அன்று வெள்ளிக்கிழமை.
என் சொந்த ஊர் திருத்தணிக்கு செல்வதற்காக, பூவிருந்தமல்லி பேருந்து நிலையத்தில் பேருந்திற்காகக் காத்திருந்தேன்.
எனக்கு முன்பாக பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பலர் ஏறிவிட்டார்கள். இருக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டன.
பேருந்து கூட்டமாக இருந்தது. நான் கஷ்டப்பட்டு நின்று கொண்டே சென்றேன். அடுத்தடுத்து நிறுத்தங்களில், கட்டிட வேலை செய்யும் கூலி தொழிலாளர்கள் ஏறினார்கள்.
அவர்களை பார்த்தவுடன் மாணவர்கள் எழுந்து அவர்களுக்கு உட்காருவதற்கு இருக்கை தந்து விட்டு, நின்று கொண்டே பயணித்தார்கள்.
நான் ஆச்சரியமடைந்தேன். இதைப் பற்றி மாணவர்களிடம் விசாரித்தேன்.
“நாங்க ஸ்கூல்ல எட்டு மணி நேரம் உட்கார்ந்துகிட்டே தான் பாடம் படிக்கிறோம். ஆனா, இவங்க ஒரு நாள் பூரா கஷ்டப்பட்டு, வெயில் மழைனு பார்க்காம நின்னுக்கிட்டே வேலை செய்றாங்க. அவங்க களைப்பா இருப்பாங்க. அதனால அவங்க வீட்டுக்கு போகும்போது, ரெஸ்ட் எடுத்துக்கிட்டு போகட்டும்னு, நாங்க எழும்பி இடம் கொடுத்தோம்.”
கேட்ட எனக்கு அவர்களைப் பார்க்கப் பெருமையாக இருந்தது.
எம்.மனோஜ் குமார்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!