மீனவனின் குமுறல் – கவிதை

கடலில் செத்துப் போகும்
மீனவனுக்காகவும்
கரையில் தினம் தினம்
செத்துப் பிழைக்கும்
மீனவனுக்காகவும்
குரல் கொடுக்கும் ஒரு
மீனவனின் குமுறல் இது…

இராவணன் ஆண்ட
இலங்காபுரியே!
இப்போதைய இலங்கையே!

உங்கள் துப்பாக்கிகளின்
தோட்டாக்கள் எங்கள்
மார்புக் கூட்டைப் பிளந்து
இரத்தம் பருகக் காத்துக்
கிடக்கின்றன…

உங்கள் நிலத்தின்
சிறைச்சாலைக் கம்பிகள்
நாங்கள் எண்ணுவதற்கென்றே
வரிசை கட்டிக்கொண்டு
நிற்கின்றன…

உங்கள் ராஜ்ஜியத்தை
இன்னும் ராட்சசக்குலம்தான்
ஆண்டு வருகிறதா?

அன்று எங்கள் சீதையை
சிறைபிடித்தான் உங்கள்
இராவணன்…

அன்று முதல் இன்றுவரை
சிறை பிடிப்பது நீங்களாகவும்
சிறைப்படுவது
நாங்களாகவும்தான் இருந்து
கொண்டிருக்கிறோம்…

தமிழீழ இனப் படுகொலையும்
தமிழ் மீனவப் படுகொலையும்
காட்சி மாறாமல் அப்படியே
அரங்கேற்றம் நடந்து
கொண்டுதான் இருக்கின்றன
உங்கள் நாட்டில்…

எம்மக்களே!
நீங்கள் சுவைத்து
உண்ணும் மீனில்
உப்புக்கரிக்கிறதென்றால்
அதில் கடல் உப்புடன் எங்கள்
கண்ணீரின் உப்பும்
கலந்திருக்கக் கூடும்…

இயற்கை மட்டும் எங்களை
சும்மா விடுகிறதா என்ன?
தாய் என்றதால்தான்
தாவி அணைத்தாளோ
கடல் எம் உயிர்களை!

ஊழிப்பெருங்காற்றென வீசி
ஆழிப் பேரலைகளென வந்து
ஆழ்கடலுக்குள் இழுத்துச்
சென்றாளோ எம் உயிர்களை…

ஒவ்வோர் ஆண்டும்
அந்த சுனாமி நாளில்
தூக்கமில்லாத எங்கள்
துக்கங்களெல்லாம் கதறி
அழுகின்றனவே!
அந்த அழுகுரல்கள் உனக்குக்
கேட்கவில்லையா? இல்லை
உன் பேரிரைச்சலலுக்குள்
அந்த அழுகுரல்களையும்
இழுத்துச் சென்றுவிட்டாயா?

மழையில் நனைந்த
துணிகளையெல்லாம் வெயில் துவட்டிக்
காய வைக்கலாம்…
மனம் கொத்தித் தின்ற
பறவைக்கெல்லாம் கணம்
மருந்து போட்டுக் காயம்
ஆற வைக்கலாம்…

ஆறாத வடுக்களாய் நிற்கும்
எம்வாரிசுகளுக்கு யார்
ஆறுதல் சொல்லக் கூடும்?
நாங்கள் கடவுளெனக்
கருதும் கவர்மெண்ட் அதற்கு
என்ன செய்யக் கூடும்?

எதிர்பார்ப்புடன் காத்திருக்கும்
ஏழை மீனவன்…

ரோகிணி கனகராஜ்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.