முட்டைகோஸ்

முட்டைகோஸ் – மருத்துவ பயன்கள்

முட்டைகோஸ் அதன் சிறப்பான மருத்துவ குணங்களுக்காக காய்கறிகளில் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது.

புதிதாகப் பறிக்கப்பட்ட கோஸில் 90.2 சதவீதம் நீரும், 1.8 சதவீதம் புரதமும், 6.3 சதவீதம் கார்போஹைட்ரேட்டும், 0.1 சதவீதம் கொழுப்பும், 0.6 சதவீதம் தாதுச்சத்தும், 0.03 சதவீதம் கால்சியமும், 0.05 சதவீதம் பாஸ்பரச் சத்தும் அடங்கியுள்ளன.

ஒவ்வொரு 100 கிராம் முட்டைகோஸிலும் 2000 யூனிட்டுகள் வைட்டமின் ‘ஏ’யும், 60 மைக்ரோ கிராம் வைட்டமின் ‘பி’யும், 0.04 மில்லி கிராம் நியாசின் மற்றும் 124 மில்லி கிராம் வைட்டமின் ‘சி’யும் நிறைந்துள்ளன.

வாயு மற்றும் இதய சம்பந்தப்பட்ட கோளாறுகள், கருவுற்றிருக்கும் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் போன்றவற்றிற்கு கோஸ் நல்ல மருந்தாக அமைகிறது.

வயது வந்த ஒருவருக்கு நாள் ஒன்றுக்குத் தேவைப்படும் வைட்டமின் ‘சி’யை 250 கிராம் முட்டைகோஸ் வழங்கும் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இரும்புச்சத்து அடங்கியுள்ள முட்டை கோஸ் ரத்த சோகை உள்ளவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.

இன்று உடல் எடையைக் குறைக்கவும், பருமனைக் குறைக்கவும், படாத பாடுபடுகிறார்கள். இவர்கள் முட்டைகோஸை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் எவ்வித சிரமுமின்றி ஊளைச்சதையையும், எடையையும் குறைக்கலாம்.

இதில் அடங்கியிருக்கும் ‘டார்டாரிக்’ அமிலம் (Tartaric Acid) நம் உடலில் சர்க்கரைச்சத்தும், கார்போஹைட்ரேட்டும் கொழுப்பாக மாறுவதைத் தடுத்து நிறுத்துகிறது.

கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்போர்டு மருத்துவப் பள்ளியிலுள்ள டாக்டர் கார்நாத்சானேயும் அவரது சக மருத்துவர்களும் ‘பெப்டிக் அல்சர்’ சிகிச்சையில் வைட்டமின் ‘யு’ மிகச்சிறந்த அல்சர் நோய் எதிர்ப்புக் காரணியாகச் செயல்படுகிறது என்பதைக் கண்டுபிடித்திருக்கின்றனர்.

முட்டைகோஸிலுள்ள இந்த அல்சர் நோய் எதிர்ப்புக் காரணி அதைச் சமைப்பதால் அழிந்து போய் விடுகிறது.

முட்டைகோஸின் வெளிப்புற பச்சைநிற இலைகளில் வைட்டமின் ‘ஏ’ நிறைந்திருக்கிறது. எனவே முட்டைகோஸிலுள்ள வெளிப்புற இலைகளை அகற்றி எறிதலைத் தவிர்க்க வேண்டும்.

இரும்புச்சத்தின் சதவிகிதமும் இந்த இலைகளில் அதிகம் காணப்படுகிறது.

முட்டைகோஸை சமைக்காமல் பச்சையாக உண்ணுவதே சாலச் சிறந்தது.

முட்டை கோஸ் இலைகளை காயத்தின் மீது வைத்துக் கட்டினால் குணம் கிடைக்கும்.

முட்டைகோஸ் சாற்றினைத் தண்ணீருடன் கலந்து வாய் கொப்பளிக்க தொண்டை சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998