முடிவில் ஒரு திருப்பம்!

முடிவில் ஒரு திருப்பம்!

விஜயனுக்கு தன்னுடைய மனைவியின் தங்கை கௌரிக்கு, திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நீண்ட நாளாக ஒரு நல்ல எண்ணம் இருந்தது.

ஆனால் என்ன செய்வது? அவனுடைய மாமியார், கௌரிக்கு எந்த ஒரு நகையும் பணமும் சேர்த்து வைக்கவில்லை.

மிகவும் ஏழ்மையான குடும்பம். வசிப்பது வாடகை வீடு ! அன்றாட கூலி வேலைக்குச் சென்று வரும் வருவாய் மூலம் குடும்பம் நடத்தி வருகிறார்கள்.

விஜயனுக்கு முனீஸ்வரன் முகநூல் மூலம் பழக்கம். முனீஸ்வரனின் பழக்க வழக்கம் விஜயனுக்கு மிகவும் பிடித்திருந்தது. முனீஸ்வரனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. மிகவும் அன்பாகவும் பாசமாகவும் பேசுவான்.

சொந்த ஊர் கோவில்பட்டி. வீட்டிற்கு ஒரே பையன். அவனுக்கு ஒரு தங்கச்சி இருக்கிறாள். அவன் காங்கேயத்தில் ஒரு கடையில் டெலிவரி பாயாக மாதம் 12,000 சம்பளத்துடன் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். விஜயனுடன் மிகவும் நட்பாக பழகி வந்து கொண்டிருந்தான் முனீஸ்வரன்.

முனீஸ்வரன் விஜயனுக்கு போனில் வழக்கம் போல அழைப்பை விடுத்தான்!

“ஹலோ என்ன பண்றீங்கணா?”

“இப்பதான் என் வேலையை முடிச்சுட்டு வந்தேன்!”

“சாப்பிட்டீங்களாணா?”

“சாப்பிட்டாச்சு தம்பி! நீ என்ன பண்ற?”

“நானும் ரூம்ல தான் இருக்கேன்!”

“ஒ.கே.யா தம்பி! அண்ணே உன்கிட்ட ஒன்னு கேட்பேன்? ஏதும் நினைச்சுக்காத!”

“கேளுங்கணா? உங்களுக்கு இல்லாத உரிமையா?”

தன்னுடைய கொழுந்தியாள் கௌரியைப் பற்றி கூறி அவளை திருமணம் செய்து கொள்ள சம்மதமா? எனக் கேட்டான். முனீஸ்வரனுக்கு உடனே பதில் சொல்ல சற்று தயக்கமாக இருந்தது.

பழகிய சில நாட்களிலேயே விஜயன் இப்படி கேட்கவும் முனீஸ்வரனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வீட்டில் தன்னுடைய அம்மாவிடம் இதைப்பற்றி பேசிவிட்டு சொல்கிறேன் என்றான் முனீஸ்வரன்.

முனீஸ்வரன் தன்னுடைய அம்மாவிடம் கௌரி மற்றும் திருமணம் பற்றி பேசியபோது அவர் சம்மதம் தெரிவித்தார். அம்மாவின் சம்மதத்தை விஜயனுக்கு தெரியப்படுத்தினான் முனீஸ்வரன்.

விஜயனுக்கு ஒரே மகிழ்ச்சி. பின்பு கௌரியின் வீட்டிலும் முனீஸ்வரன் வீட்டிலும் பெரியர்வர்கள் ஒருவருக்கொருவர் தொலைபேசி மூலம் பேசிக் கொண்டார்கள்.

“எங்களுக்கு வீடு கட்டியதால் கொஞ்சம் கடன் இருக்கிறது. இப்போது பேசி முடித்து கொள்வோம். வருகிற மாசி மாதம் உங்களுடைய வீட்டிற்கு வந்து பெண் பார்க்க வருகிறோம். ஒருவருடம் கழித்து பிறகு திருமணம் முடித்து வைக்கலாம்” என்று முனீஸ்வரன் அம்மா கூறினார்.

உடனே கௌரியின் வீட்டிலிருந்தும் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார்கள். ஏனென்றால் கௌரிக்கு இப்போது தான் 17 வயது நடந்து கொண்டிருக்கிறது.

கௌரியின் புகைப்படத்தை முனீஸ்வரன் வாட்சப்பிலும் முனீஸ்வரன் புகைப்படத்தை கௌரியின் வாட்சப்பிலும் அனுப்பி வைத்தார்கள். இருவருக்கும் பிடித்து விட்டது. ஒருவருக்கொருவர் தொலைபேசி எண்ணையும் பகிர்ந்து கொண்டனர். தினமும் இருவரும் போனில் பேசிக்கொள்வார்கள்.

தினமும் விஜயனும் முனீஸ்வரனும் போனில் பேசிக் கொள்வது வழக்கம். அதேபோல முனீஸ்வரன் ஒருநாள் போனில் அழைப்பு விடுத்தான். விஜயன் போனை எடுத்து பேசத் தொடங்கினான்.

