திரநாத் தாகூர் கூறும்பொழுது “உறவுகளையும் அன்பையும் நிலை நிறுத்துவது தான் மனிதனுடைய பணி. நாம் சண்டை போட்டுத் திரியும் மிருகங்கள் அல்லவே, நாம் மனிதர்கள். மனம் உடைய மனிதர்கள். மனம் தானே நம்மை, நம் வாழ்க்கையை வழி நடத்திச் செல்கிறது. நமக்குள் இருக்கும் தான் என்ற அகம் தானே நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கவும் செய்கிறது. அந்த அகம் என்பது தான் நம்மைத் தனிமைப்படுத்தியும் வைத்து விடுகிறது. துன்பத்திற்குள் ஆளாக்குவதும் அதுதானே? “ 1 என்கிறார்.

மனம் தான் வாழ்க்கையை நடத்திச் செல்கிறது. மனிதனுக்குள் இறைவன் இருக்கின்றான்.

உலக உயிர்களுக்குள்ளும் இறைவன் இருக்கின்றான் என்பதாக நாம் உணர்ந்து வாழ வேண்டும்.

அதுவே, பூரணத்துவமான வாழ்க்கை. அதையே அத்வைதம் விளக்கிச் செல்லுகிறது. ஆதிசங்கரரின், ஞானத்தால் சென்றடைய வேண்டிய எல்லை, அத்வைதம் எனும் வழியால் தீர்மானிக்கப்பட்டது.

அதையே தம் பாடல்களின் வழிப் பாரதியும் விளக்கினார். தாமும் அதன்படி வாழ்ந்தும் காட்டினார்.

பாரதியாரின் ஆன்மீகம் சார்ந்த சிந்தனைகளில், பல நிலைகளைக் கடந்து கடைசியாக அத்வைதத் தத்துவங்களை முழு மனதாய் ஏற்றுக் கொண்டார்.

அதுவே உண்மையான ஆன்மீகப் பாதை என்பதையும் மக்களுக்கு உணர்த்தினார்.

நீர் ஒரே தன்மையன. அது இடத்தின் பால் வேறு வேறாக அறியப்படுதலைப் போல, ஆன்மா ஒன்றே, அது பரமாத்மா.

அதன் வடிவங்கள் வேறு வேறு. இதனைத் தம் பாடல்களில் பல இடங்களில் பாரதியார் விவரித்துக் கூறியுள்ளார்.

”வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானில் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்.

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்;
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற்சோதி நான்.” (2)

காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம். (3)

அத்வைதம் என்பதை இரண்டற்றது எனப் பொருள் கொண்டு இறையும் உயிர்களும் ஒன்றே என்பதனை ஏற்றமையால், பாரதி இயற்றிய பாடல்கள் வேதாந்த பாடல்களாக இனம் கண்டு கொள்ளப்பட்டன.

காசியில் அவர் கற்ற கல்வியும், புதுவையில் குட்டைச்சாமியாரின் நெருக்கமான நட்பும் முழுமையுமான அத்வைதியாகப் பாரதியை மாற்றியது.

“பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமே ஒன்றுதான். அதுதான் பல்வேறு உருவங்களாகத் தோன்றுகின்றது.

அந்த ஒன்றின் ஒரு சிறு பகுதி, காலம், இடம், காரணகாரியம் என்ற இந்த வலைக்குள் புகுந்தவுடன் பல உருவங்களைப் பெறுகிறது.

இந்த வலையை எடுத்துவிட்டால் மிஞ்சுவது ஒன்றுதான். எனவே, அத்வைதத் தத்துவப்படி ’பிரம்மம்’ என்று சொல்லப்படும் ஆன்மாவில் ’இந்தப் பிரபஞ்சம் ஒன்றே ஒன்றுதான்” எனும் விவேகானந்தரின் கருத்தும் பாரதியின் பாடல் வழி தெரிய பொருளும், ஒருமித்து இருப்பதைக் காணலாம்.

