முட்டைகோஸ் குருமா என்பது சுவை மிகுந்த தொட்டுக்கறி ஆகும். முட்டைகோஸை விரும்பாதவர்கள்கூட இத்தொட்டுக்கறியை விரும்பி உண்பர்.
இதனை சப்பாத்தி, இட்லி, தோசை ஆகியவற்றிற்கு தொட்டுக் கொள்ள மிகவும் பொருத்தமாக இருக்கும்.
இதனைத் தயார் செய்யக் குறைந்த நேரமே ஆகும்.
பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் இதனை விரும்பி உண்பர்.
இனி சுவையான முட்டைகோஸ் குருமா செய்யும் முறை பற்றிப்
பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முட்டைகோஸ் – 200 கிராம்
பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)
தக்காளி – 2 எண்ணம் (பெரியது)
வெள்ளைப்பூண்டு – 2 பற்கள் (பெரியது)
இஞ்சி – 1/2 இன்ச் அளவு
மிளகாய்ப் பொடி – 1 டீஸ்பூன்
மல்லிப் பொடி – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1 எண்ணம்
மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
நல்ல எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கீற்று
கொத்தமல்லி இலை – 1 கொத்து
மசாலா தயார் செய்ய
தேங்காய் கீற்று (1 இன்ச் கனஅளவு) – 4 டேபிள் ஸ்பூன்
பட்டை (1 இன்ச் அளவு) – 2 எண்ணம்
கிராம்பு – 3 எண்ணம்
பச்சை மிளகாய் – 1 எண்ணம் (பெரியது)
புதினா இலை – 2 டேபிள் ஸ்பூன் அளவு
பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
செய்முறை
முட்டைக்கோஸை 1/2 இன்ச் கனஅளவுக்கு பொடியாக வெட்டிக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் மெல்லிதாக வெட்டிக் கொள்ளவும்.
தக்காளியை அலசி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
இஞ்சி, வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி விழுதாக்கிக் கொள்ளவும்.
கொத்தமல்லி இலையை அலசி பொடியாக வெட்டிக் கொள்ளவும்.
மிக்ஸியில் தேங்காய் துண்டு, பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய், புதினா இலை, பெருஞ்சீரகம், மிளகு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து விழுதாக்கிக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.
அதனுடன் பெரிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடிப்பதம் வந்ததும் இஞ்சி, பூண்டு விழுதினைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதனுடன் நறுக்கிய தக்காளி மற்றும் தேவையான உப்பினைச் சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும்.
பின்னர் அதனுடன் மிளகாய் வற்றல் பொடி, மல்லிப் பொடி மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
அதில் நறுக்கிய முட்டைக்கோஸ் சேர்த்து வதக்கவும்.
45 விநாடிகள் கழித்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதினைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பின்னர் அதனுடன் தேவையான தண்ணீர் சேர்த்து உப்பினைச் சரி பார்த்து குக்கரை மூடி மிதமான தீயில் இரண்டு விசில் வைத்து இறக்கவும்.
குக்கரின் ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து அதில் நறுக்கிய கொத்தமல்லி இலையைச் சேர்க்கவும்.
சுவையான முட்டைக்கோஸ் குருமா தயார்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் மசாலாவிற்கு பச்சை மிளகாய்க்குப் பதில் மிளகாய் வற்றல் சேர்த்து மசாலா தயார் செய்யலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!