“ஹலோ சொல்லியா தம்பி! நல்லா இருக்கியா?”

“நல்லா இருக்கேன்ணா”

“வீட்ல அண்ணி, தம்பி, பாப்பா நல்லா இருக்காங்களா?”

“நல்லா இருக்காங்கய்யா நல்லா இருக்காங்க!”

“அடுத்த மாசம் 5-ம் தேதி வெள்ளிக்கிழமை உங்க வீட்டுக்கு பொண்ணு பார்க்க வர்றோம்”

“ரொம்ப நல்லது! சந்தோசம் வாங்க தம்பி!”

“அண்ணா எங்ககூட எங்க அக்காவும் வராங்கணா”

“வரட்டும் தம்பி குடும்பத்தோடு எல்லாம் வந்தா தானே நல்லா இருக்கும்!”

“அவங்களும் எங்க குடும்பத்துல ஒருத்தவங்களா தான் நாங்க நினைக்கிறோம்”

“அக்கா வர்றதுனால என்னப்பா தப்பு? வரட்டும் தம்பி. பெரியம்மா மகளா தம்பி?” என்று விஜயன் கேட்டவுடன் முனீஸ்வரன் தயக்கத்துடன் கூறத் தொடங்கினான்.

“இல்லணா, அந்த அண்ணா எனக்கு முகநூல் வழியா ரொம்ப வருஷமா பழக்கம். எங்க வீட்டில ஏதாவது விசேஷம் என்றால் வீட்டுக்கு வருவாங்க! நல்லா பழகுவாங்க! பாசமாக இருப்பாங்க. அம்மாவுக்கும் தெரியும்.

அந்த அண்ணா சமீபத்துல திருநங்கையா மாறிட்டாங்க. ஆனால் அவங்க ரோட்ல பிச்சை எடுக்கிற மாதிரி எந்த வேலையும் செய்யவில்லை. அவங்க நர்சிங் படிச்சி முடிச்சு இருக்காங்க.

ஒரு தனியார் மருத்துவமனையில் திருச்சியில் நர்ஸ் வேலை பார்த்துட்டு இருக்காங்க. அவங்கதான் எங்க அக்கா. அவங்களையும் நான் பொண்ணு பார்க்க வரும்போது கூட்டிட்டு வருவேன்!” என்று கூறிவிட்டு செல்போனை தன்னுடைய அம்மாவிடம் கொடுத்தான்.

அவனுடைய அம்மாவும் “எல்லாம் உண்மைதான் தம்பி! நிக்கிதா எனக்கு ஒரு மூத்த மகள் மாதிரி எல்லா விசேஷத்துலயும் அவ இல்லாம நாங்க நடத்த மாட்டோம். அவ கிட்ட இந்த விஷயத்தை சொல்லாம நாங்க பொண்ணு பாக்க போனோம்னு தெரிஞ்சா அவள் ரொம்ப மனசு வேதனைப்படுவாள். அதனால அவளையும் நாங்க அழைச்சிட்டு வருவோம். உங்க வீட்டில் கேட்டு சொல்லுங்க” என்று கூறினார்.

“சரிங்க அம்மா நான் கேட்டு சொல்றேன்” என்று விஜயன் கூறினான்.

இவ்வளவு நாளாக தன்னிடம் பழகிய முனீஸ்வரன் இந்த விஷயத்தை தற்போது சொல்லும் போது விஜயனுக்கு கொஞ்சம் மனசு நெருடலாக இருந்தது.

முனீஸ்வரனும் அவனுடைய அம்மாவும் கூறியதைப் பற்றி தன்னுடைய குடும்பத்தார்களிடம் கூறினான் விஜயன். அவர்களும் சற்று தயங்கி பின் ஏற்று கொண்டனர்.

இருந்தாலும் அவர்களின் வீட்டில் மூத்தவராக இருக்கும் விஜயனுடைய மாமியாரின் அம்மா சுப்புலெட்சுமி பாட்டியிடம் இதைப் பற்றி கேட்டார்கள்.

“இந்த மாதிரி திருநங்கையா இருக்கறவங்கள கூட்டிட்டு வர வேண்டாம்! அவங்க வீட்டுக்கு வரும்போது, நாலு பேரு பார்த்தால் நம்ம குடும்பத்துக்கு தான் கொஞ்சம் சங்கடமாய் இருக்கும். அசிங்கமாக பேசுவாங்க தம்பி!” என்று பாட்டி மறுப்பு தெரிவித்தார்.

பாட்டி கூறியதை எண்ணி விஜயனுக்கு ஒரே சங்கடமாகவே இருந்தது. என்ன செய்வதென்றே தெரியவில்லை! ‘நான் எடுத்த முடிவில் ஏன் இப்படி ஒரு திருப்பம் வந்தது?’ என்று அவன் மனம் நினைத்து வருந்திக் கொண்டே இருந்தது.

பெ.சிவக்குமார்
பி.எட் (வேதியியல்) முதலாம் ஆண்டு
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம்
Cell- 9361723667
sivakumarpandi049@gmail.com