இதே கருத்தை,

”காக்கைச் சிறகினிலே நந்தாலா -நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்தலாலா- நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா- நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத்
தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா” (4)

உலகனைத்துமாக வியாபித்து நிற்கும் பிரமம் நானே என்ற உபநிடதக் கருத்து எவ்வளவு எளிய சொற்களில் வெளிப்படுகிறது.

”உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன் றில்லை;
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;
வெயிலளிக்கும் இரவி,மதி,விண்மீன்,மேகம்
மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்! “ (5)

என்னும் பாடல்களும் விளக்குகின்றன.

பாரதி, பராசக்தி, காளி, கண்ணன், விநாயகர் எனத் தெய்வங்களை இனம் காட்டி வேண்டி நின்றாலும், அவை, ஆன்மீகப்பாதைக்குள் முதன்முதலாய் நுழைவோருக்கான முதல் படிநிலையான பாடல்களாகக் கொள்ளலாம்.

உண்மையாகக் கவனித்தால் அதனுடாகவும் அத்வைதக் கருத்துக்கள் உள்ளிருப்பதை அறிய முடியும்.

கண்ணனைப் பல்வேறு உறவுகளின் வழி அனுபவிக்கும் பாரதி, அதையே மக்களுக்கும் கூறுகிறார்.

எல்லா உறவுகளையும் கடவுளாகப் பாருங்கள் என்பதே கண்ணன் பாட்டுக்கள். மற்றும் எல்லா உறவுகளாகவும் கடவுளின் வடிவங்கள் இருக்கின்றன என்பதானதும் அவை.

வேதாந்தப் பாடல்களாகப் பாரதியின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

அவற்றினை முழுமையாகப் பார்க்கும்பொழுது, பாரதி முழுமையும் அத்வைதக் கருத்துக்களை ஏற்காமல் இவ்வுலகம் பொய் எனும் அத்வைதக் கருத்தைச் சிறிது மாற்றித் தானும் விளங்கிக் கொண்டு, மக்களுக்கும் எடுத்துச் சொல்லுகின்றார்.

அதாவது எல்லாமும் பொய் என்பதை ஏற்க முடியாது. கண்களால் தற்பொழுது காண்பது மெய் தானே? அதனாலயே ஏற்போம்.

அதன் பின்புலமானது, பொய் என்பதைப் புரிந்து கொள்வோம் எனும் சிறு மாற்றத்தைத் தம் கொள்கையாகக் கொண்டிருக்கின்றார் என்பதையும் புரிந்து கொள்ள முடிகின்றது.

”வீண்படு பொய்யிலே … நித்தம் விதிதொடர்ந் திடுமோ ?
காண்பதிலே உறுதிகொண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை காண்பது சக்தியாம் … இந்தக் காட்சி நித்தியமாம்.”

எனும் வரிகள் மெய்ப்பிக்கும். அத்வைதத்தைக் காலத்திற்குத் தகத் தம் அறிவிற்கு உணர்ந்தவாறு சிறிது மாற்றி, ஏற்றுக்கொண்டு, பிறருக்கும் தம் பாடல் வழி விளக்கிச் செல்லுகிறார்.

மூடப்பழக்கம் தவிர்க்க வேண்டும். அது ஆன்மீகம் காட்டும் முக்தியை சமூகத்திற்கு வழங்காது என்பதையும் விளக்குகின்றார்.

பாரதியின் ஆன்மீகத் தேடல் ஆன்மீகச் சான்றோர்களின் தேடலைப் போல் ஒருவர் முக்தி பெறுவதற்காக அல்லாமல் முழுச் சமூகமும் முக்தி பெறுவதற்காகச் சிந்தித்து இருக்கின்றார் என அறிய முடிகின்றது.

தனித்துத் தனிமனிதனுக்கான கருத்துக்களைக் கூறுவதற்கு யோசிக்கவில்லை என்பதையும் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

”மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள்!-எத
னூடும்நின் றோங்கும் அறிவென்றே தெய்வமென்
றோதி யறியிரோ?

சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ?-பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ?

ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனும் வேதமெலாம்-என்றும்
ஒன்ரு பிரம முள துண்மை யஃதுன்
உணர்வெனக் கொள்வாயே “ (6)

மகாகவி பாரதியின் ஆன்மீகத் தேடலின் பயன் சமூக மேன்மை ஒன்றே ஆகும்.

சமூகத்தை வழி நடத்தவே ஆன்மீகம். தனி மனித ஒழுக்கமே பெரும் சமூகத்தை முழுமையாக மாற்றும்.

அனைத்து மதங்களிலும் சிறந்தவை இவை என அடையாளப்படுத்த அனைத்து மதக் கருத்துக்களையும் படித்துத் தெளிந்து ஒன்றைச் சிறந்தது என அடையாளம் காட்டுகின்றார் மகாகவி பாரதி.

அதோடு அதை முழுமையாகவும் ஏற்காமல் அதில் சிறு மாற்றத்தை நம் அறிவிற்கு ஏற்றார் போல் மாற்றி நீங்களும் சிந்தியுங்கள் என மக்களிடமே அக்கருத்தை விட்டு விடுகின்றார்.

அவ்வாறு அவர் ஏற்றுக் கொண்ட தத்துவ மரபை, அத்வைத வேதாந்தம் இவ்வுலகத்திற்கு அளித்திருக்கிறது.

அடிக்குறிப்புகள்:

1.இரவிந்திரநாத் தாகூர், ஸ்டாக்ஹோம் நகரில் நோபல் பரிசினைப் பெற்றுக் கொண்டு 1921, மே,26 ஆம் நாள் ஆற்றிய உரை, தமிழில் : பேரா.பழனி இராகுலதாசன்.

2.பாரதியார், வேதாந்தப் பாடல்கள், எண்: 30, நான்

3.மேலது, எண்: 7, தெய்வீகப் பாடல்கள், ஜெயபேரிகை

4.பாரதியார், வசனக்கவிதைகள்-28, காட்சி- முதற்கிளை- இன்பம்-4

5.பாரதியார், அறுபத்தாறு, சுயசரிதை.

6.பாரதியார், அறிவே தெய்வம்.

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
தமிழ்ப் பேராசிரியர்
வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி
ஆவடி, சென்னை – 600062
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com

2 Replies to “மகாகவியின் ஆன்மீகத் தேடல்”

 1. ஓர் அருமையான சிறந்த ஆய்வு கட்டுரை. பாரதியின் அகமும், புறமும் நாம் அறிந்தது தான். கண்ணனையும் பராசக்தியையும் பாடி புகழ்ந்ததை நாம் அறிவோம். ஆயிரம் ஆயிரம் பல கவிதைகளை முன்வைத்து சிறந்த உரையை வழங்கியமைக்கு என் மனதார வாழ்த்து கடமைப்பட்டிருக்கிறேன்.

  ஆனாலும் ஒரு துரதிஷ்டவசமான செய்தி என்னவென்றால்? பாரதியார் தாகூர் தலையில் தூக்கி கொண்டாடி இருக்கிறார். தாகூருக்கு பாரதியைப் பற்றி தெரியாமல் போனது எப்படி என்ற கேள்வியும் எழுகிறது.

  தாகூருடைய படைப்புகளை பாரதியார் மொழிபெயர்ப்பு செய்தார். அதிலும் வங்காள மொழியில் இருந்து காகருடைய கதைகள் தமிழுக்கு கனகச்சிதமாக அறிமுகம் செய்ததை எண்ணி எண்ணி மகிழம்படி உள்ளது.

  அதேபோன்று தாகூரும் மிகச் சிறந்த படைப்பாளி என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அவரும் கடவுள் நம்பிக்கை கொண்டவர். கடவுளை என்றாவது ஒரு நாள் நேரில் கண்டடைய முடியும் என்ற தீர்க்கமான எண்ணம் கொண்டவர். ஆனால் அவருடைய கவிதை கடவுளை கண்டடைந்ததாக பிரகடனப்படுத்துகிறார். அதிலும் குறிப்பாக கீதாஞ்சலி என்கின்ற படைப்பு ரிசாட்சி.

