மாறனேரி சிவகாசியிலிருந்து அச்சந்தவிழ்த்தான் செல்லும் சாலையில் சிவகாசி வட்டத்து அதே உள்வட்டத்தில் அமைந்துள்ளது. கல்வெட்டுகளில் மாறனேரி, ‘கருநிலக்குடி நாட்டு மாறமங்கலத்து சுந்தரபாண்டிய நல்லூர்’ எனக் குறிப்பிடப்படுகின்றது. இங்குள்ள சிவன் கோயில் பிற்காலப் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாகும். கல்வெட்டுகளில் இறைவன் சுந்;தரபாண்டிய ஈசுவரமுடைய நாயனார் எனக் குறிப்பிடப்படுகின்றார்.
சிவன்கோயில் கருவறை, அரைமண்டபம் என்ற முறையான கட்டடக்கலை அமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. முதலாம் சடாவர்மன் வீரபாண்டியன் கல்வெட்டு: இம்மன்னன் மூன்று மாநிலத்தினை நந்தவனம் அமைப்பதற்காக வழங்கியதைத் தெரிவிக்கின்றது. மேலும் திருமடை விளாகமாக முப்பது மாநிலத்தினை வழங்கி மடம் செயல்படுவதற்கு பள்ளியறை நாச்சியார்க்கும் பூசை நடைபெறுவதற்கும் வழிவகை செய்துள்ளான்.
மாறனேரி கிணற்றுத் துலாக்கல்லில் கி.பி.13-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டொன்று காணப்படுகின்றது. அக்கல்வெட்டு ‘மாறமங்கலத்தைச்’ சேர்ந்த கொல்லன் ‘ஐயூரன் கொற்றன்’ என்பவன் அக்கிணற்றிற்குச் சொந்தக்காரன் என்று கூறப்படுகின்றது. இக்கிணற்றிற்கருகில் உள்ள மண்மேட்டில் சோழர், பாண்டியர், நாயக்கர் காலத்தைச் சேர்ந்த காசுகள் சேகரிக்கப்பட்டுள்ளன என்பதும் காணத்தக்கது.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!