  பேராசிரியர் சந்திரசேகர் அவர்கள் தகுந்த இடங்களில் சரியான அடிக்குறிப்புகளை முன்வைத்து எழுதிய இவ்வாய்வு கட்டுரை உள்ளபடியே மிச்சத்தகுந்தது. அதை ஓரிடத்தில் இப்படியாக பின்வருமாறு பதிவிட்டு இருக்கிறார்.

  அதனை ரவீந்திரநாத் தாகூர் கூறும்பொழுது “உறவுகளையும் அன்பையும் நிலை நிறுத்துவது தான் மனிதனுடைய பணி. நாம் சண்டை போட்டுத் திரியும் மிருகங்கள் அல்லவே, நாம் மனிதர்கள். மனம் உடைய மனிதர்கள். மனம் தானே நம்மை, நம் வாழ்க்கையை வழி நடத்திச் செல்கிறது. நமக்குள் இருக்கும் தான் என்ற அகம் தானே நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கவும் செய்கிறது. அந்த அகம் என்பது தான் நம்மைத் தனிமைப்படுத்தியும் வைத்து விடுகிறது. துன்பத்திற்குள் ஆளாக்குவதும் அதுதானே? “ 1 என்கிறார்.

  அதேபோன்று பாரதியாரின் கவிதைகளின் ஊடே கடவுளை கண்டறிந்த செய்தியை அவர் கவிதையை கொண்டு நிரூபித்திருக்கிறார்.

  காக்கைச் சிறகினிலே நந்தாலா -நின்றன்
  கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
  பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்தலாலா- நின்றன்
  பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
  கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா- நின்றன்
  கீதம் இசைக்குதடா நந்தலாலா
  தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத்
  தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா”

  இந்தக் கவிதை ஒருபுறம்.

  ”வீண்படு பொய்யிலே … நித்தம் விதிதொடர்ந் திடுமோ ?
  காண்பதிலே உறுதிகொண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை காண்பது சக்தியாம் … இந்தக் காட்சி நித்தியமாம்.”

  எனும் வரிகள் மெய்ப்பிக்கும். அத்வைதத்தைக் காலத்திற்குத் தகத் தம் அறிவிற்கு உணர்ந்தவாறு சிறிது மாற்றி, ஏற்றுக்கொண்டு, பிறருக்கும் தம் பாடல் வழி விளக்கிச் செல்லுகிறார்.

  அண்மையில் SSS JAIN COLLEGE ஒன்றிணைத்த இணையவழி கருத்தரங்கில் செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேத வசனம் கல்லூரியின் பேராசிரியர் நண்பர் ரவிச்சந்திரன் அவர்கள் அத்வைதத்தை பற்றி அவ்வளவு அழகாக உரை நிகழ்த்தினார்.

  அதன்பிறகு துவைதம், அத்வைதம் குறித்தான ஒரு புரிதல் ஓரளவு உள்வாங்கப்பட்டவனாக உணர்கிறேன். பேராசிரியர் சந்திரசேகர் அவர்கள் அத்வேதத்தில் மிகச் சிறந்த புலமைப் பெற்ற ஒரு அறிஞர் என்பதையும் இங்கு நினைவு கூறத்தக்கது.

  பிரபஞ்ச மீட்சியை குறித்து இந்த தத்துவங்கள் முன்வைக்கும் கருத்துக்களை மிக ஆழமாக பாரதியார் கவிதை கொண்டு அணுகியிருக்கிறார்.

  எழுத்து உலகில் தன்னை முழு ஈடுபாட்டோடு இணைத்துக் கொண்ட பேராசிரியர் சந்திரசேகர் அவர்கள் எல்லாவற்றையும் ஒரு கோட்பாட்டோடு அணுகி பார்க்கும் முயற்சி வியப்பை அளிக்கிறது.

  மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அய்யா

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.